full screen background image

‘தேவி-2’ – சினிமா விமர்சனம்

‘தேவி-2’ – சினிமா விமர்சனம்

ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதி, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, அஜ்மல் உட்பட பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம் – விஜய், இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – அயனங்கா போஸ், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – துர்கா பிரசாத் மகாபட்ரா, சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் பிரபுதேவா, கார்க்கி, நடன இயக்கம் – பரேஷ் ஷிரோத்கர், ஒலிப்பதிவு – எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பு – ஆன்ஷி குப்தா, ஒலி வடிவமைப்பு – அருண் சீனு, விளம்பர வடிவமைப்பு – முகில் டிசைன்ஸ் சக்ரவர்த்தி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இத்திரைப்படமும் உருவாகியிருக்கிறது.

தேவி முதல் பாகத்தின் முடிவில் மும்பையில் மிகப் பெரிய ஸ்டாராகும் கனவில் இருந்த ஆவி தமன்னாவை கஷ்டப்பட்டு மீட்டு கொண்டு வருகிறார் பிரபுதேவா.

இப்போது அதே மும்பையில் அதே வீட்டில்தான் வசிக்கிறார்கள் தமன்னாவும், பிரபுதேவாவும். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்போதும் வீட்டில் பேய் பவனி வருகிறதா என்று செக்கப் செய்தபடியே இருக்கிறார் பிரபுதேவா.

பேய் பற்றிய எண்ணம் வந்து கொண்டேயிருக்கிறதே என்றெண்ணிய பிரபுதேவா இது குறித்து ஒரு ஜோதிடரிடம் கருத்துக் கேட்கிறார். “நான்கு பக்கமும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் பகுதியில் குடி போனால் பேய் அங்கே வராது…” என்கிறார் ஜோதிடர்.

இதனால் தனக்கு மொரீஷியஸிற்கு பணி மாற்றல் வாங்கிக் கொள்கிறார் பிரபுதேவா. குழந்தையை மட்டும் பெற்றோர்களிடம்விட்டுவிட்டு, தம்பதியினர் மட்டும் மொரீஷியஸிற்கு வந்து சேர்கிறார்கள்.

வந்த இடத்தில் பிரபுதேவாவை பேய் பிடித்தாட்டுகிறது. ஒன்றல்ல. இரண்டு பேய்கள். இரண்டுமே ஆண் பேய்கள். அலெக்ஸ் பிரிட்டோ, ரங்கா ரெட்டி என்ற அந்த இரண்டு ஆண்களும் அந்தக் காதல் விவகாரம் தொடர்பாக அஜ்மலால் கொலை செய்யப்படுகின்றனர்.

தாங்கள் ஒரு தலையாய் காதலித்த பெண்ணை கைப்பிடிக்க நினைத்த நேரத்தில் அவர்களுக்கு மரணம் நிகழ்ந்ததால், காதலித்த அந்தப் பெண்களை பார்க்க விரும்பி பிரபுதேவாவின் உடலுக்குள் புகுந்து கொள்கின்றன.

இதைத் தாமதமாகத் தெரிந்து கொள்ளும் தமன்னா பேய்களைச் சமாதானப்படுத்த அவர்களின் காதலிகளையே சரிக்கட்டி பிரச்சினையை தீர்க்க முயல்கிறார். இதற்காக தன்னுடைய வழக்கறிஞர் தோழியான கோவை சரளாவின் துணையோடு அந்தப் பேய்களிடம் ஒரு சமாதான உடன்படிக்கையெல்லாம் செய்து கொள்கிறார் தமன்னா.

இதன்படி காலையில் இருந்து மதியம் வரையிலும் அலெக்ஸ் பிரிட்டோவின் ஆவி பிரபுதேவாவுக்குள் புகுந்து கொள்ளலாம். மதியத்தில் இருந்து மாலை வரையிலும் ரங்கா ரெட்டியின் ஆவி புகுந்து கொள்ளலாம்.

ஆனால், பிரபுதேவா வீட்டுக்குள் வந்த பின்போ, வீட்டுக்குள் இருக்கும்போதோ இரண்டு ஆவிகளும் அவரை ‘டச்’ செய்யவே கூடாது. இதுதான் ஒப்பந்தம். இதற்கு பேய்களும் ஒத்துக் கொள்கின்றன.

ஆனால் இந்த ஒப்பந்த ஷரத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு பிரச்சினைகள் சூழ்கிறது. அந்தப் பிரச்சினைகளை சமாளித்து பேய்களை விரட்டியடித்தார்களா.. இல்லையா… என்பதுதான் இந்த ‘தேவி-2’ படத்தின் திரைக்கதை.

