full screen background image

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் முழுமையான திரைக்கதை..!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் முழுமையான திரைக்கதை..!

துருவங்கள் பதினாறு – திரைக்கதை

கதாபாத்திரங்கள் :

1.ரகுமான் – தீபக்

  1. பிரகாஷ் – கெளதம்
  2. பிரதீப் – ராஜன்
  3. சந்தோஷ் கிருஷ்ணா – ஃபாபியன்
  4. கார்த்திகேயன் – மெல்வின்
  5. பிரவீன் – மனோ
  6. பாலா ஹாசன் – பிரேம்
  7. வினோத் வர்மா – க்ருஷ்
  8. யாஷிகா – ஸ்ருதி
  9. அஞ்சனா – வைஷ்ணவி
  10. டெல்லி கணேஷ் – ராம்
  11. ஷரத்குமார் – பேப்பர் போடும் ஆள்

முழுமையான திரைக்கதை :

ஊட்டியில் தனது வீட்டின் வெளிப்புறத்தில் தோட்டத்தில் கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் நின்று கொண்டிருக்கும் நிலையில் ரகுமான் அறிமுகமாகிறார்.

ரகுமானிடம் அவரது போலீஸ் நண்பர் ஒருவர் போனில் பேசுகிறார். தனது மகன் ஐ.பி.எஸ். ஆகியே தீருவேன் என்று அடம் பிடிப்பதாகவும், அவனை வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்கும்படி கன்வின்ஸ் செய்து அனுப்பும்படியும் கேட்கிறார்.

ரகுமானும் இதற்கு ஒத்துக் கொண்டு அவரது மகனை அனுப்பி வைக்கும்படி சொல்கிறார்.

ரகுமானை சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான். தனது நண்பரின் மகன் என்று நினைத்து அவனிடத்தில் ரகுமான் பேசத் துவங்குகிறார்.

ரகுமானுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி அந்த இளைஞன் கேட்க.. “அதுல உனக்குத் தெரிஞ்சவரைக்கும் கதையைச் சொல்லு…” என்று ரகுமான் கேட்க. அந்த இளைஞன் ரகுமான் உடல் ஊனம் அடைந்த கதையை சொல்லத் துவங்குகிறான்.

கோவையில் ஓரிடத்தில் நள்ளிரவு 3 மணிக்கு மூன்று இளைஞர்கள் காரில் பேசியபடியே வரும்போது திடீரென்று ஒரு விபத்து ஏற்கிறது. ஒரு இளைஞன் காரில் மோதி தாக்கப்பட்டு கீழே விழுகிறான். அவனைத் தூக்கி தங்களது காரின் டிக்கியில் ஏற்றிக் கொண்டு இளைஞர்கள் கிளம்புகிறார்கள்.

வழியில் போக்குவரத்து போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்கள். காலையில் ஸ்டேஷனுக்கு வந்து காரை எடுத்துக் கொள்ளும்படி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்ல.. கோபமாகி போலீஸை அடித்து வீழ்த்திவிட்டு காருடன் அந்த இளைஞர்கள் தப்பிக்கிறார்கள்.

தங்களது வீட்டுக்கு வந்து காரை நிறுத்திவிட்டு, காலையில் பாடியை எங்கேயாவது டிஸ்போஸ் செய்துவிடலாம் என்று திட்டம் போடுகிறார்கள்.

இதுவரையிலும்தான் தனக்குக் கதை தெரியும் என்று சொல்லிவிட்டு இளைஞன் நிறுத்திக் கொள்ள.. ரகுமான் கதையைச் சொல்லத் துவங்குகிறார்.

கோவை, சாயிபாபா காலனி போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டரான ரகுமான் அன்றைய நாள் காலை 9 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்.  இரவெல்லாம் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என்கிறார் ஏட்டு. தன்னுடைய செல்போனை போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன் என்கிறார் ரகுமான். அவருடைய செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃபாக இருக்கிறது. அதனை போலீஸ் ஸ்டேஷனிலேயே சார்ஜ் போடுகிறார் ரகுமான்.

நள்ளிரவில் பாரதி பூங்கா அருகில் ஒரு இளைஞன் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக ஏட்டு சொல்கிறார். அவனுடைய உடலை மருத்துவமனைக்கு கொண்டு போயாகிவிட்டது என்கிறார் ஏட்டு.

அந்தப் பகுதியில் பேப்பர் போடும் மாரிமுத்துதான் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்ததாகவும் சொல்கிறார் ஏட்டு. ஸ்டேஷனில் காத்திருந்த மாரிமுத்துவை விசாரிக்கிறார் ரகுமான். வேறேதுவும் தகவல் கிடைக்காததால் முகவரியைக் கொடுத்துவிட்டு செல்லும்படி மாரிமுத்துவிடம் சொல்கிறார் ரகுமான்.

போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கு வரும் மாரிமுத்து தான் இரவில் பார்த்த அதே வெள்ளை நிற கார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்பதை பார்த்து கத்திக் கூப்பாடு போடுகிறார். ஏட்டு வாசலுக்கு வந்து பார்ப்பதற்குள் அந்தக் கார் பறந்துவிடுகிறது.

ரகுமானும் வாசலுக்கு வந்து பார்த்து விபரம் தெரிந்து கொள்கிறார். ஏட்டு, மாரிமுத்துவை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.

ரகுமான் பாரதி பூங்காவிற்கு வந்து இளைஞன் இறந்து கிடந்த இடத்தைப் பார்வையிடுகிறார். ஏட்டுவின் செல்போனை வாங்கி அதன் மூலம் பிரேதப் பரிசோதனை பார்மாலிட்டிக்காக மருத்துவமனையில் இருக்கும் அதிகாரிகளிடம் பேசுகிறார் ரகுமான்.

அந்த இடத்தில் ஸ்பாட் செக்யூரிட்டியாக நின்றிருந்த புதிதாக வேலையில் சேர்ந்த கெளதம் என்னும் கான்ஸ்டபிள், இந்த வழக்கு பற்றி ஆர்வமாகப் பேச.. அவனையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

திரும்பும் வழியில் ஏட்டுக்கு போன் வருகிறது. அருகில் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டதாக புகார் என்கிறார்கள். அந்த அபார்ட்மெண்ட்டுக்கு வருகிறார்கள் மூவரும்.

அங்கே ஸ்ருதி என்ற இளம் பெண்ணைக் காணவில்லை. ஆனால் வீட்டில் ரத்தச் சிதறல்கள் இருப்பதாகச் செய்தியறிந்து ரகுமான் விசாரிக்கிறார். அந்த வீட்டில் இருந்த வைஷ்ணவியிடம் காணாமல் போன ஸ்ருதி பற்றியும், நடந்தவைகளைப் பற்றியும் விசாரிக்கிறார்.

வைஷ்ணவியை பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும்படி சொல்லிவிட்டு தடய அறிவியல் துறையின் அதிகாரிகளுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு அவர்களை இங்கே வந்து சோதனையிடும்படி சொல்கிறார் ரகுமான்.

பின்னர் ஏட்டுவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு திரும்பும் வழியில், ரகுமானிடம் தனக்கு அதே பகுதியில் வசித்து வரும் மூன்று இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதாகச் சொல்கிறான் கான்ஸ்டபிள் கெளதம். அவர்கள் தினமும் இரவு நேரத்தில் தாமதமாகவே வீடு திரும்புவதை தான் கவனித்திருப்பதை கெளதம் சொல்ல.. அவர்களின் வீட்டுக்கு செல்கிறார்கள் மூவரும்.

அங்கே அந்த மூவருடன் பேப்பர் போடும் மாரிமுத்துவும் இருக்கிறார். மாரிமுத்துவை அனுப்பிவிட்டு அவர்கள் மூவரிடமும் விசாரணை செய்கிறார் ரகுமான்.

வீட்டைச் சோதனையிட்ட ஏட்டுவும், கெளதமும் வீட்டில் எதுவுமே இல்லை என்கிறார்கள். அதே சமயம் வாசலுக்கு வரும்  ரகுமான் அவர்களது காரின் டிக்கியை திறந்து பார்த்துவிட்டு பின்னர் அதை மூடிவிட்டு வேகமாக காரில் ஏறி புறப்படுகிறார். அதுவரையில் டென்ஷனில் இருந்த அந்த மூவரும், ரகுமானின் செயலை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.

திரும்பவும் ஊட்டியில் நிகழ் காலத்திற்கு வரும் ரகுமான் கதையின் போக்கு பற்றி அந்த இளைஞனிடம் பேசுகிறார். அவருக்கு கூரியர் ஒன்று வர அதை வைப்பதற்காக வீட்டுக்குள் வருகிறார் ரகுமான்.

அந்த நேரத்தில் அவருக்கு போன் வருகிறது. அதே போலீஸ் நண்பர் பேசுகிறார். தன் மகன் வரவில்லை என்றும் “தொந்தரவிற்கு மன்னிக்கணும்…” என்கிறார். ‘அப்போ இத்தனை நேரம் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பது யார்?’ என்று தெரியாமல் திகைப்பாகிறார் ரகுமான். எதற்கும் இருக்கட்டுமே என்றெண்ணி வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன் இடுப்பில் சொருகிவிட்டு மீண்டும் அந்த இளைஞனின் எதிரில் வந்து அமர்கிறார்.

