full screen background image

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டியிடுவது சரிதானா..?

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டியிடுவது சரிதானா..?

தமிழ் சினிமாவின் தலைமை அமைப்பாக இருப்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

மறைந்த முதல்வரும், நடிகருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இச்சங்கம் தமிழ் சினிமா வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.

இச்சங்கத்தின் தலைவராக இருந்த கே.ஆர்.ஜி.யின் தொடர் முயற்சியால்தான் 170 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த சங்கம், இன்றைக்கு 4000-க்கும் அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் பலம் மிக்க அமைப்பாக ஆலமரமாக வளர்ந்திருக்கிறது.

இந்தச் சங்கத்திற்கு கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.முரளிதரன், பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கேயார், இராம.நாராயணன், S.A.சந்திரசேகர், கலைப்புலி தாணு, விஷால் கிருஷ்ணன் போன்றவர்கள் தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.

இருந்தபோதிலும் கே.ஆர்.ஜி., மூன்று முறையும் இராம.நாராயணன் இரு முறையும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்களாக இருந்த காலங்களே சங்கத்தின் பொற்காலமாக இருந்தது என்று இன்றுவரை கூறப்படுகிறது

ஐம்பது ஆண்டுகளை கடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் 23-ம் தேதியன்று நடைபெற உள்ளது.

தலைவர் பொறுப்புக்கு முரளி ராமசாமி, டி.ராஜேந்தர், தேனப்பன் ஆகியோர் முதல்முறையாகப் போட்டியிடுகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்த நடிகர் விஷால், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் அதனை கடுமையாக எதிர்த்தனர்.

ஒரு நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை வந்தால் விஷால் யாருக்காக பேசுவார்..? ஒரு பிரபலமான, பிஸியான.. தினம்தோறும் படப்பிடிப்புக்குச் செல்கின்ற கதாநாயகன் தினந்தோறும் பிரச்சினைகள் வரக் கூடிய தயாரிப்பாளர்கள் சங்க பணிகளை எப்படி பார்க்க முடியும்.. என்று கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால், தயாரிப்பாளர்களின் இடையே ஒற்றுமை இல்லாததால் நடிகர்களும், இயக்குர்களும் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இன்றைய சரிவு அன்றுதான் தொடங்கியது, விதை நெல்லாக பாதுகாக்கப்பட வேண்டிய அறக்கட்டளையின் சேமிப்பு ஒட்டு மொத்தமாக செலவழிக்கப்பட்டு தற்போது சங்கத்திலும், அறக்கட்டளையிலும் சங்கத்தின் அன்றாட செலவுகளுக்கே நிதி இன்றி போனது தயாரிப்பாளர்கள் சங்கம்.

“மாற்றுத் தலைவர்கள் அவசியம் தேவை என்றாலும் வருபவர்களும் வரும் வழியில் நேர்மையாகவும், சரியானதாகவும் இருந்தால்தான் சங்கம் அடுத்தும் சிறப்பாக நடைபெறும். ஆனால் இதனைக் குலைப்பது போன்று டி.ராஜேந்தர் சங்கத் தலைவர் பதவியில் போட்டியிடுகிறார்…” என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

பொதுவாகவே தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையில் நிறைய முட்டல், மோதல்கள் உள்ளன. பல பஞ்சாயத்துக்கள் விநி்யோகஸ்தர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பெண்டிங்கில் உள்ளன. இரு தரப்பினருமே ஒருவர் மீது ஒருவர் பண விஷயத்தில் ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

“இந்தச் சூழலில் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கும் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் வந்து போட்டியிடுவது எந்த வகையில் நியாயம்..? அவருக்கே அது தவறு என்று படவில்லையா..? விஷால் செய்த தவறின் காரணமாகத்தான் இன்றைக்கு இப்படியொரு இக்கட்டான நிலைமை சங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போது அதே போன்ற தவறை டி.ராஜேந்தரே செய்வது சரிதானா..?

முதலில் தயாரிப்பாளர்கள் நலன் காப்பேன்’ என கூறி இப்போது வாக்கு கேட்கும் டி.ராஜேந்தரால் தனது மகன் சிலம்பரசனையே படப்பிடிப்புக்கு ஒழுங்காக அனுப்ப முடியவில்லை. அதனாலேயே, பல தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர். அவர்களுக்கு இதுவரையிலும் டி.ராஜேந்தர் என்ன நஷ்ட ஈட்டினை கொடுத்துள்ளார்..?

நாளை ஒருவேளை டி.ஆர்., தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகிவிட்டால், ஒரு விநியோகஸ்தர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கொடுக்கப்படும் புகார் மனுவை எப்படி இவரால் விசாரிக்க முடியும்..? எப்படி நியாயமான தீர்ப்பினை வழங்க முடியும்..? நியாயத்தை வழங்க முடியும்..?

யாராவது ஒரு பக்கம் பேசினாலே குழப்பம் கூடுகிறது. இதில் இரண்டு பக்கமும் பேசினால் என்னவாகும்..? மாநில அரசின் தலையீட்டுக்குப் பிறகு சங்கம் நல்ல நிலைமைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், இப்போது சங்கம் அரசின் கையிலேயே தொடர்ந்து இருந்தால் நல்லது என்று நினைக்க வேண்டியிருக்கிறது..” என்றார் இன்னொரு தயாரிப்பாளர்.

ஆனால், கவலைப்பட வேண்டிய டி.ராஜேந்தரோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது முடியை சிலுப்பிவிட்டுக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறார்.

வெற்றி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!

Our Score