காமெடி சீனைக் கேட்டுவிட்டு தெறித்து ஓடிய ரஜினியும், ராதிகாவும்..!

காமெடி சீனைக் கேட்டுவிட்டு தெறித்து ஓடிய ரஜினியும், ராதிகாவும்..!

ரஜினி ரசிகர்களால் மட்டுமல்ல.. பொதுவான தமிழ்ச் சினிமா ரசிகர்களால்கூட மறக்க முடியாத ஒரு திரைப்படம் ‘ஊர்க்காவலன்’.

தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இயக்கியிருந்தவர் இயக்குநர் மனோபாலா.

ஒரு கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது அத்திரைப்படம்.

அந்தப் படத்தில் இருக்கும் ஒரு காமெடி காட்சி இன்றளவும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக உள்ளது.

ரஜினி தூங்கிக் கொண்டிருக்கும்போது, ராதிகா அவரை எழுப்பி, குளிப்பாட்டி, இட்லி சுட்டு வைத்து சாப்பிடச் சொல்லும் அந்தக் காட்சி உம்மணாம் மூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடும். ‘ஸ்டைல் மன்னன்’ என்று புகழப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிக்குள் இருக்கும் இன்னொரு நகைச்சுவை நடிகனை கச்சிதமாக வெளிக்கொணர்ந்த காட்சி இது.

இந்தக் காட்சி உருவானவிதம் குறித்து நடிகர் மனோபாலா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “ஊர்க்காவலன்’ படத்தில் அந்தக் காட்சியை முதலில் ரஜினியை மனதில் வைத்தே திட்டமிட்டிருந்தேன். ஏன்னா ரஜினிக்கு காமெடி  நன்றாக வரும். அதேபோல் ராதிகாவும் ஒரு இன்னசென்ட் கேரக்டர் என்றால் வெளுத்து வாங்கிவிடுவார். அதுவும் எனக்கு நன்கு தெரியும். அதனாலேயே இப்படியொரு காட்சியை நான் கிரியேட் செய்திருந்தேன்.

முதலில் அவர்கள் இருவரிடமும் இந்தக் காட்சியை விளக்கியபோது ஆளுக்கொரு பக்கமாக தெறித்து ஓடிவிட்டார்கள். அப்படி விழுந்து, விழுந்து சிரித்தார்கள் இருவரும். அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது இந்தக் காட்சி நிச்சயமாக ஜெயிக்கும் என்று..!

நான் நினைத்ததுபோலவே ராதிகாவும், ரஜினியும் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் காட்சியில் நடித்திருந்தார்கள். அந்தக் காட்சியில் அவர்கள் இருவரின் நடிப்பும் ஒரு இயக்குநராக எனக்கு ஒரு முழுமையான திருப்தியைக் கொடுத்தது..!

ஆனால் முதலில் அந்தக் காட்சி படத்தின் இடைவேளைக்கு முன்புதான் வைப்பதாக இருந்தது. அப்படித்தான் வைத்திருந்தேன். ஆனால் முழு படத்தையும் பார்த்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், இடைவேளைக்கு பின்பு படம் கொஞ்சம் டிரை ஆக இருப்பது போல உணர்ந்தார். அதனால், அந்தக் காமெடி காட்சியை மட்டும் இடைவேளைக்கு பின்பு வைக்கும்படி சொன்னார்.

அவர்தான் படத்தின் தயாரிப்பாளர். அதோடு என்னைவிடவும் அனுபவம் வாய்ந்த மூத்தவர். அதனால் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து அந்தக் காட்சியை இடைவேளைக்குப் பின்பு பொருத்தமான இடத்தில் பிக்ஸ் செய்தோம்.

இன்றுவரையிலும் ‘ஊர்க்காவலன்’ படம் பற்றிப் பேசுபவர்கள் அந்தக் காட்சியைக் குறிப்பிட்டே பேசுவார்கள். இது அந்தப் படத்திற்குக் கிடைத்த பெருமை.." என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் மனோபாலா.