இப்போது “நீ யார்..?” என்று அந்த இளைஞனிடம் கேட்கிறார் ரகுமான். “இதை முதல்லேயே கேட்டிருக்கணும். இப்போ கேட்டால் எப்படி..? ஏதோ முன்னாடியே பழகின மாதிரி கேட்டதால நானும் தொடர்ந்து பேசினேன். இப்போ அந்த மீதிக் கதையைச் சொல்றீங்களா..? சுவாரஸ்யமா இருக்கு..” என்று அந்த இளைஞன் ஆர்வமாகக் கேட்க.. ரகுமான் மீண்டும் சொல்லத் துவங்குகிறார்.

ஸ்ருதி காணாமல் போன செய்தியை போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு காலை 7.15 மணிக்கு வைஷ்ணவி புகார் செய்து சொல்லியிருக்க.. அதை 9.30 மணிவரையிலும் தன்னிடம் தெரிவிக்காமல் விட்டதற்காக ஸ்டேஷனுக்கு புதிதாக வேலைக்கு வந்திருக்கும் கான்ஸ்டபிளிடம் கடிந்து கொள்கிறார் ரகுமான்.

அந்த புதிய கான்ஸ்டபிள் பேச்சுவாக்கில் அந்த அபார்ட்மெண்ட்டில் இருந்த ஸ்ருதி நேற்றைக்கு ஸ்டேஷனுக்கு வந்து மனோ என்ற பையன் மீது ஈவ் டீஸிங் புகார் கொடுத்ததாகச் சொல்கிறார்.

இதையறிந்த ரகுமான் மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து இளைஞர்கள் மூவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கிறார். இப்போது அந்த மூவரில் மனோ என்ற பெயருடைய இளைஞன், ஸ்ருதியை சென்ற வாரம் தாங்கள் மூவரும் நடுரோட்டில் பார்த்ததாகவும், ஸ்ருதி தன்னுடைய டூவீலரில் வேகமாக வந்து தங்களின் கார் மீது மோதியதாகவும், அதற்குப் பின் ஸ்ருதியை தான் பார்க்கவே இல்லை என்றும் அடித்துச் சொல்கிறான்.

இடையில் பாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள் ஸ்ருதியின் வீட்டுக்கு வந்து சோதனையிட்டுக் கொண்டிருக்க, அதைப் பார்வையிட மீண்டும் அங்கே செல்கிறார் ரகுமான்.

அந்த வீட்டில் இருந்த ரத்தக் கறைகள் ‘ஏ’ மற்றும் ‘பி’ பாஸிட்டிவ் என்று இரண்டுவித மாதிரிகளில் இருப்பதாகத் தெரிவிக்கிறார் தடயவியல் சோதனை அலுவலர். கெளதமை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் கிளம்புகிறார் ரகுமான்.

அந்த அபார்ட்மெண்ட் வீட்டு வாசலில் ஹேண்டி கேமிராவைக் கையில் பிடுங்கி வைத்துக் கொண்டு வாட்ச்மேன் மூன்று இளைஞர்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார் ரகுமான்.

ரகுமான் “என்ன விஷயம்..?” என்று கேட்க.. தன்னுடைய அனுமதியில்லாமல் அபார்ட்மெண்ட்டுக்கு வருவோர், போவோரை அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்ததாக வாட்ச்மேன் சொல்கிறார். அவர்களோ தாங்கள் குறும்படம் எடுத்ததாக மட்டுமே சொல்கிறார்கள். ரகுமான் அந்த கேமிராவை வாங்கித் தான் வைத்துக் கொண்டு பின்பு ஸ்டேஷனில் வந்து வாங்கிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போகிறார்.

ரகுமான் ஸ்டேஷனுக்கு வரும்போது இறந்து போன கிரிஷீன் அப்பாவான டெல்லி கணேஷ் தனது மகனை காணவில்லை என்று புகார் சொல்ல வந்திருக்கிறார்.  ரகுமான் அவரிடம் தன்மையாக அவருடைய மகன் இப்போது உயிருடன் இல்லை என்கிற தகவலைச் சொல்ல, அதிர்ச்சியடைந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறுகிறார் டெல்லி கணேஷ்.

அதற்குள் இரவாகிவிடவே ரகுமான் வீட்டுக்குக் கிளம்புகிறார். ராத்திரி டூட்டிக்கு இருப்பவர்கள் இருங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்புகிறார் ரகுமான்.

இரவு 10 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தவுடன் எதிர் வீட்டில் இருக்கும் ‘சிட்டிசன்’ சிவக்குமார், ரகுமான் வீட்டு வாசலில் யாரோ ஒருவர், காரிலேயே பல நிமிடங்கள் காத்திருந்ததாகவும், இப்போதுதான் கிளம்பிச் சென்றதாகவும் சொல்கிறார். அது யாராக இருக்கும் என்று யோசித்தபடியே வீட்டுக்குள் செல்கிறார் ரகுமான்.

வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஸ்டேஷனில் இருந்து ரகுமானுக்கு போன் வருகிறது. ஹேண்டி கேமிராவை கேட்டு இளைஞர்கள் மூன்று பேர் வந்திருப்பதாகச் சொல்ல.. கேமிரா தன்னுடைய காரில் இருப்பதாகவும், அதனால் அவர்களை நாளை காலை வந்து வாங்கிக் கொள்ளும்படி சொல்லி போனை வைக்கிறார் ரகுமான்.

ஸ்டேஷனில் இருந்து மறுபடியும் போன் செய்து, “அவர்களுக்கு நாளைக்கு பிராஜெக்ட் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இப்போதே கேமிராவை கேட்கிறார்கள் ஸார்…” என்கிறார் கான்ஸ்டபிள். உடனேயே அவர்களை வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி சொல்கிறார் ரகுமான்.

மறுபடியும் அந்த கான்ஸ்டபிள் போன் செய்து வீட்டு அட்ரஸை கேட்க.. ரகுமான் அதையும் சொல்கிறார். சில நிமிடங்களில் குறும்படம் எடுத்த இளைஞர்கள் ரகுமானின் வீட்டுக்கு வருகிறார்கள்.

அவர்களிடத்தில், “நீங்க குறும்படம்தான் எடுத்திருக்கீங்கன்றதுக்கு என்ன ஆதாரம்…?” என்று ரகுமான் கேட்க.. அவர்கள் தாங்கள் எடுத்ததை அவரிடத்தில் போட்டுக் காட்டுகிறார்கள்.

அப்போது அவர்களது வீடியோவில் வைஷ்ணவி முந்தைய நாள் இரவு 11 மணிக்கு ஒரு ஆட்டோவில் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து இறங்குவதும், அப்போது ஒரு வெள்ளை நிற கார் அந்த அபார்ட்மெண்ட் வாசலில் நிற்பதும் பதிவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார் ரகுமான்.

தன்னிடத்தில் காலை 7 மணிக்குத்தான் சென்னையில் இருந்து கோவை திரும்பியதாக வைஷ்ணவி சொன்னது ரகுமானுக்கு ஞாபகம் வருகிறது. வைஷ்ணவி பொய் சொல்லியிருப்பதை உணர்ந்த ரகுமான் உடனடியாக கெளதமுக்கு போன் செய்கிறார். அவனை மப்டி டிரெஸ்ஸில் உடனடியாக கிளம்பி வரும்படி சொல்கிறார்.

ரகுமானும், கெளதமும் அந்த அபார்ட்மெண்ட்டுக்கு செல்கிறார்கள். தாங்கள் இருக்க வைத்த பக்கத்து வீட்டில் வைஷ்ணவியை பற்றி விசாரிக்கிறார்கள். வைஷ்ணவி வாக்கிங் போய்விட்டு வருவதாகச் சொல்லி இப்போதுதான் புறப்பட்டுப் போனதாக அவர் சொல்ல.. இருவரும் பதட்டத்துடன் வெளியில் வருகிறார்கள்.

வைஷ்ணவி நிச்சயம் சென்னைக்குக் கிளம்பியிருக்கலாம் என்று நினைத்த ரகுமான் பஸ்ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே நிலையத்தில் வைஷ்ணவியைத் தேடுகிறார். அவள் கிடைக்கவில்லை.

ஆனால் அதே நேரம் வைஷ்ணவி வேறு உடை அணிந்த நிலையில் ராஜனுடன் பேருந்து நிலையத்தில் இருந்து எங்கோ கிளம்பிச் செல்கிறாள். பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் வைஷ்ணவியை கண்டுபிடிக்க அலைந்து முடியாமல் ஏமாற்றமாகிறார்கள் ரகுமானும், கெளதமும்.

இந்த நேரத்தில் அந்த இரவு வேளையில் மனோ மட்டும் ரோட்டில் நடந்து வருவதை பார்க்கும் ரகுமான் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அவனிடம் விசாரிக்கிறார்.

மனோ, தனது நண்பன் தன்னை அடித்துவிட்டதையும் அதற்கான காரணத்தையும் அவரிடத்தில் விளக்குகிறான்.

காரில் அடிபட்டு செத்தவனைத் தூக்கி தங்களது காரின் டிக்கியில் போட்டு எடுத்துச் சென்றதை பேப்பர் போடும் மாரிமுத்து பார்த்து விடுகிறான். மறுநாள் காலை அவர்களது வீட்டுக்கு வந்து 10 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்கிறான்.

