‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ மலையாள படத்தைத் தமிழில் தயாரிக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்..!

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ மலையாள படத்தைத் தமிழில் தயாரிக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்..!

2000-ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தெனாலி’ படத்தைத் தயாரித்து இயக்கிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அதன் பிறகு சொந்தத் தயாரிப்பில் இறங்காமல் இருந்து வந்தார். இடையில் படங்களை இயக்கவும், நடிக்கவும் செய்து வந்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

இப்போது மலையாளத்தில்  சென்ற ஆண்டு வெளிவந்து ஹிட்டடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’  படத்தைத் தமிழில் தயாரிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ திரைப்படம் புதுமையான ஒரு கதையில் உருவான திரைப்படம். சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் பெற்ற முதல் 5 படங்களில் இதுவும் ஒன்று. கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய 3 விருதுகளை இத்திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவில்லை. அவரிடம் இணை இயக்குநர்களாகப் பணியாற்றிய சபரி-சரவணன் என்னும் இரட்டை இயக்குநர்கள்தான் இயக்கப் போகிறார்கள். தயாரிப்பு மட்டும்தான் கே.எஸ்.ரவிக்குமாராம்.

மேலும், தற்போது பல படங்களில் நடித்து வரும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இப்போதுதான் மிக நல்ல வேடங்களும் தொடர்ந்து கிடைத்து வருகிறதாம். ‘அய்யா உள்ளேன் அய்யா’, ‘நான் சிரித்தால்’, ‘மாளிகை’, ‘கோப்ரா’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

இதுவும் இல்லாமல் ஜீ-5 ஓடிடி தளத்திற்காக மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸிலும் தனது நடிப்புத் திறமையைக் காண்பித்து வருகிறாராம்.

எப்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை மீண்டும் திரையில் பார்ப்பது என்றால், “இப்பத்தான் நல்ல, நல்ல கேரக்டரெல்லாம் நமக்கு வரிசையா வருது. எதுக்கு விடுவானேன்.. மொதல்ல ஆசை தீர நடிச்சு முடிப்போம். அப்புறம் திரும்பவும் இயக்கத்துக்கு வருகிறேன்…” என்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

Our Score