நடிகை லட்சுமி எப்படி சினிமாவில் நாயகியானார்..?

நடிகை லட்சுமி எப்படி சினிமாவில் நாயகியானார்..?

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகையான லட்சுமியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மாநில அரசின் விருது, மற்றும் 8 முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, 4 முறை சிறந்த நடிகைக்கான ஆந்திர மாநிலத்தின் நந்தி விருது, 3 முறை கன்னட சினிமாவில் சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருது, ஒரு முறை கேரளா அரசின் சிறந்த நடிகைக்கான விருது.. மற்றும் எண்ணற்ற சாதனையாளர் விருதுகள் என்று வாங்கிக் குவித்திருக்கும் லட்சுமிக்கு தென்னிந்திய சினிமாவில் பல கோடி ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.

1968-ம் ஆண்டு தனது 14-வது வயதில் ‘ஜீவனாம்சம்’ என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கத் துவங்கிய நடிகை லட்சுமி,  இதுவரையிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 5 மொழிகளிலும் சுமார் 600 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு கஷ்டப்படவே இல்லை. தேடுதல் வேட்டையும் நடத்தவில்லை. அவரைத் தேடி வந்த வாய்ப்பினை அவரே சுயமாக முடிவெடுத்து ஏற்றுக் கொண்டார். அந்த முடிவு நல்ல முடிவாக இருக்க தென்னிந்திய சினிமாவில் இன்றுவரையிலும் தலை சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார்.

1968-ம் ஆண்டில் ஒரு நாள் தமிழ்ச் சினிமாவின் மூத்த இயக்குநரான மல்லியம் ராஜகோபால் அப்போதைய தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அப்போது அந்த வீட்டில் ஒரு இளம் பெண் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவரது முகத்தைப் பார்த்த ராஜகோபாலுக்கு அந்தப் பெண் சினிமாவில் நடிப்பதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று தோன்றியது.

அதனால் அந்தப் பெண் யார் என்று எஸ்.வி.சகஸ்ரநாமத்திடம் கேட்க, அவரோ “அந்தப் பெண் என்னுடைய உறவுக்காரப் பெண்” என்று சொல்லியிருக்கிறார். இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அந்தப் பெண்ணை அழைத்து வரச் சொல்லி பேசினார்.

கொஞ்சம்கூட பயமே இல்லாமல் பட், பட்டென்று நறுக்குத் தெரித்தாற்போல் பதில் சொன்ன அந்த இளம் பெண்ணை இயக்குநர் மல்லியம் ராஜகோபாலுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

தான் அடுத்து இயக்குவதாக இருந்த ‘ஜீவனாம்சம்’ என்ற படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்கு இந்தப் பெண்தான் பொருத்தமானவராக இருப்பார் என்று அப்போதே சட்டென்று தன் மனதில் நிலைநிறுத்திக் கொண்டார் இயக்குநர் மல்லியம் ராஜகோபால். அந்த இளம் பெண்தான் நடிகை லட்சுமி. அப்போது அவருக்கு வயது 14.

லட்சுமியிடம், “சினிமாவில் நடிக்கிறியாம்மா…?” என்று இயக்குநர் மல்லியம் ராஜகோபால் கேட்டபோது லட்சுமியிடமிருந்து வந்த பதில் “நல்ல கதையாக இருந்தால் நடிக்கிறேன்..” என்பது. வெறும் 14 வயது பெண் இப்படியொரு பதிலைச் சொல்கிறாளே என்று நினைத்து இயக்குநர் மல்லியம் ராஜகோபால் பெரிதும் ஆச்சரியப்பட்டார்.

“சரி.. உன் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்..? அவர்களிடம் நான் பேச வேண்டும்” என்று இயக்குநர் மல்லியம் ராஜகோபால் கேட்டபோது, “அவங்ககிட்ட கேட்கணும்னு அவசியமில்லை. என்னிடமே கதையைச் சொல்லுங்கள். கதை பிடித்திருந்தால் நானே நடிக்கிறேன்…” என்றார் லட்சுமி.

லட்சுமியின் அந்தத் தைரியப் பேச்சைக் கேட்டு மேலும் வியப்படைந்த இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அங்கேயே, அப்போதே லட்சுமியிடம் ‘ஜீவனாம்சம்’ படத்தின் கதையைச் சொன்னார். கதையைக் கேட்ட லட்சுமி “கதை எனக்குப் பிடிச்சிருக்கு. நான் நடிக்கிறேன்..” என்று ஒரே வார்த்தையில் ‘ஓகே’ சொல்லிவிட்டார்.

இப்படித்தான் இந்த ‘ஊர்வசி’ லட்சுமி திரையுலகத்திற்குள் மிக எளிதாகக் கால் பதித்து இப்போதுவரையிலும் தனது தனித்துவமான நடிப்பால் மின்னிக் கொண்டிருக்கிறார்.