full screen background image

இயக்குநர் எழிலை பாராட்டி தள்ளிய திரையுலக பிரபலங்கள்..!

இயக்குநர் எழிலை பாராட்டி தள்ளிய திரையுலக பிரபலங்கள்..!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் எஸ்.எழில்.

நடிகர் விஜயின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, ‘எழில்-25’ விழாவாகவும், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிப்பில் இப்போது இயக்கி வரும் ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது.

இந்தப் படத்தில் நாயகன் விமலுடன், முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனா, நாயகிகள் பூஜிதா பொனாடா , ஹர்ஷிதா மற்றும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இணை தயாரிப்பு – ஆர்.பாலகுமார், நிர்வாக தயாரிப்பு – பி.ஹரி, ஒளிப்பதிவு – செல்வா.ஆர், படத்தொகுப்பு – ஆனந்த் லிங்கா குமார், கலை இயக்கம் – சிவசங்கர், வசனம் – முருகன், சண்டை இயக்கம் – ‘ஃபயர்’ கார்த்திக்(Fire Karthik), பத்திரிக்கை தொடர்பு – ஜான்சன்.

இந்த விழாவில் இயக்குநர் எழிலின் குருநாதர் இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசும்போது, “கடந்த 33 வருடங்களில் என்னிடம் கிட்டத்தட்ட 100 உதவி இயக்குநர்கள் பணிபுரிந்து இருந்தாலும் அவர்களின் ஸ்பெஷலானவர் எழில். அதனால்தான் எஸ்.எழில் என அவரது பெயரிலேயே ஸ்பெஷல் இருக்கிறது.

துள்ளாத மனமும் துள்ளும் என்கிற படம் பண்ணுவார் என்று தெரியாத அளவிற்கு என்னிடம் இருந்தபோது அமைதியாக இருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவருடன் இணைந்து யுத்த சத்தம் என்கிற படம் பண்ணும் அளவிற்கு எடுத்து இந்த மேடையில் இன்று அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த படத்தை தயாரிக்கும் இன்ஃபினிட்டி ரவிச்சந்திரனுக்கு என்னுடைய பாராட்டுக்கள். விமலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்ஃபினிட்டி என்றால் முடிவில்லாத என்று அர்த்தம். அவ்வளவு பெரிய வெற்றியை, தொடர்ந்து விமலும் இந்த தயாரிப்பாளரும் பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “எழில் சாரின் 25 வருட திரையுலக பயணத்தை ஒரு விழாவாக எடுத்து சிறப்பிக்க வேண்டும் என நினைத்த ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் தயாரிப்பாளருக்கும், கதாநாயகன் விமலுக்கும் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒரு நல்ல எண்ணத்துக்காகவே இந்த படம் நன்றாக ஓடும்.

எழில் சார் இதற்கு தகுதியானவர்தான். அவர் இயக்கிய படங்கள் பல ஹீரோக்களுக்கு வெற்றியையும் அவர்கள் பயணம் செய்வதற்கான ஒரு வழியையும் அமைத்துக் கொடுத்தது. அதே மாதிரிதான் எனக்கும். அவருடைய பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என நினைக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

அவர் படத்தில் நடித்தபோது படத்தின் ஸ்கிரிப்ட்டை நான் படிக்கவே மாட்டேன். அவர் சொல்வதை மட்டும்தான் கேட்பேன். அவர் சொல்வதைக் கேட்டால் ஒரு படத்தை பத்து தடவை பார்த்தது போல இருக்கும்.. ஆனால் அவர் சொல்லும்போது நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். அது ரொம்ப கஷ்டம். அந்த அளவுக்கு அவர் குரலே மெதுவாக இருக்கும்.

என்னுடைய திரையுலக பயணத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் தீபாவளி. லிங்குசாமி சாரின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த முதல் படம் அது. அப்போது “எனக்காக இந்தப் படத்தை தயாரிக்கிறீர்களா..? இல்லை.. எழில் சாருக்காகவா?..” என்றுகூட லிங்குசாமியிடம் கேட்டேன்.

