‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..!

‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..!

‘மண் வாசனை’ படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.

இந்த வாரம் அவர் பேசும்போது மேலும் சில சுவையான விஷயங்களை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பாரதிராஜா பேசும்போது, “மண் வாசனை’ படத்தின் துவக்கத்தில் பாண்டியனை ஏற்கத் தயங்கிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், வசனகர்த்தா கலைமணி, மற்றும் எனது உதவி இயக்குநர்கள் அனைவரும் பின்பு ஒரு கட்டத்தில் பாண்டியனின் நடிப்பைப் பார்த்துவிட்டு ‘இவரைத் தவிர வேறு யாரும் கச்சிதமா இந்தக் கேரக்டருக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள்’ என்று பாராட்டினார்கள். ஆனால், என்னுடைய தேர்வில் அவர்களுக்கு இருந்த சந்தேகம்தான் எனக்குப் பெரும் வருத்தமாக இருந்தது.

அந்தப் படத்தின் துவக்கத்தில் எனது அம்மா, அப்பா இருவரையும் வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருப்பதுபோல காட்டியிருந்தேன். எனது மண்.. எனது ஊர்.. எனது கலாச்சாரம்.. எனது மொழி.. என் பண்பாடு.. என்று எனக்குள் விதைக்கப்பட்டிருந்த கதைகளை நான் வெளிப்படுத்தும் வாய்ப்பு என் தாய், தந்தையால்தான் எனக்குக் கிடைத்தது. அவர்களை ஒரு காட்சியில் உலகத்திற்குக் காட்ட நினைத்து அதில் நான் பெருமிதமடைந்தேன்.

படத்தில் ‘முத்துப் பேச்சி’யாக நடித்த ரேவதி பரத நாட்டிய டான்ஸர். மிக அழகாக முக பாவனைகளைக் காட்டுவார். ஆனால் ‘வெட்கப்படு’ என்று நான் சொன்னபோது அதனை அவரால் தன் முகத்தில் கொண்டு வர முடியவில்லை. இதற்காக என்ன செய்தோம் என்றால், ரேவதியின் இடுப்பில் மெல்லிசாக ஒரு குச்சியால் வருடியபோது அவர் சற்று நாணி கோணினார். ‘ஓகே.. இதுதான் வெட்கம்..’ என்று சொல்லி எடுத்து முடித்தேன். இதுபோல அந்தப் படத்தில் எண்ணற்ற அனுபவங்கள் எனக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வினு சக்கரவர்த்தி ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். என்னை முதன்முதலில் பார்க்க வந்தபோது கதை சொல்லத்தான் வந்தார். அவர் சொல்லிய கதை ‘வண்டிச்சக்கரம்.’ பின்னர் அந்தக் கதை படமாக வந்து நன்றாக ஓடியது.

இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு யாரை போடலாம் என்று எனக்கு யோசனை வந்தபோது பட்டென்று நினைவுக்கு வந்தது வினு சக்கரவர்த்தியின் முகம். உடனேயே அவரை வரவழைத்து நடிக்க வைத்தேன். மறக்க முடியாத ஒரு கேரக்டரை செய்தார் அவர்.

இதேபோல்தான் காந்திமதி. அவங்க என்னுடைய நாடகத்தில் நடித்த நடிகை. கடைசியாக நான் மயிலாப்பூர் நாடக சபாவில் போட்டிருந்த நாடகத்தில்கூட அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களெல்லாம் கை தட்டல்களை வாங்கின. அப்படியொரு வசனங்களை.. அந்த மண்ணின் மனம் கமிழ.. மதுரை வட்டார வழக்கோடு எழுதியிருந்தார் என் நண்பன் கலைமணி.

இந்தப் படத்தில் விஜயன் இடம் பெற்ற ஒரு காட்சி வரும். தன்னுடைய மாட்டை கொன்றுவிட்டு.. தானும் செத்துப் போகும் காட்சி. அப்போதைய காலக்கட்டத்தில் ரவுண்ட் டிராலி வசதியெல்லாம் இல்லை. அதனால் எனது ஒளிப்பதிவாளரான கண்ணன் தனது தோளில் கேமிராவை வைத்துக் கொள்ள.. அவரையும் ஒருவர் சுமந்து கொண்டு சுற்றிச் சுற்றி வந்து அந்த ஷாட்டை ஒரு விடியற்காலையில் எடுத்தோம். இன்றைக்கும் அந்தப் படத்தைப் பார்க்கும்போது அற்புதமான ஒரு காட்சியாக அது தெரியும்.

‘ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையே’ என்ற ஒரு பாடலும் இந்தப் படத்தில் இருக்கிறது. உண்மையில் இந்தப் பாடல் இந்தப் படத்துக்காகப் போடப்படவில்லை. அது வேறொரு ராணுவம் சம்பந்தப்பட்ட என்னுடைய கதைக்காகப் போடப்பட்ட பாடல். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதால் அந்தப் பாடல் அப்படியே இருந்தது. அந்தப் பாட்டை இதில் பயன்படுத்த நினைத்தேன்.

அந்தப் பாட்டில் இடையிடையே துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சப்தம்.. பரபரப்பாக ஓடும் இசை என்பதெல்லாம் இருக்கும். ‘இதை வைச்சு நீ எப்படிய்யா இந்தப் படத்துல காட்சியமைப்ப..?’ என்று இளையராஜா என்னிடம் கேட்டான். ‘நீ இருக்குற மியூஸிக்லேயே என்னென்னமோ பண்றீல்ல.. அது மாதிரிதான். நான் செஞ்சு காட்டுறேன்..’ என்று சொல்லி அந்தப் பாடல் காட்சியை பிரமாதமாக எடுத்தேன். இன்றைக்கும் அந்தப் பாடல் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும்..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.