“சேரன் பாண்டியன் 33 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட படம்..” – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு

“சேரன் பாண்டியன் 33 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட படம்..” – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு

‘சண்டிக்குதிரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இசைத் தட்டை வெளியிட இயக்குநர் சமுத்திரக்கனி பெற்றுக் கொண்டார்.

DSC_9639

விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, “எல்லாரும் இப்போது சின்ன படம், சின்ன படம் என்றே பேசுகிறார்கள்  எது சின்ன படம்.. எது பெரிய படம் என்று யார் நிர்ணயிப்பது..  வெற்றியை வைத்துதான் படங்களின் பட்ஜெட் கணக்கிடப்படுகிறது.

கமல் நடித்த ‘அவர்கள்’ படம் வெறும் பத்து லட்சம் செலவில் எடுக்கப்பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்று முடிச்சு’ படமும் பத்து லட்சம் செலவில் எடுக்கப்பட்டதுதான். நான் இயக்கிய முதல் படமான ‘புரியாத புதிர்’ முப்பது லட்சம் செலவிலும், ‘சேரன் பாண்டியன்’ முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும்தான் தயாரிக்கப்பட்டது.

படங்கள் வெற்றிபெறும்போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் ஆகிறார்கள். சின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள்.. இண்ட்ரஸ்டிங்கா எடுங்க.. அப்பத்தான் படமும் ஓடும்.. நீங்களும் பெரிய இடத்தை அடைய முடியும்..” என்றார்.

DSC_9629

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரான அன்புமதியும், ஹீரோவான ராஜ்கமலும் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். நான் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தபோது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன், ‘கதை நன்றாக இருக்கு.. சின்னத்திரை இயக்குநரின் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு விடுங்கள்’ என்று தயாரிப்பாளரிடம் சொல்லி வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குநராகவும், நடிகராகவும் நிற்கிறேன்.

நான் சீரியலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது சினிமாவுக்கான கதையை தயார் செய்து வைத்திருந்தேன். பார்ப்போரிடத்திலெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அப்போது எஸ்.பி.பி. ஸாரை பார்க்க போயிருந்தேன். அவருக்கு எனது சினிமா முயற்சி நன்றாக தெரியும்.

‘என்னடா.. கதை சொல்லிக்கிட்டிருக்கியா..? எங்க சொல்லு பார்ப்போம்’ என்று கேட்டார். எதற்கோ கேட்கிறாரே என்று நான் தயங்கவில்லை. கதையைச் சொன்னேன். பட்டென்று ‘கதை நல்லாயிருக்குடா.. நானே இதை தயாரிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். அதேபோல் அப்போது அங்கே என்னைப் பார்க்க வந்த எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு இருவரிடமும் ‘நீங்கதாண்டா இதுல நடிக்குறீங்க..’ என்றேன். அப்படித்தான் சட்டென்று ஆரம்பித்தது எனது திரையுலக வாழ்க்கை.

அதனால் வெற்றி உங்கள் அருகில்தான் இருக்கு. அதை நோக்கி நீங்கள் ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஓடும்போதே வலது பக்கம் திரும்பிவிடலாம்.. அல்லது இடது பக்கம் திரும்பிவிடலாம் என்று நினைக்கவே கூடாது. நேர்ப்பாதையில் ஓடிக்கொண்டேயிருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும்…” என்றார்.

விழாவில் இயக்குநர் ரவி மரியா, ஜாக்குவார் தங்கம், லியாகத் அலிகான், அரவிந்தராஜ், கஞ்சா கருப்பு, D.S.R.சுபாஷ், கே.பி. மோகன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் பிரகாசம், ராஜ்கமல், நாயகி மானஸா, இசையமைப்பாளர் வாராஸ்ரீ, ஒளிப்பதிவாளர் வீரா, பாடகர் பிரசன்னா, இயக்குநர் அன்புமதி ஆகியோரும் பேசினர்.  

Our Score