எழில் சார் இதுபோன்று விரைவாக படங்களை இயக்க வேண்டும். அதையெல்லாம் நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எஸ்.எழில் என்றாலே எதற்கும் ‘நோ’ சொல்லாத எல்லாத்துக்குமே ‘எஸ்’ சொல்லுகின்ற எழில் என்றுதான் நான் சொல்வேன்.

தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கின்ற முக்கியமான இயக்குநர்களில் எழிலும் ஒருவர். அதனால் தான் இந்த அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைத்துள்ளது. 25 வருடம் என்பதெல்லாம் சாதாரணம். இன்னும் அவர் 50, 75 என நிறைய பயணிக்க வேண்டும்.. நாங்கள் எல்லோரும் கூடவே இருக்கிறோம்…” என்று கூறினார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, “இன்றைய சூழலில் ஒரு நடுத்தர பட்ஜெட் படத்தை எடுப்பதும், அதை மார்க்கெட் செய்வதும் எவ்வளவு சிரமம் என்கிற சூழ்நிலையில் அந்த படத்தின் இயக்குநரை வாழ்த்தி ஒரு படத்தை கொண்டு வருவது என்கிற நல்ல மனதுக்காகவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் எழிலை 25 வருடங்களுக்கு முன்பு இருந்து எனக்கு நல்ல பழக்கம். அவர் எப்படி ஒரு நல்ல கமர்சியல் டைரக்டர் ஆனார்.. தயாரிப்பாளர்களின் இயக்குநர் ஆனார்.. நடிகர்களுடன் நல்லுறவில் இருக்கிறார் என்றால் இதற்கெல்லாம் அடிப்படையான முக்கியமான காரணமே நான்தான்.

25 வருடங்களுக்கு முன்பு எனது படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தார் எழில். அந்த படத்தில்தான் ஒரு படம் எப்படி எடுக்கக் கூடாது என்ற விஷயத்தை முழுதாக கற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு படத்தை நான் எடுத்திருந்தேன்.

2010-ம் ஆண்டில் எழில் சொன்ன கதையை கேட்டு எப்படி செல்வமணி பிரமித்தாரோ, அதேபோன்று மூன்று மாதங்களுக்கு முன்பு என்னிடம் எழில் சொன்ன கதையைக் கேட்டு எப்படி இவ்வளவு பிரமாதமான ஒரு கதையை சொல்கிறார் என திகைத்து போய் விட்டேன்.

25 படங்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் அவருடைய முதல் பட கதை போல இருக்கு.. எந்த ஒரு ஆக்சன் கமர்சியல் ஹீரோவும் மறுக்க முடியாத கதை. மீடியம் பட்ஜெட்டில் பண்ண முடியாத, பெரிய ஹீரோக்கள் கிடைத்தால் மட்டுமே இதை பண்ணலாம் என காத்திருக்கிறார் எழில். அவரது அடுத்த படமாக கூட அதை பண்ணலாம்.

தமிழ் சினிமாவில் விக்ரமன், எழில் ஆகியோருக்கு பிறகு இசையில் ஒரு மேஜிக் நடக்கவே இல்லை. அந்த காலகட்டத்தை தாண்டி போய் விட்டோம். மீண்டும் அவர்கள்தான் அந்த மேஜிக்கை நடத்த முடியும். இதையெல்லாம் தாண்டி அப்டேட்டில் இருப்பவர் இயக்குநர் எழில். எல்லா விஷயமும் தெரிந்த, மனிதாபிமானம் உள்ள, நட்புள்ள, அன்பான மனிதர் எழில். அவர் தொடர்ந்து ஜெயிக்க வேண்டும்.

