CYNTHIA PRODUCTION தயாரிப்பில் ‘இசைஞானி’ இளையராஜா பாடல்களை எழுதி, இசையமைக்க… ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘தினசரி’.
ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்டே, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாந்தினி தமிழரசன் சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – சிந்தியா பிரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் – சிந்தியா லூர்டே, எழுத்து & இயக்கம் – சங்கர், போஸ்ட் புரொடக்ஷன் இயக்குனர் – தினேஷ் தீனா, இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் யாதவ், படத்தொகுப்பு – ஸ்ரீகாந்த், சண்டை இயக்கம் – ஸ்ட்னர் சாம், நடனம் – தினேஷ் குமார், பத்திரிக்கை தொடர்பு – இரா. குமரேசன்.
ஹீரோ ஸ்ரீகாந்த் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார். இதுவரையில் 5 பெண்களை பார்த்துவிட்டு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். காரணம் ஸ்ரீகாந்துக்கு மிகப் பெரிய ஆசைகள் உண்டு. சொந்த வீடு வாங்க வேண்டும். நிறைய பணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதெல்லாம் அவருடைய எண்ணம்.
இதற்காக அவருடைய ஒருவரின் சம்பளமே பத்தாது என்பதால், தான் திருமணம் செய்யப் போகும் பெண் தன்னைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்கின்ற ஒரே ஒரு கொள்கையுடன் தனக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.
இதுவரையில் நிறைய பெண்களை பார்த்தும் ஸ்ரீகாந்த் ஓகே சொல்லாததால் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஆறாவது பெண்ணாக படத்தின் நாயகியான சிந்தியா லுடே கிடைக்கிறார். இவரையும் விட்டுவிட்டால் தன் மகனுக்கு திருமணம் ஆகாது என்று நினைக்கும் அவருடைய அம்மா மீரா கிருஷ்ணன் தந்திரமாக சில பொய்களை சொல்லி திருமணத்திற்கு ஸ்ரீகாந்தை சம்மதிக்க வைக்கிறார்.
“திருமணமான உடன் நான் வேலைக்கு போகமாட்டேன். வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்ற கொள்கையில் இருப்பவர் சிந்தியா. இது தெரியாமல் ஸ்ரீகாந்த் அவரை திருமணம் செய்து கொள்ள அன்றைய முதல் இரவிலேயே இந்த விஷயம் அவருக்கு தெரிந்து வீடு ரணகளம் ஆகிறது.
ஆனாலும் சிந்தியா “நான் வேலைக்கு போக மாட்டேன்” என்று உறுதியாய் இருக்கிறார். “நடந்தது நடந்து போச்சு.. நீ என்ன செய்ய முடியும்… அப்படியே குடும்பத்தை ஒட்டிக்க” என்று அவருடைய அக்காவும், அம்மாவும் அட்வைஸ் செய்ய வேறு வழியில்லாமல் சிந்தியாவுடன் வாழ தலைப்படுகிறார் ஸ்ரீகாந்த்.
ஏற்கனவே சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் . இன்னொரு பக்கம் தான் சம்பாதித்து வைத்த பணத்தை எல்லாம் சிட்பண்டில் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். நிறைய இடங்களில் கடன் வாங்கி இருக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று சிட் பண்ட் கம்பெனி மூடிவிட்டுப் போக ஸ்ரீகாந்தின் மொத்த சேமிப்பு பணமும் பறி போகிறது. இதற்கிடையில் அவருடைய அலுவலகத்திலும் பெரும் பிரச்சனையாகி அவருடைய வேலைக்கும் உலை வைத்து விடுகிறார்கள். கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து கடன் கேட்டு மிரட்ட கிட்டத்தட்ட தெருவுக்கு வந்துவிடும் நிலைமையில் இருக்கிறார் ஸ்ரீகாந்த்.
இனி அவர் என்ன செய்யப் போகிறார்..? அவரை யார் காப்பாற்றினார்கள்..? அவருடைய குடும்ப வாழ்க்கை என்ன ஆனது..? என்பதுதான் இந்த படத்தின் மீதம் உள்ள கதை.
மிகச் சிறந்த இயக்கத்துடன், மிகச் சிறந்த வசனங்களுடன் படம் நகர்த்தப்பட்டு இருப்பதால் படத்தின் அனைத்து கதாபாத்திரங்கள் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஸ்ரீகாந்தும் விதிவிலக்கல்ல.
ஸ்ரீகாத்துக்கு நிச்சயம் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி படம் என்று சொல்லலாம். இதுவரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாவற்றையும்விட இந்தப் படத்தில்தான் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.
தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை முதலிரவில் அறிந்து கொண்டு நடு வீட்டில் நின்று கொண்டு கத்திக் கூச்சல் போடும்விதமும், மனைவியை எதிர்த்துக் கொண்டு மனைவியைப் பிடிக்காமல் அவர் பேசுகின்ற பேச்சுக்களும், செயல்களும், குடும்பத்தில் அனைவரையும் பகைத்துக் கொண்டு அவர் படுகின்ற பாடும் நிச்சயம் ஸ்ரீகாந்துக்கே இந்த நடிப்பு ஒரு புதுமையாகத்தான் இருக்கும்.
