தனுஷ் தன்னை ஒரு சிறந்த தயாரி்பபாளராக மாற விரும்புகிறார் போலும்..!
இதுவரையில் சிவகார்த்திகேயனை வளர்த்தெடுத்து, வாய்ப்பளித்து.. அவரது பிரைட் பியூச்சருக்கு வழி வகுத்துக் கொடுத்தவர்.. இப்போது அவரது போட்டியாளராகவே இருக்கும் விஜய் சேதுபதியுடன் இணைகிறார்.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸின் நிறுவனத்தின் சார்பில் அடுத்து தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோவாம்.. படத்தின் பெயர் ‘நானும் ரவுடிதான்’.
ஹீரோயின், விஜய் சேதுபதி விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின்போது கடத்திப் போகவேண்டும் என்று ஆசைப்பட்டு பேசிய, அவர் மனம் கவர்ந்த நயன்தாராதான். இசை வழக்கம்போல அனிருத்துதான்.. இயக்கம் ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ்..
விஜய் சேதுபதிக்கு ஒரே கல்லில் மூணு மாங்காய்.. பட வாய்ப்பு ஒரு கல்லு.. சிவகார்த்திகேயனுக்கு ஒரு கல்லு.. நயன்தாராவுக்கு ஒரு கல்லு..! ஆக இந்த விநாயகர் சதுர்த்தியன்று உண்மையாகவே சந்தோஷத்தில் இருப்பவர் இவராகத்தான் இருக்கும்..!
தனுஷின் புதிய முயற்சிகளுக்கு நமது பாராட்டுக்கள். அப்படியே அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத்தையும் அடுத்தப் படத்தில் மாற்றிவிட்டால் புண்ணியமாக இருக்கும்..!
தமிழ் சினிமாவில் தமிழ் மொழியே அன்னியமாகிக் கொண்டிருப்பதை தடுக்கத்தான் தமிழில் தலைப்பின் பெயரை வைத்தால் வரிவிலக்கு என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதையும் கொஞ்சம் தளர்த்தி நடைமுறைத் தமிழுக்கும் இது பொருந்தும் என்றார்கள்.
ஆனால் அதற்காக இப்படி ரவுடி என்பதையும் ஆங்கிலத்திலேயே டைட்டிலில் வைத்துக் காண்பிப்பது நியாயமா..? இவர்களுக்கு வரிவிலக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.. அந்த அளவுக்கு பணக்காரர்களாக இருக்கலாம்.. ஆனால் இந்தப் படத்தின் தலைப்பில் ‘ரவுடி’ என்பதை ஆங்கிலத்தில் எழுதி காட்ட வேண்டிய அவசியமென்ன..?
மொழியின் மீதான அக்கறையில் விருப்பமில்லையென்றாலும் பரவாயில்லை.. கேவலப்படுத்தாமல் இருக்கலாமே..?