full screen background image

“நயன்தாராவை நினைத்துப் பார்க்க நேரமில்லை..” – பிரபுதேவா பளீச் பதில்..!

“நயன்தாராவை நினைத்துப் பார்க்க நேரமில்லை..” – பிரபுதேவா பளீச் பதில்..!

ரொம்ப நாள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர், இயக்குநர் பிரபுதேவா. நேற்று காலை எழும்பூர் ரேடியேஷன் புளூ ஹோட்டலில் அவருக்காக 11 மணியில் இருந்து காத்திருக்க 12.15 மணிக்குத்தான் வந்தார்.

dcim (3)

தன்னை 12.30 மணிக்குத்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வரச் சொன்னார்கள் என்கிற உண்மையையும் முதலிலேயே சொல்லிவிட்டதால் கூலாகிவிட்டது மீடியா.

பிரபுதேவா தற்போது ஹிந்தியில் இயக்கி வரும் ‘ஆக்சன் ஜாக்சன்’ என்னும் திரைப்படத்தின் பிரஸ்மீட் போல இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துவக்கத்தில் தன்னுடைய தற்போதை கலைப் பயணம் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துக் கொண்ட பிரபுதேவா அடுத்தடுத்து கேள்விகளை எதிர்கொண்டார்.

“நான் இப்போது அஜய் தேவ்கானை வைத்து, ‘ஆக்சன் ஜாக்சன்’  என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறேன். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு பாடல் காட்சி பாக்கியிருக்கு. அதுக்காக ஆஸ்திரியா போகப் போறோம்.

அடுத்து அக்சய்குமார் நடிப்பில் ‘சிங் இஸ் பிளிங்க்’ என்ற இந்தி படத்தை இயக்கப் போகிறேன். இதன் பின்பு ‘ஏபிசிடி-பாகம்-2’ இந்தி படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தில் புதிய இளைஞர்கள் என்னுடன் இணைந்து நடிக்கப் போகிறார்கள். அதற்காக, உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன்.

தமிழில் இருந்துதான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். அதனால் தமிழை மறக்க மாட்டேன். மீண்டும் எப்போது தமிழ்ப் படத்தை இயக்குவேன் என்று தெரியவில்லை. தமிழ் படங்களில் நடிக்கவும், இயக்கம் செய்யவும் ஆசையாகத்தான் இருக்கு. பட நிறுவனத்தைத் துவக்கி புதிய படங்களைத் தயாரிக்கவும் எண்ணம் இருக்கு. விரைவில் இது நிறைவேறுமென்று நம்புகிறேன்.

தமிழ்ப் படங்கள் டெக்னிக்கலாகவும், கதை விஷயத்திலும் ரொம்ப உயர்ந்திருக்கு. தமிழ்ப் படங்களை பாலிவுட்டில் நிறையவே கவனித்து வருகிறார்கள்.

நான் அதிக சம்பளம் வாங்குவதில் எனக்கு சந்தோஷம்தான். ஆனால், சம்பளத்தை பொருத்தவரை எனக்கு அப்பா, தாத்தா எல்லாம் இந்தியாவில் இருக்கிறார்கள். என்னைவிட அதிக சம்பளம் வாங்குகிற டைரக்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சோனாக்சி சின்ஹாவை தொடர்ந்து மூன்று படங்களில் ஹீரோயினாக ஆக்கியதற்கு விசேஷமான காரணம் எதுவுமில்லை. அதுவாக நடந்தது. சோனாக்சி நான் இயக்கிய ‘ரவுடி ரத்தோர்’, ‘ஆர்.ராஜ்குமார்’ ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்தார். அடுத்து நான் தற்போது இயக்கி வரும் ‘ஆக்சன் ஜாக்சன்’  படத்திலும் நடிக்கிறார். இது தற்செயலாக அமைந்ததுதான்.

என்னுடைய நடனம் எல்லா ஹீரோயின்களுக்கும் பிடிப்பதால், என்னையும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்குப் பிடித்திருக்கலாம். நான் இயக்கத்தில் பிஸியாக இருந்தாலும் நடனத்தைவிட்டுவிட மாட்டேன். டான்ஸ் மாஸ்டராக பணியாற்றத்தான் எனக்கு பெரும் விருப்பம். ‘ஐ’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இயக்குனர் ஷங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க பிரபு, அதான் உங்களைக் கூப்பிடலை’ என்று சொன்னார். ‘கூப்பிட்டிருந்தால்.. உங்க படத்துக்காக அட்ஜஸ்ட் பண்ணிட்டு ஓடி வந்திருப்பேனே..’ என்று சொன்னேன். பட்.. அந்தப் படம் மிஸ்ஸானதுல எனக்கும் ரொம்ப வருத்தம்தான்.

ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குனராக இருக்கணும்னுதான் ஆசைப்படறேன். விருது வாங்கற மாதிரியான படங்களை எடுக்க எனக்கு ஆசையில்லை. பெரிய பட்ஜெட்டில் படங்களை இயக்க ஒப்புக்கொள்ளும்போது எனக்கு பொறுப்பு அதிகமாகி விடுகிறது. என்னை நம்பி 90 கோடி, 100 கோடி என்று முதலீடு செய்கிறார்கள். அதை நினைத்துப் பார்க்கும்போது, சந்தோஷத்தைவிட பயம்தான் அதிகமாக வருகிறது.

‘களவாடிய பொழுதுகள்’ படம் ஏன் இன்னமும் ரிலீஸாகலைன்னு எனக்கும் தெரியலை.. இது எனக்கும் ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. எப்போது வரும்னும் தெரியலை…” என்று பல கேள்விகளுக்கும் பதில் சொன்னார் பிரபுதேவா.

நயன்தாராவை பற்றி கேட்காமல் இருக்க முடியுமா..?

“நயன்தாராவை இப்போதும் நினைத்துப் பார்க்கிறீர்களா…?” என்று பட்டென்று எழுந்த கேள்விக்கு எந்த அதிர்ச்சி ரியாக்சனும் காட்டாமல், “பழைய சம்பவங்களை நினைத்துப் பார்க்க எனக்கு இப்போ நேரமில்லை. இப்போ நான் தனிமைல இருக்கிறத பத்தியும் நான் கவலைப்படலை. என் வாழ்க்கையில், இன்னொரு திருமணமும் கிடையாது. எனக்கு சினிமாவும், என் குழந்தைகளும்தான் இப்போது ரொம்ப முக்கியமா நினைக்கிறேன்.. வேறு எதைப் பற்றியும் நான் சிந்திப்பதில்லை…” என்றார் பிரபுதேவா..!

ஓகே.. இதுதான் எல்லாருக்கும் நல்லது. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப் போவது நன்மையாக இருக்கட்டும்..!

Our Score