‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி…!

‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி…!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் 2D எண்ட்டெர்டெயின்மேண்ட் நிறுவனம் தயாரித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ தளம் வழியாக வரும் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது.

உலகமே கொரோனாவால் முடங்கியிருக்கும் இந்த அசாதாரண காலத்தில் தமிழகத்தில் திரையரங்குகள் இயங்க முடியாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மொத்த திரைப்படத் துறையும் கடந்த 5 மாத காலமாக முடக்கப்பட்டு இதில் பணியாற்றும் 30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் 'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து நிதியுதவி தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயை பகிர்ந்தளிப்பதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.

"பொதுமக்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்..." என்று சூர்யா தெரிவித்திருந்தார். சொல்லியது போலவே இப்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.

இதன் முதல் கட்டமாக 1.5 கோடி ரூபாய் நிதியுதவியாக இன்று வழங்கப்பட்டது. இதில் தமிழ்த் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்ஸி' அமைப்புக்கும், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கும் சேர்த்து 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

பெப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் எண்பது லட்சம் ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் இருபது லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

இதேபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இதனை பெற்றுக் கொண்டு, தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் அதனை வழங்கவிருக்கிறார்.

தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் அதனை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார். 2D பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.