வெளிநாட்டு படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் படங்கள்..!

வெளிநாட்டு படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் படங்கள்..!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது முறையாக அதிவேகத்தில் பரவி வருகிறது. சென்ற ஆண்டின் கடைசிப் பகுதியில் பல தளர்வுகளை அறிவித்திருந்த நாடுகளும் தற்போது மிக வேகமாக மீண்டும் கதவைச் சாத்திவிட்டன.

இப்படி வெளிநாடுகளின் கதவுச் சாத்தலினால் கோடம்பாக்கம் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அஜீத் நடித்திருக்கும் ‘வலிமை’ படத்தின் முக்கியமான சில காட்சிகள் கண்டிப்பாக வெளிநாட்டில்தான் படமாக்கப்பட வேண்டுமாம். இது படத்தின் துவக்கத்திலேயே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

‘வலிமை’ படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட வேண்டியிருப்பதால் அங்கே போவதற்கு விண்ணப்பித்து அனுமதிக்காகக் காத்திருக்கிறது படக் குழு. வைரஸ் பரவலின் வேகத்தைப் பொறுத்துதான் ஐரோப்பிய நாடுகளில் தடைகள் நீக்கப்படும் என்பதால் ‘கொரோனா கோ பேக்’ என்று பொதுமக்களைவிடவும் சினிமா தயாரிப்பாளர்கள்தான் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படியிருந்தாலும் படத்தை ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ‘வலிமை’ படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் படக் குழு உறுதியாய் இருக்கிறது.

இதேபோல் இன்னொரு படமும் வெளிநாட்டு படப்பிடிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் ‘கூகுள் குட்டப்பன்’. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் இந்தப் படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடத்தப்பட வேண்டுமாம்.

ஆனால், அங்கே தினமும் கொரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகைக்கு பலத்த கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் விசா நடிவடிக்கைகளை இன்று முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதனால் நிலைமை சுமூகமாக வேண்டுமே என்று வேண்டிக் கொண்டு இந்தப் படக் குழுவும் காத்துக் கொண்டிருக்கிறது.

இது எல்லாவற்றையும் திருவாளர் கொரோனாதான் முடிவு செய்வார் என்பதால் எல்லாமே அவர் கையில்தான் உள்ளது..!

 
Our Score