வீட்டு ஓனரின் பையன் பணத்தைப் புரட்ட முயன்றும் பணம் இல்லாமல் வெறும் ஐம்பதாயிரம் ரூபாயை மட்டுமே மாரிமுத்துவிடம் கொடுத்து சமாளிக்கிறான்.

இந்தப் பிரச்சினை குறித்து நண்பர்களுக்குள் வாக்குவாதம் வர.. அந்த நேரத்தில் தன்னை அவன் தாக்கிவிட்டதாக மனோ சொல்கிறான். இது பற்றி போலீஸிடம் புகார் கூறத்தான் தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறான் மனோ.

ரகுமான் அவனை வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்திவிட்டு, மாரிமுத்து இனிமேல் அவர்களை தொந்திரவு செய்யாமல் தான் பார்த்துக் கொள்வதாகவும் சொல்கிறார்.

மீண்டும் ரகுமான் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து வர.. அங்கே மாரிமுத்துவின் வீட்டு அட்ரஸ் தயாராக இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள் ரகுமானும், கெளதமும்.

மாரிமுத்துவின் வீட்டில் அவனை மிரட்டி நடந்தவைகளை கேட்கிறார் ரகுமான். மாரிமுத்துவும் அந்த மழை கொட்டும் இரவில் தான் பார்த்தவைகளை அப்படியே ரகுமானிடம் சொல்கிறான்.

மாரிமுத்து காலை 3 மணிக்கு பேப்பர் எடுப்பதற்காக சைக்கிளில் வர.. வழியில் ஒரு காரின் அருகில் கிருஷ் இறந்து கிடக்கிறான். மாரிமுத்து சைக்கிளை நிறுத்திவிட்டு கிருஷின் பக்கத்தில் வந்து பார்க்கும்போது, அந்தத் தெருவைக் கடந்து இந்த இளைஞர்களின் கார் செல்கிறது.

அது சென்ற வேகத்தில் யார் மீதோ மோதிய சப்தம் மாரிமுத்துவுக்கு கேட்க மாரிமுத்து ஓடிப் போய் பார்க்கிறான். அப்போது இளைஞர்கள் தங்களது கார் மீது மோதிய இளைஞனின் உடலைத் தூக்குவதையும், அந்த உடலை டிக்கியில் வைத்து பூட்டுவதையும் பார்க்கிறான்.

இவ்வளவை மட்டுமே தான் பார்த்ததாகச் சொல்லும் மாரிமுத்து, இதனை வைத்து அந்த இளைஞர்களிடத்தில் தான் பணம் பறிக்க முயன்றதாக ஒப்புக் கொள்கிறான்.

மீண்டும் காரில் செல்கிறார்கள் ரகுமானும், கெளதமும். இதுவரையிலும் நடந்தவைகளை கோர்வையாக்கி கெளதமிடம் சொல்கிறார் ரகுமான். கெளதமும் அதனை ஒத்துக் கொள்கிறான். “ஆனால், காணாமல் போன ஸ்ருதி கிடைத்தால்தான், கதை அடுத்தக் கட்டத்துக்கு நகரும்…” என்கிறான் கெளதம்.

அந்த நேரத்தில் அவர்களது காருக்கு முன்பாக அதே வெள்ளை நிற கார் போக.. அந்தக் காரின் நம்பரை வைத்து தாங்கள் தேடி வரும் கார் அதுதான் என்பதை நொடியில் கண்டுபிடிக்கிறான் கெளதம்.

சட்டென்று சைரனை ஒலிக்கவிடும் கெளதம் அந்தக் காரை துரத்துகிறான். இரண்டு கார்களும் மின்னல் வேகத்தில் ஒன்றையொன்று முந்திக் கொண்டு போகப் பார்க்க ரகுமான் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரகுமானின் வலது கால் நீக்கப்படுகிறது. வாக்கிங் ஸ்டிக்கின் உதவியால்தான் இனிமேல் அவரால் நடமாட முடியும் என்ற நிலைமை ஏற்படுகிறது.

மறுபடியும் ஊட்டி காட்சி. “இவ்வளவுதான் தனக்குத் தெரிந்தது…” என்று ரகுமான் சொல்ல அந்த இளைஞன் அதை ஏற்க மறுக்கிறான். ரகுமான் எதையோ மறைக்க முயல்வதாகக் கோபத்துடன் குற்றம் சாட்டுகிறான். அந்த இளைஞன் எதையோ எடுக்க முயல்வதை பார்த்து தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுக்க முயல்கிறார் ரகுமான்.

அதற்குள்ளாக அந்த இளைஞனே துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறான். இதைப் பார்த்து ரகுமானின் வீட்டில் இருப்பவர்கள் பரபரப்பாகிறார்கள். அதில் ஒரு வேலையாள் போலீஸுக்கு போன் செய்கிறான். ரகுமான் தனது வேலையாட்களை அருகில் வர வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.