சினிமாவில் நல்லவர்கள் எல்லாம் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அப்படி ஒரு நல்லவரான தம்பி விமலுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாகி அவரை முன்னணி நடிகராக உயர்த்திக் கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் விமல் ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய பேராசை” என்றார்.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “தமிழ் இயக்குநர் சினிமாவில் எழில் ஒரு வெற்றியாளர். சினிமாவில் வெற்றி ரொம்பவே முக்கியம். தனது முதல் படத்திலேயே மிகப் பெரிய வெற்றியை குவித்தவர் எழில். உடன் பணியாற்றும் கலைஞர்களுடன் இனிமையாக பழகும் தன்மை கொண்டவர். இந்த 25 வருடங்களில் அவர் செய்த சாதனைகள் பல என்றாலும் கூட அவருடைய நட்பைதான் முக்கியமாக நினைக்கிறேன். இன்று இத்தனை கலைஞர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவருடைய நட்புதான் காரணம்.

சினிமாவில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நட்பை தொடர்வதும், சாதிப்பதும்தான் ரொம்ப கஷ்டம். இன்று பல படங்கள் முடியும்போது ஹீரோவும், இயக்குநரும் பேசிக் கொள்வதில்லை. அவர்களுக்கு இடையே கம்யூனிகேஷனுக்கே இன்னொரு ஆள் தேவைப்படுகிறது. 25 வருடம் கழித்தும்கூட அவரை இங்கே பல கதாநாயகர்கள் பாராட்ட வருகிறார்கள் என்றால் அதைத்தான் எழிலில் சாதனையாக நான் பார்க்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “எழில் சாரின் படங்களில் நடித்த அத்தனை ஹீரோக்களும் வந்திருந்து இந்த விழா இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இப்போது பெரிய அளவில் உள்ள விஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு அவர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலம் விஷ்ணு விஷாலுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தார். அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது என்றால் அதற்கு இயக்குனர் எழிலும் ஒரு காரணம்தான்.

25 வருடங்களில் 13 படங்கள்தான் பண்ணியிருக்கிறார். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும். 5 கோடி பட்ஜெட்டுக்குள் 45 நாட்களுக்குள் ஒரு படத்தை முடித்து தருகிறேன் என சொல்லும் இயக்குநர் எழில் போன்றவர்கள் தமிழ்த் திரையுலகில் இருப்பது ஆச்சரியமான விஷயம்” என்றார்.

இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் பேசும்போது, “கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரங்களில் நடக்கும் எந்த விழாவிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில்கூட கலந்து கொண்டு உடனே கிளம்பி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு கொள்கையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் எழில் கூப்பிட்டபோது மறுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு படப்பிடிப்பிலிருந்து சீக்கிரமே கிளம்பி வந்தேன்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் இயக்கிய காலக்கட்டத்திலிருந்து அவருடன் நான் பழகி இருக்கிறேன். வெற்றி பெற்ற சமயத்திலும் இடையில் தோல்விகளை கண்ட போதும் மீண்டும் வெற்றியை தொட்ட போதும் எப்போதுமே ஒரே மாதிரி பழகும் ஒரு நல்ல இதயம் கொண்டவர்.

என் மகன் விஜய் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல் கல். இது போன்று ஒரு பத்து படங்கள் இருக்கின்றன. ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதையை சொல்வதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி என்னிடம் இயக்குநர் எழிலை அனுப்பி வைத்தார். அவர் கதை சொல்லிவிட்டு அங்கே செல்வதற்குள்ளாகவே நான் போன் செய்து “விஜய்யின் தேதிகள் எப்போது வேண்டும்..?’ என்று ஆர்.பி.சவுத்ரியிடம் கேட்டேன்.

நான் கதை கேட்கும்போது விஜய்யின் அப்பா என்கிற எண்ணத்தில் கதை கேட்க மாட்டேன். ஒரு சாதாரண பப்ளிக்கின் மன நிலையில்தான் கதை கேட்பேன். ஒரு சின்சியரான உதவி இயக்குநரின் பார்வையில் சில கேள்விகளை கேட்பேன். அப்படி நான் கேட்ட கேள்விகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதற்காக படத்தில் பதில் சொன்னவர் இயக்குநர் எழில்.

இத்தனை வருடங்களாக அவர் இந்த திரையுலகில் இருக்கிறார் என்றால், யார் ஒருவர் தாயை மிகவும் உயர்வாக மதிக்கிறாரோ அவரை கடவுள் உயரத்திற்கு கொண்டு செல்வார். இது என் வாழ்க்கையில் நான் பார்த்தது.

இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணிவிடலாம். ஹீரோவுக்காக படம் ஓடி விடுவதால் நாம் பெரிய இயக்குநர் என நினைத்துக் கொள்கிறார்கள். மனதில் இருப்பதை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

படங்களில் இன்னும் கதையை சிறப்பாக திரைக்கதையுடன் பண்ணினால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன். இன்றைய இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்கின்ற பக்குவம் இல்லை.. தைரியம் இல்லை.

அதேபோல ஒரு கதையைச் சொன்னதும் அந்த இயக்குநரை எழுந்து நின்று கட்டிப் பிடித்தேன் என்றால் அது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். ஆனாலும் துப்பாக்கி கதையைக் கேட்ட பிறகு ஒரு உதவி இயக்குநராக அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் குறித்து ஒரு கேள்வியை கேட்டேன். அப்போது பதில் சொல்லாத அவர் என்னுடைய கேள்விக்கு படத்தில் பதிலளித்திருந்தார். அவருடைய பக்குவம் அது.

எழிலிடம் இதேபோன்று ஒரு கேள்வியை ‘துள்ளாத மனம் துள்ளும்’ கதை சொன்ன சமயத்தில் கேட்டபோது அந்த படத்தில் அதற்கான பதிலை சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போது விஜய் என்ன பெரிய பெரிய சூப்பர் ஸ்டாரா ? இல்லையே..? அந்த கதை அவரை தூக்கிச் சென்றது. அந்தப் படத்திற்குப் பிறகுதான் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அந்தப் படத்தில் யார் நடித்திருந்தாலும் அது சில்வர் ஜூப்ளி கண்டிருக்கும். காரணம் திரைக்கதை.

இளைஞர்களே நல்ல கதையுடன் வாருங்கள். உங்களுக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஹீரோக்களை அப்படி வடிவமைக்க வேண்டும். காரணம் இன்றைய இளைஞர்கள் ஹீரோக்களை பின் தொடர்கிறார்கள். படத்தில் ஒரு மூன்று நிமிடமாவது நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என உங்கள் காலை தொட்டு கேட்டுக் கொள்கிறேன்.

விமல் ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை செய்து கொண்டிருந்தார். இடையில் கொஞ்சம் மேலே கீழே என மாறியது. சினிமா என்றால் அப்படித்தான்.. சமீபத்தில் ஓடிடியில் விமல் நடித்த விலங்கு என்கிற வெப் சீரிஸ் பார்த்தேன். இவ்வளவு பெரிய நடிகனை சினிமா இப்படி விட்டு வைத்திருக்கிறது..? இவ்வளவு பெரிய நடிகரை நானே ஏன் இத்தனை வருடமாக விட்டு வைத்தேன் என வருத்தப்பட்டேன். அப்படி ஒரு நல்ல நடிகரை வைத்து படம் இயக்கி இருக்கிறார் எழில். இந்த படம் அனைவருக்கும் மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசும்போது, “எழில்-25′ என்பதை பார்க்கும்போது ‘தேசிங்கு ராஜா-25’-வது வாரம் என்பது போலத்தான் தெரிகிறது. ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தைப் பார்த்துவிட்டு இந்த படம் மிகப் பெரிய ஹிட் ஆகும் என அவரது எடிட்டரிடம் சொன்னேன். இதை கேட்டுவிட்டு மறுநாளே என் வீடு தேடி வந்தார். அதேபோல சவுத்ரி சாரிடம், சூப்பர் குட் பிலிம்ஸில் இந்தப் படம் நாட்டாமை படம் போல ஹிட் படமாகும் எனக் கூறினேன். அதேபோல ஹிட்டானது.

