full screen background image

‘தமிழ் மகன்’ என்று வைக்க இருந்ததுதான் ‘தங்க மகன்’ என்று மாறியதாம்..!

‘தமிழ் மகன்’ என்று வைக்க இருந்ததுதான் ‘தங்க மகன்’ என்று மாறியதாம்..!

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்க மகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஆர்.வேல்ராஜ் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே தனுஷ், அனிருத், இயக்குநர் ஆர்.வேல்ராஜ் கூட்டணியில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ‘தங்க மகன்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வரும் டிசம்பர் 18-ம் தேதி ‘தங்க மகன்’ வெளியாவதையொட்டி, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் தனுஷ்.

அப்போது அவர் பேசும்போது, “தங்க மகன்’ சிறந்த பொழுது போக்கு படம். ‘வேலையில்லா பட்டதாரி’ போலவே குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

‘படிக்காதவன்’ படத்திற்குப் பிறகு எனது படங்களுக்கு ரஜினி படங்களின் டைட்டில் வைக்கவில்லை. முதலில் இந்தப் படத்திற்கு ‘தமிழ் மகன்’ என்றுதான் டைட்டில் வைத்தோம். ஆனால், எனது தயாரிப்பாளர் ஆசைப்பட்டதால்தான் ‘தங்க மகன்’ என்று டைட்டிலை மாற்றினோம்.  இந்த காலத்துல படம் தயாரிப்பதைவிட, பொருத்தமான டைட்டிலை வைப்பதுதான் ரொம்ப கஷ்டம். 

இதில் எனக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள். எமி ஜாக்சன் காதலியாகவும், சமந்தா மனைவியாகவும் நடித்திருக்கிறார்கள். இரண்டு பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எனக்கு அப்பாவாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். ஒரு பெரிய இயக்குநர் என்று நினைக்காமல் அனுபவம் வாய்ந்த நடிகராக நடித்திருக்கிறார். சிறந்த அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். வேல்ராஜ் ஸார் இயக்கத்தில் ஏற்கனவே ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற வெற்றி படத்தை கொடுத்திருக்கிறோம். அதே கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது..” என்றார்.

Our Score