“உங்களுக்கு தெரியும். எதையோ மறைக்கிறீங்க. சொல்லிட்டீங்கன்னா நல்லது…” என்று அந்த இளைஞன் ரகுமானிடம் மிச்சம் மீதிக் கதையையும் சொல்லும்படி மிரட்ட.. ரகுமான் மீண்டும் தொடர்கிறார்.

ரகுமான் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருப்பது தொலைக்காட்சி செய்திகளில் வாசிக்கப்பட்டு செய்தி பரவுகிறது. இந்தச் சூழலில் வைஷ்ணவி அவரை பார்க்க வருகிறாள். தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் தான் அவசரமாக சென்னை செல்ல வேண்டியிருந்ததால் சென்னைக்கு கிளம்பியதாகச் சொல்கிறாள்.

அன்றைக்கு நடந்த சம்பவம் குறித்து அதுவரையிலும் சொல்லாத விஷயத்தை வைஷ்ணவி ரகுமானிடம் இப்போது சொல்கிறாள்.

அந்த இரவில் 11 மணிக்கு வைஷ்ணவி வீடு திரும்புகிறாள். வீட்டுக்கு முன்பாக கிருஷும், அவனது நண்பனும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை யார் என்று விசாரிக்கிறாள் வைஷ்ணவி. தாங்கள் ஸ்ருதியின் நண்பர்கள் என்றும், இன்று அவளது பிறந்த நாள் என்பதால் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

“காலிங்பெல்  அடித்தும் திறக்கப்படவில்லை…” என்கிறார்கள். “நான் இப்பத்தான் போன் செய்தேன். அவ குளிக்கப் போறேன்னு சொன்னாள்…” என்று சொல்லும் வைஷ்ணவி, தன்னிடம் இருக்கும் சாவி மூலம் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைக்கிறாள்.

அப்போது நாசிக்கில் இருந்து ஸ்ருதியின் பாய்பிரெண்ட் ராஜன் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வந்து ஸ்ருதிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப் போவதாகச் சொல்கிறாள் வைஷ்ணவி.

ஹாலில் அமர்கிறார்கள் கிருஷும், அவனது நண்பனும். குளித்துவிட்டு வரும் ஸ்ருதி இவர்களைப் பார்த்து கோபப்படுகிறாள். “நான் ஏதாவது ஹாரஸ்ஸா சொல்றதுக்கு முன்னாடியே நீங்க வெளில போயிருங்க…” என்று கத்துகிறாள்.

ஆனால் கிருஷின் நண்பன், கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போடுகிறான். கிருஷ் ஸ்ருதியைப் பிடித்துக் கொள்ள.. அவனது நண்பன் வைஷ்ணவியை பிடித்துக் கொள்கிறான்.

கிருஷ் தன் கையில் துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டுகிறான். தான் இத்தனை நாட்களாக ஸ்ருதியை சுற்றி, சுற்றி வந்தும் அவள் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அவமானப்படுத்தியதாகவும், தன் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததையும் சொல்லி கோபப்படுகிறான். இதனால்தான் தன் உண்மையான பெயரான ‘கிருஷ்’ என்பதை மறைத்து ‘மனோ’ என்று பொய் சொன்னதாகச் சொல்கிறான் கிருஷ்.

இந்த நேரத்தில் நாசிக்கில் இருந்து வரும் ராஜன் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். அவனையும் வீட்டுக்குள் அழைக்கும் கிருஷ், ராஜனின் தலையில் துப்பாக்கியால் அடித்து அவனை கீழே விழ வைக்கிறான். பாதி மயங்கிய நிலையில் இருக்கிறான் ராஜன்.

அந்த நேரத்தில் கையில் கிடைத்த சின்ன கத்தியால் தன்னைப் பிடித்திருந்த கிருஷை காயப்படுத்துகிறாள் ஸ்ருதி. இதனால் கோப்பபடும் கிருஷ், ஸ்ருதியை படுக்கையில் சாய்த்து அவளை அலங்கோலப்படுத்துகிறான். இதனை கிருஷின் நண்பன் தனது செல்போனில் படமாக்கிக் கொள்கிறான்.

அரைகுறை மயக்கத்தில் இருக்கும் ராஜனையும், ஸ்ருதியையும் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள் கிருஷ். போகும்போது வைஷ்ணவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி “யார்கிட்டேயும் எதுவும் சொல்லக் கூடாது…” என்று சொல்லி எச்சரித்துவிட்டுப் போகிறான் கிருஷ்.