‘தேவி’ முதல் பாகத்தில் தமன்னாவின் உடம்பில் பேய் புகும். இந்த பாகத்தில் பிரபுதேவாவின் உடம்பில் பேய் புகுகிறது. இதுதான் வித்தியாசம். மற்றபடி ‘தேவி’ முதல் பாகத்தில் இருந்த அளவுக்கான பயமுறுத்தல் காட்சிகளும், சுவாரஸ்யமான திரைக்கதையும் இந்தப் படத்தில் இல்லை என்பது சோகமான விஷயம்.

பிரபுதேவாவுக்கு மூன்று வித்தியாசமான கேரக்டர்கள். மூன்றையும் அனுபவித்துச் செய்திருக்கிறார். கிருஷ்ணாவாக அப்பாவி கேரக்டர். ரங்கா ரெட்டியாக அடாவடி கேரக்டர். அலெக்ஸ் பீட்டராக ஜெண்டிலான கேரக்டர் என்று மூன்றையும் சரிசமமாகவே செய்திருக்கிறார்.

மூன்றுவித கேரக்டர்களையும் அடுத்தடுத்து தனது உடம்புக்குள் புகுத்தி அதன்படி அவர் நடிக்கும் காட்சிகள் மட்டுமே சுவாரஸ்யமானவை. தமிழ், தெலுங்கு என்று மொழிப் பிரச்சினையுடன் பேய்களை சமாளிப்பது கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறது. மற்றவைகள் சிரிப்பை வழுக்கட்டாயமாக வரவழைப்பது போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமன்னாதான் படத்தைத் தாங்கியிருக்கிறார். அவருடைய அற்புதமான நடிப்பே படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். தனது கணவரை வேறு வேறு இடங்களில் பார்த்து குழம்புவதில் ஆரம்பித்து, அவருக்காக பேய்களிடம் மல்லுக்கட்டுவதுவரையிலும் ஒரு சராசரி பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதை அப்படியே செய்திருக்கிறார். இடையில் கணவரை கவர்வதற்காக ‘சிக்’கென்ற உடையில் ஒரு அயிட்டம் டான்ஸும் ஆடியிருக்கிறார். அது அக்மார்க் தமன்னா ரகம்.

கோவை சரளா சில நேரங்களில் ரசிக்க வைத்தாலும், பல பேய்ப் படங்களில் அவர் காட்டிய அதே நடிப்பைத்தான் இதிலும் காட்டியிருக்கிறார். கொஞ்சம் ஓவர் டோஸாகவும் தெரிகிறது.

நந்திதா ஸ்வேதாவும், டிம்பிள் ஹயாதியும் ஆளுக்கொரு நாயகிகளாக தங்களது பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். நந்திதாவுக்கு வைக்கப்பட்டிருக்கும் சில, பல குளோஸப் ஷாட்டுகள் மிக அழகு. ஆர்.ஜே.பாலாஜி சிறிது நேரமே என்றாலும் புலம்பி, புலம்பியே நம்மையும் புலம்ப வைக்கிறார்.

பேய்ப் படம் என்பதற்கேற்ப ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அபனன்கா போஸின் ஒளிப்பதிவில் மொரீஷியஸ் தீவின் அழகு திரையில் மிளிர்கிறது. கடற்கரையும், நகரத்தின் கச்சிதமான அமைப்பும், கோவில்களும், வீடுகளும், படகு வீடுகளுமாக கண்ணைக் கவரும் வண்ணம் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

சி.எஸ்.சாமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ‘சால் மார்’ பாடலும், ‘சொக்குற பொண்ணே’ பாடலும் ‘லவ் லவ்’ பாடலும் கேட்க வைக்கின்றன. இசையையும், பாடலையும்விட வழக்கம்போல் நடனங்கள்தான் அசத்தல்..!

உண்மையில் கிளைமாக்ஸ் காட்சியில் நகைச்சுவை தெறித்திருக்க வேண்டும். ஆனால் பதட்டமே இல்லாமல் ஒரு திரில்லிங் திரைக்கதையை இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய். முதல் பாகத்தில் வரும் சோனு சூட்டை இதில் கிளைமாக்ஸில் கொண்டு வந்து “தமன்னாவை ஒழுங்கா வைச்சுக்க.. அவ கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு.. அவ்ளோதான்…” என்று பிரபுதேவாவை மிரட்ட வைத்து அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குநர்.

முடிவில் அடுத்தப் பாகத்திற்கான அறிகுறியும் தெரிகிறது. நல்லதுதான். ஆனால் இதைவிட பெஸ்ட்டாக கொடுத்தால்தான் மூன்றாம் பாகம் தேறும்.

Our Score