மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர்.கே. நடிக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் வடபழனி கமலா திரையரங்கில் நேற்று மாலை சிறப்பாக நடந்தது.
பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ஆர்.கே.யுடன் நாம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாலே அவர் வழிக்கு நம்மைக் கொண்டு வந்து விடுவார். அந்த அளவுக்கு ஆளுமைத் தன்மை கொண்டவர் அவர். அவரை நான் என்னுடைய படத்தில்தான் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினேன். நன்றி கூறவோ இல்லை பழிவாங்கவோ என்று தெரியவில்லை. என்னை இந்தப் படத்தில் அவர் நடிகராக்கிவிட்டார்.
அப்பப்பா… நடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? நடிக்கப் போன பிறகுதான் உலகத்திலேயே மகா கஷ்டமான வேலை நடிப்பதுதான் என்று தெரிந்தது. 1000 கண்கள் நம்மை உற்றுப் பார்க்கும்போது நடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? படப்பிடிப்புக்குப் போய் தினமும் மாலையில் களைத்து விடுவேன். ஜுரம், தலைவலி எல்லாம் வருவது போலிருக்கும்.
இன்று சினிமா அபாய கட்டத்தில் இருக்கிறது. இப்போதுதான் தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் யார் யாரோ எல்லாம் படத்துக்குத் தடை வாங்க முடிகிறது.
இன்று பத்தாயிரம் வக்கீல்கள் நீதிபதியாக மாறுகிற அபாயம் இருக்கிறது. வெளிவரும் படத்துக்குத் யார் வேண்டுமானாலும் தடை பெறுகிற நிலை உள்ளது.
இந்நிலையில் படம் வெளியாகும் முன்பே டிக்கெட் விற்றிருக்கிற இந்த ‘ஹிட் பாக்ஸ்’ விநியோகஸ்தர்கள் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துக்கள்…” என்றார்.