“அதன் பின் அவர்களிடையே என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியாது. உங்ககிட்ட புகார் கொடுத்துட்டு நானும் உங்க பதிலுக்காககத்தான் காத்திருந்தேன். திடீரென்று அன்று மாலையில் ராஜன் எனக்கு போன் செய்து, என்னை உடனடியாக ஏர்போர்ட்டுக்கு கிளம்பி வரும்படி அழைத்தான். அங்கேதான் ஸ்ருதியை நான் பார்த்தேன். நானும், ஸ்ருதியும் விமானத்தில் அப்போதே சென்னைக்கு கிளம்பிவிட்டோம்…” என்கிறாள் வைஷ்ணவி.

இப்படி நடந்ததை ரகுமானிடம் சொல்லியழும் வைஷ்ணவி, “நீங்க இதை நம்பலைன்னா இந்த வீடியோவை பாருங்கள்…” என்று சொல்லி கிருஷின் நண்பன் வைத்திருந்த செல்போனில் அந்த வீடியோவை ஓட விட்டுக் காட்டுகிறாள். இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சியான ரகுமான் கண் கலங்குகிறார்.

இப்போது மீண்டும் ஊட்டி காட்சி. “இதுக்கு மேல என்ன நடந்தது..?” என்று அந்த இளைஞன் திரும்பவும் கேட்க.. “இனிமேல் ஊகித்துதான் சொல்ல முடியும். இப்படித்தான் நடந்திருக்கிறதுன்னு நான் நம்புறேன்…” என்று சொல்லும் ரகுமான் தான் ஊகித்த கதையின் கிளைமாக்ஸை சொல்லத் துவங்குகிறார்.

“அபார்ட்மெண்ட் வாசலில் நிற்கும் காரில் ஸ்ருதி, ராஜன், தனது நண்பன் மூவரையும் ஏற்றிக் கொண்டு செல்கிறான் கிருஷ். வழியில் அவனது நண்பன் ஸ்ருதியை அனுபவிக்க தனக்கும் ஒரு சான்ஸ் வேண்டும் என்று கேட்க.. அவனுக்காக காரை வழியில் நிறுத்தி நண்பனை பின் சீட்டுக்குப் போகச் சொல்கிறான். அப்போது பின்னால் அமர்ந்திருந்த ராஜன்.. திடீரென்று வெளியில் வந்து கிருஷை தாக்குகிறான்.

இந்தத் தாக்குதலில் கிருஷின் கையில் இருந்த துப்பாக்கியால் கிருஷையே சுட்டுக் கொல்கிறான் ராஜன். கிருஷ் கீழே விழுந்தவுடன் கிருஷின் நண்பன் தப்பியோடுகிறான். ராஜன் அவனை துப்பாக்கியுடன் விரட்டுகிறான்.

ஓடிய கிருஷின் நண்பன், அந்த இளைஞர்கள் வந்த காரில் மோதி கீழே விழுந்து இறக்கிறான். அதையடுத்து அந்த நண்பர்கள் மூவரும் கிருஷின் நண்பனை தங்களது காரின் டிக்கியில் ஏற்றி கொண்டு செல்வதை ராஜன் பார்க்கிறான்.

அவர்கள் நாளை போலீஸில் சிக்கினால் தானும் மாட்டிக் கொள்வோம் என்பதை ஊகித்த ராஜன், அந்த நண்பனின் உடலைக் கைப்பற்ற நினைக்கிறான். உடனேயே கிருஷ் வந்த காரை எடுத்துக் கொண்டு சென்று, அந்த இளைஞர்களின் காரை பாலோ செய்கிறான் ராஜன்.

அந்த இளைஞர்கள் மூவரும் வீட்டுக்குள் சென்றவுடன் கேட்டில் ஏறிக் குதித்து உள்ளே சென்று காரின் டிக்கியை திறந்து அந்த இளைஞனின் உடலைத் தூக்கிக் கொண்டு வந்து, தன் காரின் டிக்கியில் போட்டுவிட்டு காரில் ஏறி புறப்படுகிறான் ராஜன். இறந்து போன அந்த உடலை, அந்த நள்ளிரவில் ஏரிக்கரையில் தூக்கிப் போட்டுவிட்டு ஸ்ருதியுடன் தப்பித்து ஓடிவிட்டான்..” என்கிறார் ரகுமான்.

இப்போது மீண்டும் ஊட்டி காட்சி. “இது பொய்…” என்கிறான் இளைஞன். “இல்லை… இதுதான் உண்மை…” என்கிறார் ரகுமான். “இது பொய்யென்றால் உண்மையை அறிந்த நீ யார். உனக்கெதற்கு இதில் இத்தனை ஆர்வம்…?” என்கிறார் ரகுமான்.