எழிலை பொறுத்தவரை காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு இப்போதும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் எழில் 50 என்று சொல்லும் அளவிற்கு இன்னும் பல படங்களை அவர் இயக்க வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசும்போது, “எழிலின் முதல் படத்திற்கு நான் இசையமைத்திருந்தால் இப்போது அவரது 25-வது வருடத்தில் இந்த படத்திற்கும் நான் இசையமைக்கிறேன் என இன்னும் பெருமையாக இருந்திருக்கும். ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் எனக்கு கிடைத்தது ஒரு நல்ல இயக்குநர் மட்டுமல்ல; நல்ல நண்பரும்தான். ஒரு இடைவெளிக்கு பிறகு அவரது 25-வது வருடத்தில் உருவாகும் ‘தேசிங்குராஜா-2’ படத்திற்கு இசையமைக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். வாழ்க்கையின் கால்வாசி நாட்களை தனக்கு பிடித்தமான திரை துறையிலேயே அவர் சாதித்துள்ளார். பெரிய பட்ஜெட் படங்கள் என இல்லாமல் நிறைய தயாரிப்பாளர்களுடன் இணைந்து நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்” என்றார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, “எழிலை இந்த திரையுலகிற்கு முதன்முதலில் கொண்டு வந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி சாருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் எழிலின் படங்களை தெரிந்த அளவிற்கு அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் அவரைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும்போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை குறையாமல் பார்த்துக் கொள்வதுதான் அவருடைய மிகப் பெரிய பலம் என்று நினைக்கிறேன். அவர் எல்லோரிடமும் தன்மையாக பழகியதால்தான் இத்தனை ஹீரோகளுடன் இணைந்து படம் இயக்க முடிந்தது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

நகைச்சுவையை யோசித்து உருவாக்குவது என்பதைவிட நம்மை சுற்றிலும் உள்ளவர்களை கவனித்தாலே பல விஷயங்கள் கிடைக்கும்.

‘கிழக்கே போகும் ரயில்’ படப்பிடிப்பின்போது மேட்டுப்பாளையம் அருகில் ராதிகாவை வைத்து பின்னணியில் ரயில் போவது போல ஒரு காட்சியை எடுக்க ரிகர்சல் எல்லாம் பார்த்து முடித்து விட்டோம். ஆனால் ரயில் வந்த போது அந்த சத்தத்தில் பின்னணியில் ஒலித்த பாடல் கேட்காமல் ராதிகா நடனமாடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். நாங்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். அப்போதுதான் ரயில் சத்தத்தில் பாடல் கேட்காதே என்பதை உணர்ந்ததும் எல்லோருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. மறுநாள் காத்திருந்து அதே காட்சியை ரயிலுக்கு சற்று தொலைவில் இருந்தபடி பாடமாக்கினோம்.

இயக்குநர் எழிலிடம் அதிகமாக பழகவில்லை என்றாலும் எல்லோரிடமும் அவர் நன்றாக பழகுகிறார் என்பதைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “நான் படித்த பள்ளிக்கூடம், நான் குடியிருந்த கோவில் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸில் இருந்து வந்தவர்தான் இயக்குநர் எழில். இப்போது ஆர்.பி.சவுத்ரி சார் மலையாளத்திலும், தெலுங்கிலும் படங்களை தயாரித்து வருகிறார். அதுவும் புதுமுக இயக்குநர்கள்தான். அவரிடம் எத்தனையாவது இயக்குநரை அறிமுகப்படுத்துகிறீர்கள் கேட்டபோது “அதெல்லாம் தெரியாது..” என்று கூறினார். 98 படங்களை தயாரித்து தற்போது நூறாவது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் இருந்து வந்தவர் என்பதால் இயக்குநர் எழிலை பாராட்டுவதற்காகவே இங்கே வந்தேன்.

படைப்பாளிகளுக்கு என்றும் வயதாவது இல்லை. இயக்குநர் எழில் எப்போதும் மனதளவில் 25 வயதானவராகவே இருக்கட்டும். அப்போதுதான் இளமையான படங்களும் காட்சிகளும் வரும். படம் பண்ணும்போது வயதாகிவிடும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடித்து வருகிறார். அவர் வயது பற்றி எல்லாம் கவலைப்பட்டதே இல்லை.. வயதானாலும் சினிமாக்காரர்கள் இளமையாகத்தான் இருப்போம்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “எழில் சார் திரை உலகிற்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டதை பார்க்கும்போது, இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதா என்கிற ஆச்சரியம் ஏற்படுகிறது. அதே சமயம் எழில் எப்போதுமே இளமையாகவே காட்சியளிப்பவர்.

துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியானபோது உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நான் அவ்வளவு கஷ்டத்திலும்கூட அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தேன். ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அந்த படம்.

சீரியஸ், சென்டிமென்ட் கலந்து படம் பண்ணிய ஒரு இயக்குநர் எப்படி திடீரென காமெடிக்கு மாறினார் என்பதே ஒரு ஷாக்காக இருக்கிறது. ரசிகர்களை சென்டிமென்ட் காட்சிகளை வைத்து அழ வைத்துவிடலாம். திரில்லர் படம் எடுத்து பயமுறுத்தி விடலாம். ஆனால் அவர்களை சிரிக்க வைப்பது என்பது கஷ்டமான ஒன்று. அந்த விஷயத்தில் எழிலை காமெடி கிங் என்றே சொல்லலாம்.

கே.எஸ்.ரவிகுமார் சொன்னது போல சூப்பர் குட் பிலிம்ஸ்தான் எனக்கும் தாய் வீடு. எழிலும் அங்கே இருந்து வந்தவர் என்பதால் எங்களுக்குள் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. எங்களது இயக்குநர் சங்கத்திலும் பொருளாளராக பணியாற்றியவர் எழில். முன்னாள் பொருளாளர் இப்போது பிஸியாக இருப்பதால் நாங்களும் இதுபோல பிஸியாக மாறுவோம் என்கிற நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. அவரது ஐம்பதாவது வருடத்திலும் அவர் இதே போல பிஸியாக இருக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, “எழில் என்றாலே அழகான பெயர். இளமை புதுமை என்று அர்த்தம். என்னையே ஒரு நடிகனாக்கி இருக்கிறார் என்றால் பாருங்கள். அதுதான் அவருடைய காமெடி சென்ஸ். உங்களுடைய படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். என்னை வச்சு செய்து விட்டார். வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.

இப்போதும் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி சாரை ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன் என்று எழில் என்னிடம் கூறினார். 25 ஆண்டுகளாக படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே பெரிய விஷயம். நான் நடிக்க ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நடிக்கட்டும் என விட்டுவிட்டு ரிலாக்ஸ் ஆக அமர்ந்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு நடிகரின் மீது நம்பிக்கை வைப்பவர். நடிகர் விமல் மிகச் சிறந்த நடிகர். தொடர்ந்து இயக்குநர் எழிலுடன் பயணித்தால் அவரை இன்னும் மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு எழில் சென்று விடுவார்” என்றார்.

நடிகர் ரவி மரியா பேசும்போது, “இந்த விழாவை நான்தான் எடுத்திருக்க வேண்டும். எழில் இயக்கிய ஆறு படங்களில் நான்தான் வில்லனாக நடித்துள்ளேன். தீபாவளி படத்திற்குப் பிறகு அவருக்கு ஒரு இடைவெளி விழுந்த சமயத்தில் இயக்குநர் சங்கத்தில் அமைதியான ஒரு இடத்தில் வந்து அமர்ந்தார். 

அந்த சங்கத்திற்குள் வந்தவர்களை சேவை என்கிற போதை எழுந்திருக்கவே விடாது. ஆனாலும் எழில் சார் ஒரு பக்கம் சங்கத்து பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டு ஒரு படைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இயக்குநர் சங்க 40வது வருட விழாவில் நான் நகைச்சுவையாக பேசுவதை பார்த்துவிட்டு இயக்குநர் எழில், “யார் உங்களை வில்லனாக மாற்றியது, நீங்கள் சரியான காமெடி புராடக்ட்” என கூறி சிவகார்த்திகேயனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய மனம் கொத்தி பறவை படத்தில்தான் என்னையும் ஒரு காமெடி நடிகராக அவர் மாற்றினார்.

