full screen background image

“பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்..

“பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்..

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது திரையுலக அனுபவங்களை தனது யுடியூப் சேனல் வாயிலாகச் சொல்லி வருகிறார்.

இந்த வாரம் அவர் பேசியபோது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார்.

“மண்வாசனை’ திரைப்படத்தை முடித்து வெளியிட்டபோது அது நான் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் அத்திரைப்படம் 250 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது.

இந்த நேரத்தில் எனக்கு மும்பையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்த ராஜேந்திர குமார் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

அவர் சென்னைக்கு வந்தபோது சோழா ஓட்டலில் தங்கியிருந்தார். நானும் அங்கே சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் தனக்காக ஹிந்தியில் ஒரு திரைப்படத்தை இயக்கித் தரும்படி கேட்டார். ஏற்கெனவே ‘16 வயதினிலே’ படத்தை ஹிந்தியில் இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு என்றாலும், ஹிந்தியில் அத்திரைப்படம் சரியாகப் போகவில்லை என்ற வருத்தமும் இருந்தது.

சரி.. இ்ப்போது ஒரு வாய்ப்பு வருகிறது.. பயன்படுத்திப் பார்ப்போம் என்று நினைத்து அதற்கு ஒத்துக் கொண்டேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தையே ஹிந்தியில் படமாக்க எண்ணினேன். இந்தப் படத்தில் தனது மகன் குமார் கவுரவ்வை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென ராஜேந்திரகுமார் கேட்டுக் கொண்டார்.

அப்போதே.. அங்கேயே.. ஒரு பெரிய தொகையை.. அதுவரையிலும் நான் யாரிடமும் வாங்காத.. நினைத்துக் கூடப் பார்க்காத தொகையை எனக்குச் சம்பளமாகக் கொடுத்தார். அதுவே எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்தப் படத்தை நான் ஒத்துக் கொண்டேன். படத்திற்கு ‘லவ்வர்ஸ்’ என்று பெயர் வைத்தேன். நாயகியாக பத்மினி கோலாப்பூரியை ஒப்பந்தம் செய்தோம். தமிழில் தியாகராஜன் செய்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் டேனி செய்தார். சில்க் ஸ்மிதா செய்த கதாபாத்திரத்தில் நடிகை கஜோலின் அம்மாவான தனுஜா நடித்தார்.

அப்போது பத்மினி பல படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த நேரம். அவருடைய கால்ஷீட் கிடைப்பதே கஷ்டமான சூழலாக இருந்தது. அந்தம்மாவின் கால்ஷீட்டுக்கு ஏற்றவாறு மற்றவர்களின் கால்ஷீட்டை பெற்று அதற்கேற்றவாறு ஷூட்டிங் ஷெட்யூலை ஏற்பாடு செய்தோம்.

ஷூட்டிங் முதல் கட்டமாக கோவாவிலும், மும்பையிலும் நடப்பதாக திட்டமிட்டிருந்தோம். அப்போதெல்லாம் அதிகமாக விமானங்கள் இல்லாததால் சென்னையில் இருந்து கோவாவுக்கு செல்வதற்கே சிரமமமாக இருந்தது. சென்னையில் இருந்து முதலில் பெங்களூருக்கு சென்று.. பின்பு அங்கேயிருந்து கோவாவுக்கு வேறொரு விமானத்தில் செல்ல வேண்டும்.

பலவித பிரச்சினைகள் இருந்ததால் பெங்களூரில் இருந்து காரிலேயே கோவாவுக்கு பயணமானோம். அங்கே நல்ல லொகோஷன்களில் பாடல் காட்சியை படமாக்கினோம். எனக்கு முழுமையான திருப்தியை அது தரவில்லை. மேற்கொண்டு பல காட்சிகளை எனது முட்டம் கடற்கரைக்கு வந்து எடுத்தோம்.

ராஜேந்திர குமார் பல நேரங்களில் நிறைய திருத்தங்கள் சொல்வார். அவர்தான் தயாரிப்பாளர். அவருடைய மகன்தான் ஹீரோ என்பதால் நானும் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு சரியென்று பட்டால் செய்வேன்.

முட்டத்திலும் அப்படித்தான் ஒரு நாள் அதிகாலை சூரிய உதயத்தின்போது சில காட்சிகளை வைத்திருந்தேன். அப்போது ராஜேந்திர குமார் என்னருகில் வந்து சில திருத்தங்களைச் சொன்னார். அப்படி செய்யணும்.. இப்படி செய்யணும் என்று ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு முட்டம் பகுதி இன்னொரு வீடு மாதிரி. அங்கேயிருந்தவர்களெல்லாம் என்னுடைய உறவினர்களை போல. அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். அவர்களெல்லாம் அன்றைக்கு ஷூட்டிங் பார்க்க வந்து நின்று கொண்டிருந்தார்கள்.

ராஜேந்திரகுமார் என்னிடத்தில் பேசப் பேச.. அவர் ஏதோ என்னிடத்தில் சண்டை போடுவதாக நினைத்து வேகமாக எங்களை வந்து சூழ்ந்து கொண்டார்கள். ‘என்ன விஷயம்.. என்ன சொல்றாரு இவரு.. என்ன பிரச்சினை ஸார்..?’ என்று அவரை மிரட்ட ஆரம்பித்தார்கள்.

நானும் பதறிப் போய்.. ‘ஐயா.. இவர்தான் தயாரிப்பாளர்.. ச்சும்மா சாதாரணமா பேசிக்கிட்டிருக்கோம்.. பிரச்சினை ஒண்ணும் இல்ல..’ என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.

அந்தப் படத்திற்கான பேட்ச் ஒர்க்கை மும்பையில் முடித்தேன். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ஆர்.டி.பர்மன். வயதான நிலையிலும் ஒரு சுறுசுறுப்பான இளைஞரை போல அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வலம் வந்து கொண்டிருந்தார். திடீரென்று அப்படியே நடந்து போய் ஒரு சுவற்றில் ஏறி ரவுண்ட் அடித்து இறங்குவார். அப்படியொரு இளைஞராகத் திகழ்ந்தவர் ஆர்.டி.பர்மன். இந்தப் படத்திற்கு ஹிந்தியில் அழகான பாடல்களைப் போட்டுக் கொடுத்திருந்தார்.

இந்தப் படம் வெளியானபோது என்ன காரணம்ன்னு தெரியலை.. ஏதோ ஒண்ணு.. ஓஹோ என்று போகவில்லையென்றாலும், சுமாரான வெற்றியைத்தான் பெற்றது…” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

Our Score