அப்போதுதான் அந்த இளைஞன் தான் யார் என்கிற உண்மையைச் சொல்கிறான். அவன் ரகுமானுடன் அன்றைய இரவில் காரை ஓட்டி வந்த கான்ஸ்டபிள் கெளதம்தான்.

அவனும் அந்த விபத்தில் சிக்கி 5 ஆண்டுகளாக கோமாவில் கிடந்திருக்கிறான். முகம் முழுவதும் அடிபட்டு கோரமாகிவிட்டதால் கொஞ்சம், கொஞ்சமாக அடையாளமே தெரியாத அளவுக்கு அவனது முகம் மாறிவிட்டது. இப்போது ரகுமானாலேயே அவனை அடையாளம் காண முடியவில்லை.

“இப்போ, இந்தக் கதையோட ஒரிஜினல் கிளைமாக்ஸ் எனக்குத் தெரிஞ்சாகணும். அந்த விபத்தினால் எனது போலீஸ் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. என்னுடைய லட்சியமே கலைஞ்சு போச்சு. நான் வாழக்கைல எல்லாத்தையும் இழந்து தோத்துப் போய் நிக்குறேன். எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். உண்மைக் குற்றவாளியை மறைக்க என்ன காரணம்..? அவனுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு..? சொல்லுங்க.. இல்லைன்னா சுட்ருவேன்…” என்கிறான் கெளதம்.

இந்த நேரத்தில் ஊட்டி போலீஸும் வந்து அவர்களைச் சுற்றி வளைத்து நிற்கிறார்கள். கெளதமிடம், துப்பாக்கியை கீழே போடும்படி ஒரு இன்ஸ்பெக்டர் கத்துகிறார். ஆனால் கெளதம் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேலும் கோபமாக ரகுமானிடம் பேசுகிறான்.

வந்திருப்பது கெளதம்தான் என்பதை அறிந்த ரகுமான் ஆனந்த அதிர்ச்சியடைந்து. “எதுக்கு கெளதம் துப்பாக்கியோட பேசணும்..? முன்னாடியே சொல்லியிருக்கலாமே..? முன்பே நீ வந்து என்னை பார்த்திருக்கலாமே?” என்கிறார்.

“நேற்றைக்கே வந்தேன். ஆனால் வரும்போது நான் இங்கே பார்த்த ஒரு காட்சி என்னை மாற்றிவிட்டது.. அந்த ஆக்ஸிடெண்ட் நடந்த அன்னிக்கு அந்த கார்ல இருந்த அவனை எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அவனை நேற்றைக்கு இங்க உங்களோட பார்த்துட்டேன். இப்போ உங்க மேலயே எனக்கு சந்தேகம் வந்திருக்கு.. இப்பவாவது உண்மையைச் சொல்லுங்க. அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..?” என்று என்று பொடி வைத்துப் பேசி மிரட்டுகிறான் கெளதம்.

ரகுமான் அவனது கோபத்தைப் புரிந்து கொண்டு கடைசிக் கட்ட கிளைமாக்ஸை சொல்கிறார்.

அந்த வெள்ளை நிறக் காரை பார்த்தவுடன் கெளதம் தனது போலீஸ் காரை வேகப்படுத்தி காரை பிடிக்கப் பார்க்கிறான். இரண்டு கார்களும் அருகருகே வரும்போதுதான் அந்த வெள்ளை நிறக் காரை ஓட்டிச் செல்வது தனது மகன் ராஜன் என்பது ரகுமானுக்கு தெரிகிறது.

‘ஓ.. அப்போ என்னைப் பார்க்கத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து காருடன் காத்திருந்தானா..? அப்போதுதான் பேப்பர் போடும் மாரிமுத்துவின் கண்ணில்பட்டானா..? என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்து காத்திருந்து எதிர்வீட்டு சிவக்குமார் கண்ணில் சிக்கினானா… அப்போ இவன்தான் இதற்கெல்லாம் காரணமா?’ என்பது புரிந்து, தெளிவதற்குள்ளாக ரகுமான் விபத்துக்குள்ளாகிவிட்டார்.

ஆனாலும் தனது மகன்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டு, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கே ஊட்டியில் அமைதியாக வாழ்கிறார் ரகுமான்.

“ராஜன் என் மகன்தான்…” என்று ரகுமான் சொல்லி முடிப்பதற்குள் கெளதமின் துப்பாக்கியில் இருந்து சீறிப் பாயும் குண்டுகள், ரகுமானின் உடலைத் துளைத்து அவரது உயிரைப் பறிக்கின்றன.

சுற்றியிருந்த போலீஸார் தங்களது துப்பாக்கியால் கெளதமைச் சுட்டுக் காயப்படுத்தி அவனை உயிருடன் பிடிக்கிறார்கள்.

                                நிறைவு..!     

Our Score