நாயகியாக நடித்த சிந்தியாதான் இந்தப் படத்தை தயாரிப்பாளர் என்பதால் தானே நடிக்க வேண்டும் என்று சொல்லி நடித்து விட்டார் போலும்..! அவருடைய கேரக்டரில் யாராவது புது நடிகைகள் அல்லது ஏற்கனவே நடித்துக் கொண்டு இருக்கும் லீடிங் நடிகை யாரேனும் ஒருவர் நடித்திருந்தால் அந்தக் கேரக்டர் இன்னும் அதிகமாக பேசப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பொறுப்பான அப்பாவான எம்.எஸ்.பாஸ்கர் தன் மகன் ஸ்ரீகாந்துக்கு பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. பணம் நிம்மதியை தராது. ஆனால் அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அந்த பயன்படுத்துதல் முறைதான் நமக்கு நிம்மதியை கொடுக்கும் என்று பல கட்டங்களில், பல முறைகளில், பல காட்சிகளில், பல வசனங்கள் மூலமாக ஸ்ரீகாந்துக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
அந்த அட்வைஸ் ஸ்ரீகாந்துக்கு மட்டுமல்ல… படம் பார்க்கின்ற அத்தனை நேயர்களுக்கும், அத்தனை ரசிகர்களுக்கும் தேவையானது. எம்.எஸ்.பாஸ்கரின் பண்பட்ட நடிப்பு இதற்கு மிகவும் உதவி இருக்கிறது. கங்கிராட்ஸ் சார்.
அம்மாவாக நடித்த மீரா கிருஷ்ணனுக்கே இந்த படம் நிச்சயமாக லக்குதான். அப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்திருக்கிறது. தன் மகனுக்காக எப்படியாவது ஒரு திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று துடியாய் துடிப்பவர்… கடைசி கட்டத்தில் மகன் என்ன சொன்னாலும் சரி… ஒரு பொய் சொல்லியாவது கல்யாணத்தை நடத்தி விடுவோம் என்று பொய், பொய்யாக சொல்லுகின்ற அந்தக் காட்சியில் மிகவும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள் மேடம்.
அக்காவாக நடித்திருக்கும் வினோதினியும் ஒரு பக்கம் ஸ்ரீகாந்தையும் சமாளித்து அம்மா, அப்பாவை சமாளித்து எப்படியாவது தம்பிக்கு ஒரு திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று துடைக்கின்ற துடிப்பும் அதற்காக காட்டுகின்ற நடிப்பும் அசத்தல் என்றே சொல்லலாம்.
அதிலும் முதலிரவில் பிரச்சனை வெடித்தவுடன் ஸ்ரீகாந்த் அவருடைய அக்காவை கொலை வெறியோடு தேடிக் கொண்டு வர, அவர் பாத்ரூமுக்குள் வந்து கதவை சாத்திக் கொண்டு நடந்தவைகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றபோது அவரும், அவருடைய அம்மா மீரா கிருஷ்ணனும் படுகின்ற அந்த அவஸ்தையால் தியேட்டரே அதிர்கிறது. வாழ்த்துக்கள் வினோதினி மேடம்.
அலுவலக நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி, சாந்தினி தமிழரசன் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிரேமிஜியின் வாழ்க்கைக் கதையும் நகைக்க வைக்கிறது. இரண்டு காட்சிகள் என்றாலும் புரோக்கராக நடித்திருக்கும் சாம்ஸ் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும்படியாக அமைந்திருக்கிறது. இசைஞானியின் பழைய பாடல்களை கச்சிதமாக தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். அந்த வீட்டுக்குள்ளேயே நடக்கின்ற காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருக்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரியான ஒளிப்பதிவைக் கொடுத்திருப்பது பாராட்டக் கூடியது. படத் தொகுப்பு செய்திருக்கும் ஸ்ரீகாந்தும் நிச்சயம் படத்தை ஆழ்ந்து ரசித்து செய்திருப்பார் என்று நினைக்கிறோம். ஏனெனில் நாயகன் ஸ்ரீகாந்த் செய்திருக்கும் அத்தனை நடிப்புகளையும், அத்தனை கதறல்களையும் மிக அழகாக கத்தரித்து நமக்கு கொடுத்திருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகாந்த்.
தற்போதைய இளைஞர்கள் பலருமே வேலைக்குச் சேர்ந்த உடனேயே சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இஎம்ஐ கட்டினாலும் பரவாயில்லை என்று சொல்லி, இஎம்ஐ பற்றிய சிந்தனையே இல்லாமல் உடனடியாக ஒரு சொந்த வீட்டை வாங்கி விட வேண்டும் என்ற கனவில் குதிக்கிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் வேலை பறி போன பின்பே, இஎம்ஐ கட்டுவதற்காக அவர்கள் படுகின்ற கஷ்டம் சொல்லி மாளாது. பல இளைஞர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த ரத்தக் கண்ணீர் வடிக்கின்ற கதையைத்தான் இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
வாழ்க்கைக்குப் பணம் தேவைதான். ஆனால் அந்த பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது. மிகப் பெரிய அளவுக்கு கடன் வாங்குவதைவிட தேவைக்காக மட்டுமே கடன் வாங்கி தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது என்பதுதான் இந்த படம் நமக்கு சொல்லும் நீதி.
நிச்சயம் இந்தப் படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும். இந்தக் காலத்திய 2 கே கிட்ஸ்களுக்குத் தேவையான ஒரு படிப்பினையை இந்தப் படம் சொல்கிறது. இதை நாம் காது கொடுத்து கவனிக்க வேண்டும்.
நம்முடைய குழந்தைகளையும் இந்தப் படத்திற்கு அழைத்துச் சென்றால் அவர்களுக்கும் இதில் சொல்லப்பட்டிருக்கும் எப்படி வாழ்வது என்கிற விஷயம் புரியும்.. தெரியும்… அவர்களும் கற்றுக் கொள்வார்கள்.
மிஸ் பண்ணிராதீங்க..!
RATING : 4 / 5









