’அட்டகத்தி’ ’பீட்சா’ ’சூது கவ்வும்’ ’தெகிடி’ ’முண்டாசுபட்டி’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தவரும் ’மாயவன்’ மற்றும் ’கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவருமான சி.வி.குமார் தனது அடுத்த படத்தைத் துவக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ராஜேஷ் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
பிரகாஷ் ருத்ரா என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் படத் தொகுப்பு பணி செய்யவிருக்கிறார்.
“தன்னுடைய புதிய திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘தி டாவின்ஸி கோட்’ போன்றது…” என்று இப்போதே கொளுத்திப் போட்டிருக்கிறார் சி.வி.குமார்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் ‘தி டாவின்சி கோட்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்றாலும் பல நாடுகளில் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. கிறிஸ்துவர்களே இந்தப் படத்தை எதிர்த்ததால் சில நாடுகளில் இத்திரைப்படத்தை திரையிட அனுமதிக்கவில்லை.
“இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படமும் ‘தி டாவின்ஸி கோட்’ போல் ஒரு அட்வென்சர் திரைப்படம். ‘தி டாவின்சி கோட்’ படத்தின் பாதிப்பால் இந்தக் கதையை எழுதி உள்ளேன். வரலாற்றை மையப்படுத்தியுள்ள இந்தக் கதையில் அறிவியல் அம்சமும் கலந்திருக்கும்….” என்கிறார் சி.வி.குமார்.