நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழாக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கினார். படத்தின் பெயர் ‘வர்மா’. பாலாவின் படம் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், பாலா எடுத்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு அது பிடிக்கவில்லை. அர்ஜூன் ரெட்டியின் கதையை தமிழுக்கு ஏற்றாற்போல் பாலா கொஞ்சம் மாற்றியிருந்தார். இது தொடர்பாக அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கடைசியில் படத்தை வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் மறுத்துவிட்டார்.
அதே கதையை வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் ஷூட் செய்வதாக அறிவித்தார். தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு நடிகர் விக்ரமும் சம்மதம் தெரிவிக்க பாலா உருவாக்கிக் கொடுத்த ‘வர்மா’ திரைப்படம் அப்போதைக்கு மூலைக்குப் போனது.
பின்னர் பாலாவுக்கு பதிலாக கிரிசாயா என்பவரை இயக்குநராக வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரிலேயே மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பாலா இயக்கிய படத்தில் இருந்து எந்த காட்சியையும் பயன்படுத்தாமல் படத்தை எடுத்தனர். துருவ்வின் தோற்றத்தையும் மாற்றினர். கதாநாயகிகளாக பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஆனால் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்த நிலையில் பாலா இயக்கி அமைதியாக மூலையில் முடங்கிக் கிடந்த ‘வர்மா’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார். இதன்படி வருகிற 6-ம் தேதி ‘வர்மா’ திரைப்படம் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி இந்தியாவில் வர்மா திரைப்படம் The Ally, Shreyas ET & Shemaroo Me ஆகிய ஓ.டி.டி. தளங்களிலும், இந்தியா தவிர்த்த பிற பிரதேசங்களில் Simply South & Tentkotta ஆகிய ஓ.டி.டி. தளங்களிலும் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.