“பிரபுதேவா இந்தியாவின் பொக்கிஷம்” – இயக்குநர் பாரதிராஜா பாராட்டு..!

“பிரபுதேவா இந்தியாவின் பொக்கிஷம்” – இயக்குநர் பாரதிராஜா பாராட்டு..!

பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மற்றும் விமர்சகர்களின் தர வரிசைகளுக்கும் அப்பால் உள்ள மிகப் பெரிய வெற்றி என்பது மிகப் பெரிய மனிதர்களின் மனதிலிருந்து வரும் பாராட்டுகள்தான். இப்படியொரு பாராட்டு பிரபுதேவா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ல‌ஷ்மி’ படத்தின் மொத்த குழுவுக்கும் கிடைத்துள்ளது.

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்திரன் உடன் இணைந்து ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் ‘லஷ்மி’.

இயக்குநர் விஜய் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சல்மான் யூசுப்கான், கருணாகரன் மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் நடனத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நேற்று பிரிவியூ தியேட்டரில் பார்த்த இயக்குநர் இமயம் பாரதிராஜா நெகிழ்ந்து போய் படக் குழுவினரை மிகவும் பாராட்டியுள்ளார்.

படத்தின் கடைசி டைட்டில் கிரெடிட்ஸ் முடிவடையும் முன்பே எழுந்து நின்று, இயக்குநர் விஜய் மற்றும் பேபி தித்யா பாண்டே தோள்களை தட்டி கொடுத்து ஆச்சரியப்பட்டார். "நீங்கள் இந்தியாவின் பெருமை" என்று கூறியதோடு, இந்த படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளையும் பாராட்டினார்.

"இந்த குழந்தைகள் வெறும் நடனத்தில் மட்டுமல்லாமல், அவர்களது ஆழ்ந்த நடிப்பாலும் அபாரமான திறமை உடையவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். சின்ன சின்ன முக பாவனைகளில்கூட நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்" என்றார் பாரதிராஜா.

இயக்குநர் விஜய் மற்றும் பேபி தித்யா ஆகிய இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. பின்னர் பிரபுதேவாவுடன் தொலைபேசியில் பேசிய அவர் மேலும் உணர்ச்சிபூர்வமாக பேசினார். 

"உன்னை எப்படி, எந்த வார்த்தைகளால் பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை, நீ இந்தியாவின் பொக்கிஷம்..." என்றார் பாரதிராஜா.

நேற்று வெளியான தினத்திலேயே உடனடியாக கூடுதல் தியேட்டர்களைப் பெற்று பெருமையடைந்துள்ளது ‘லஷ்மி’ திரைப்படம்..!