கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் ஒரு புதுமையான சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. அது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட தனிப்பட்ட ஒரு வீடியோவினால்..!
அந்த வீடியோவில் தன்னுடைய வீட்டிற்கு அரசியல்வாதிகளால் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாகவும் அதனைத் தீர்ப்பதற்காக தான் அலைந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
இதைப் பார்த்துவிட்டு பலரும் அவருக்கு போன் செய்து என்ன விஷயம் என்று கேட்கத் துவங்க.. கே.எஸ்.ரவிக்குமார் ஒரு சின்ன சிரிப்புடன் “2 நாட்கள் காத்திருங்கள்…” என்று மட்டுமே சொன்னார்.
அந்த 2 நாட்களுக்குள் மேலும் 2 வீடியோக்களை வெளியிட்டு டென்ஷனை அதிகப்படுத்தினார் கே.எஸ்.ரவிக்குமார். “அப்படி என்னதான் பிரச்சினை…?” என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்ட பின்புதான், இது ஒரு திரைப்படத்திற்காக அவர் பேசிய விளம்பர டயலாக் என்பது தெரிய வந்தது.
அந்தத் திரைப்படத்தின் பெயர் ‘மதில்’. இதில் குடும்பத் தலைவராக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

அவர் ஆசை, ஆசையாய் கட்டிய வீட்டின் சுவற்றில் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டுவதைத் தட்டிக் கேட்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதனால் பலவித பிரச்சினைகள் அந்தக் குடும்பத்திற்கு எழுந்து நிம்மதி போகிறது.. இதன் விளைவுகள் என்ன என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.
இதைத்தான் கொஞ்சம் வித்தியாசமான பாணியில் விளம்பரப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இத்திரைப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது இன்னொரு விஷயம்.
பிரபல இயக்குநரான மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார்.
இந்த ‘மதில்’ படத்தில் ‘மைம்’ கோபி, ‘பிக்பாஸ்’ புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள எம்.தியாகராஜன் படத் தொகுப்பு செய்துள்ளார்.
இந்த ‘மதில்’ படம் பற்றி நடிகரும், இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பு இது. அரசியல்வாதிகளுக்கு வகுப்பு, பொது மக்களுக்கு பொறுப்பு, களவாணி தனத்துக்கு மறுப்பு, காவல்துறைக்கு சிறப்பு, ‘தனக்கென்ன’ என்பவர்களுக்கு படிப்பு, திறமையானவர்களின் நடிப்பு, மொத்தத்தில் ‘மதில்’ ஒரு தில்லான படைப்பு. மனசாட்சி சொல்படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைக் குரல்தான் இந்த ‘மதில்’ திரைப்படம்..“ என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஜீ-5 ஓடிடி தளத்திற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.