என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்பது முழுவதும் அவருக்குத்தான் தெரியும். தொடர்ந்து அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஒரு படம் விட்டு ஒரு படம் அவரது இயக்கத்தில் நடிப்பது என எங்கள் இருவருக்குமே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. ஒரு படத்தில் முதல் பாகத்தில் ஒரு ஹீரோவும் இரண்டாவது பாகத்தில் அதே ஹீரோவோ அல்லது வேறு ஹீரோவோகூட நடிப்பார்கள். ஆனால், தேசிங்கு ராஜா முதல் பாகத்திலும் நான்தான் வில்லன். இந்த இரண்டாம் பாகத்திலும் நானே வில்லன்.

சிலர் சொல்வது போல எழில் சார் படப்பிடிப்பில் ஜாலியாக அமர்ந்திருப்பார். நாங்கள் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருப்போம் என்பதில் உண்மையே இல்லை. எந்த அளவிற்கு நடிகனிடம் வேலை வாங்க வேண்டுமோ அதை சரியா வாங்குவார். இல்லையென்றால் தொடர்ந்து இவ்வளவு வெற்றி படங்களை ஒருவரால் கொடுக்க முடியாது..” என்றார்.

இயக்குநர் சரண் பேசும்போது, “இயக்குநர் எழில் 1300 வெள்ளிக்கிழமைகளைத் தாண்டி இந்த இடத்தில் நிற்கிறார். ஒரு இயக்குநர், ஒரு ஹீரோ இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முக்கியமானது. ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையில் திடீரென ஒரு ஹீரோவோ, இயக்குநரோ டக்கென உருவெடுப்பார்கள். அவர்களுடன் போட்டி போட வேண்டிய சூழலும் ஏற்படும்.

“கதை தோற்கலாம், ஆனால் இயக்குநர் தோற்கமாட்டார்” என ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஒரு முறை சொன்னார். அது ஒரு அருமையான வார்த்தை. எழில் மட்டுமல்ல எல்லா இயக்குநர்களுக்கும், இடையில் ஒரு தேக்க நிலை வரும். அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்வது என்பது மிக, மிக முக்கியம். பிறகு படம் பண்ணுபவர்களுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் இசையில் படம் பண்ணும் வரம் கிடைக்க வேண்டும். இரண்டு வரமும் இவருக்கு கிடைத்திருக்கிறது” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “எழில் சார் கொடுத்த அந்த வாய்ப்பால்தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். நான் உட்பட கிட்டத்தட்ட 10 இயக்குநர்களுக்கு மேல் எழில் சாரிடம் இருந்து வந்திருக்கிறோம். காரணம் அவருடன்கூட இருந்தாலே நிறைய கற்றுக் கொள்ளலாம். படப்பிடிப்பில் எவ்வளவு டென்சனாக இருந்தாலும் ஒரு கேப்டனாக அதை கூலாக கையாளுவார்.

அவருடன் நான் பணியாற்றிய ‘தீபாவளி’ படம் மூலமாகத்தான் ‘வெண்ணிலா கபடி குழு’ படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று சூரி ஒரு கதாநாயகனாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் எழில் சார்தான்.. தீபாவளி படத்தில் தனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தில் இரண்டு காட்சிகளில் பிரமாதமாக நடித்திருந்தார் சூரி. அவர் நடிப்பை பார்த்து விட்டுத்தான் என்னுடைய முதல் படமான ‘வெண்ணிலா கபடி குழு’வில் அவரை நடிக்க வைத்தேன்.

நிறைய நடிகர்களை, தொழில் நுட்பக் கலைஞர்களை எழில் சார் உருவாக்கி இருக்கிறார். நிறைய நடிகர்களுக்கு அவருடைய மதிப்பு தெரியவில்லை. நாம் சொல்லும் பத்து சீன்களுக்கும் சிரிப்பார். ஆனால் ரசிகர்கள் எதை ரசிப்பார்கள் என்பதை கணித்து அதை மட்டுமே தேர்வு செய்வார். 25 வருடமாக தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது பெரிய விஷயம். என் பையன் வளர்ந்து கல்லூரி படிக்கும்போது, என் தந்தை ஒரு காலத்தில் இயக்குநராக இருந்தார் என சொல்லாதபடி அப்போதும் நான் இயக்குநராக படம் இயக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எழில் சார் அதை சாதித்து விட்டார்” என்றார்.

