நடிகர்கள் ஜீவாவும், அருள்நிதியும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் ’களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 90-வது திரைப்படம்.
இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
காரைக்குடி செட்டியாராக ‘அப்பச்சி’ என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பால சரவணன், இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .
இவர்களுடன் ‘பிசாசு’ படத்தின் நாயகியான பிரக்யா மார்ட்டின் ஒரு கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்டமான நடிகர் கூட்டத்துடன் ஒரு படம் திரைக்கு வர இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும், இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே நடக்கும் விஷயம் என்பதால்… அனைவரின் கவனத்தையும் பெற்ற இத்திரைப்படம் வெளியாகத் தயார் நிலையில் இருக்கிறது.
கதை – திரைக்கதை – எழுத்து – இயக்கம் – N.ராஜசேகர், தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ், வசனம் – ஆர்.அசோக், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – பா.விஜய், விவேகா, ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம், படத் தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ், கலை இயக்கம் – M.முருகன், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், சண்டை இயக்கம் – பிரதீப், நிர்வாக தயாரிப்பு – ஸ்ரீநாத் ராஜாமணி, தயாரிப்பு மேற்பார்வை – புதுக்கோட்டை M.நாகு, R.ரமேஷ், மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, ரியாஸ் கே.அஹ்மத்.
இந்தக் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் கபடி விளையாட்டை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது.
டீஸரில் ’நான் இவன்கிட்ட தோப்பேன்; இவன் என்கிட்ட தோப்பான்; ஆனா நாங்க யாருகிட்டேயும் தோக்க மாட்டோம்’ என்று வசனம் இருப்பதைப் பார்த்தால்… இத்திரைப்படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற இடங்களில் நடந்துள்ளது.
தற்போது ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் ஆர்யா மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டனர்.