full screen background image

“தமிழ்ச் சினிமாவில் அழகான ஆண், இயக்குநர் ராம் மட்டுமே…” – இயக்குநர் மிஷ்கினின் பேச்சு..! 

“தமிழ்ச் சினிமாவில் அழகான ஆண், இயக்குநர் ராம் மட்டுமே…” – இயக்குநர் மிஷ்கினின் பேச்சு..! 

மனிதனின் வாழ்க்கையில் ‘கத்தி’யின் கதாபாத்திரம் என்ன..? மனிதனின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில்தான் ‘கத்தி’ உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்ற செயல்களுக்கும்தான்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், நாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாத ‘கத்தி’யின் மறுபுறம்  இருக்கிறது. அதுதான் சிகை அலங்கார கலைஞர்களின்  ‘சவரக்கத்தி’.

அந்த ‘சவரக்கத்தி’யை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம்தான், மிஷ்கின் கதை எழுதி, அவருடைய ‘லோன் உல்ப் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ‘சவரக்கத்தி’ திரைப்படம்.

savarakkathi-poster-1

மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவரும், அவருடைய தம்பியுமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் இயக்குநர் ராம் மற்றும் பூர்ணா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க, முழுக்க நகைச்சுவை படமாக உருவெடுத்து இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

savarakkathi-audio-function-stills-41

விமரிசையாக  நடைபெற்ற இந்த டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் நாசர், இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், இயக்குநர் சசி, நடிகர்கள் பிரசன்னா, செல்வா, எழுத்தாளர்கள் எஸ்.வி.ஆர்., தமிழச்சி தங்கப்பாண்டியன், மருது, தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், நடிகர் வின்சென்ட் செல்வா, தயாரிப்பாளர் ரகுநந்தன், எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் ‘சவரக்த்தி’ படக் குழுவினரான தயாரிப்பாளர் – எழுத்தாளர் மிஷ்கின், இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா, ராம் – பூர்ணா, ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் இசையமைப்பாளர் அரொல் கொரெலி  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

savarakkathi-audio-function-stills-36   

“ஞானத்  திமிர்தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலைஞன் மிஷ்கின். அவருடைய படங்கள் அனைத்தும் நம் மனதில் ஆழமாக பதியும்படிதான் இருக்கும். அந்த வகையில் இந்த ‘சவரக்கத்தி’ திரைப்படமும் மிஷ்கினின் அடுத்த ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர். 

savarakkathi-audio-function-stills-34

“பொதுவாகவே இரண்டு இடங்களில் உலக அரசியல் பற்றியும், உலக செய்தியை பற்றியும் காரசாரமாக விவாதிப்பார்கள். ஒன்று ஐ.நா.சபை; மற்றொன்று முடி திருத்தகம். இப்படிப்பட்ட ஒரு தனித்துவமான கதைக் களம், எப்படி மிஷ்கினின் சிந்தனையில் உதயமானது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது.

இயக்குநர்களை  இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை… ஆனால் இரண்டு இயக்குநர் சிகரங்களை வைத்து ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கி இருக்கும் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கும், ஒட்டு மொத்த ‘சவரக்கத்தி’ படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்…” என்று வாழ்த்தினார் இயக்குநர் கே.பாக்யராஜ். 

savarakkathi-audio-function-stills-03

இறுதியில் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பேசும்போது, “தம்பிக்கு ஏதாவது செய்யிடா’ என்று என் அம்மாவும், அப்பாவும் கேட்டுக் கொண்டதால் தம்பியை இயக்குநராக்கி அந்தப் படத்தை நானே தயாரித்திருக்கிறேன்.

நான் என்னுடைய சிறு வயதில் பார்த்த ‘பிச்சை’ என்னும் சிகை அலங்கார கலைஞரின் வாழ்க்கைக் கதைதான் இந்த ‘சவரக்கத்தி’.

இந்த ‘சவரக்கத்தி’,  ராம், பூர்ணா மற்றும் நான் என எங்களுடைய மூன்று பேரின் ஒரு நாளின் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான பரபரப்பான ஓட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை.

என்னுடைய ஐந்து வயதில் நான் சந்தித்த அந்த நாவிதர் பிச்சையை ஒரு தத்துவ ஞானி என்றே அப்போதெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். பாக்யராஜ் ஸார் சொன்னதுபோல அப்போதெல்லாம் உலக விஷயங்கள் விவாதிக்கப்படும் இடமாக சலூன் கடைகள்தான் இருக்கும்.

நம்மூரில் மட்டுமா என்று யோசித்தேன். ஒரு முறை அமெரிக்கா சென்றபொழுது முடி வெட்டிக் கொள்ளச் சென்றேன். அங்கேயும் இப்படித்தான் எதையாவது பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்த பிச்சை கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டு வர முடிவு செய்தேன். அதுதான் ராம்.  எனது தாயின் சாயலில் சுபத்திரா என்கிற ஒரு கதாபாத்திரம் அதில் பூர்ணா நடித்திருக்கிறார். அப்புறம் குண்டு வில்லனாக நானும் நடித்துள்ளேன்.

இந்தப் படத்தில் நடித்த ராம் மற்றும் பூர்ணா ஆகிய இருவருமே தங்களின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அழகான ஆண் யார் என்று கேட்டால் அது ‘ராம்’ என்றுதான் சொல்வேன்.

இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நகைச்சுவை இழையோடிருக்கும். இறுதிக் காட்சியில், ராமின் கால் உடைய வேண்டும். நிஜமாகவே உடைந்தது. அந்த வலியுடனேயே நடித்துக் கொடுத்தார். சுந்தரத் தமிழில் டப்பிங்கும் பேசிய முதல் மலையாள நடிகை பூர்ணாவாகத்தான் இருப்பார்.

இது ஒரு நல்ல படம். இந்த ‘சவரக்கத்தி’யினால் எனக்கு ஒரு மயிரும் வேண்டாம். அதிகமாகச் சம்பாதித்து கடற்கரையோரங்களில் பங்களாக்களோ அல்லது ஊருக்குள் நான்கு கல்யாண மண்டபங்களோ கட்டிப் போடும் எண்ணம் எனக்கில்லை. போட்ட காசு திரும்பி வந்தால் போதும், அப்படி வந்துவிட்டால், உடனேயே இன்னொரு நல்ல படம் தயாரிக்க ஆரம்பித்துவிடுவேன்.

முதல்முறையாக ஒரு நகைச்சுவை கதையை எழுதி இருக்கிறேன். நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் திரைப்படமாக, எங்களின் ‘சவரக்கத்தி’ திரைப்படம் இருக்கும்….” என்றார்.

Our Score