இயக்குநர் தமிழ்வாணன் பேசும்போது, “எழில் இயக்குநர் ஆவதற்கு முன்பிருந்தே அவருடன் நெருங்கி பழகி இருக்கிறேன். அவருடைய இரு சக்கர வாகனத்தில்தான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதையை பல கம்பெனிகளுக்கு சென்று கூறி இருக்கிறோம். எல்லா இடத்திலும் கதை சூப்பர் என்று சொன்னாலும்கூட வெவ்வேறு காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

நீங்கள் எல்லாம் கற்பனைகூட பண்ணி பார்க்க முடியாத நடிகர்களுக்கு எல்லாம் அந்த கதையை சொல்லி இருக்கிறோம். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து துபாய்க்கு கிளம்பும் முடிவுக்கு வந்த போதுகூட என்னை வேறொரு இயக்குனரிடம் உதவியாளராக சேர்த்து விடுவதற்கு முயற்சி செய்தார் எழில்.

சில்வர் ஜூப்ளி ஹிட்டான அந்த படம் ஒன் மேன் ஷோ. அதாவது எந்தவித டிஸ்கஷனும் இல்லாமல் எழில் ஒருவர் மட்டுமே உருவாக்கிய கதை அது. இந்த படப்பிடிப்பின்போது தனது தாய் இறந்து விட்டதை நினைத்து விஜய் அழ வேண்டிய காட்சியை படமாக்கியபோது திடீரென எழில் சாரை ஒரு முறை நடித்துக் காட்டச் சொன்னார் விஜய். அடுத்த நொடியே அந்த காட்சியில் கதறி அழுதபடி நடித்த காட்டினார் எழில். அதை பார்த்து திகைத்துப் போன விஜய், “இந்த அளவிற்கு என்னால் நடிக்க முடியுமா என தெரியாது.. என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்…” என கூறி நடித்த அந்த காட்சி வெளியானபோது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக ஒரு ஆர்ட் பிலிமுக்குத்தான் படத்தின் கிளைமாக்ஸில் எழுந்து நின்று கைதட்டுவது வழக்கம். ஆனால் ஒரு கமர்சியல் படத்திற்கு கிளைமாக்ஸில் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டினார்களென்றால் அது ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்திற்குத்தான்” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பேசும்போது, “எனக்கும் எழிலுக்கும் 30 வருட நட்பு இருக்கிறது. இங்கு பேசியவர்கள் அவரிடம் உதவியாளர்களாக பணியாற்றி உள்ளார்கள். நானும் எழிலும், பார்த்திபன் சாரிடம் ஒன்றாக வேலை பார்த்திருக்கிறோம். பிறகு எழிலுடன் மூன்று படங்களில் இணைந்து வேலை பார்த்திருக்கிறேன். எழில்-25 என்கிற இந்த லோகோவைகூட நான்தான் செய்து கொடுத்தேன்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் முதல் ஹீரோ, ஹீரோயின் யார் என்றால் அது வடிவேலுவும், ஊர்வசியும்தான். ‘ருக்மணிக்காக’ என டைட்டில் வைத்து கிட்டத்தட்ட அதற்காக 14 டிசைன்கள் நான்தான் செய்தேன்.. நல்ல கதை தனக்கான விஷயங்களை தேடிக் கொள்ளும் என்பதற்கு ‘துள்ளாத மனமும் துள்ளும்’தான் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ஒரு நல்ல ஹீரோ, நல்ல ஹீரோயின், நல்ல கம்பெனி, நல்ல பாடல்கள், நல்ல காமெடி என எல்லாமே அந்த படத்தில் மொத்தமாக அமைந்திருந்தது. அன்று அவர் தொடங்கிய வாழ்க்கை இன்றுவரை அவருக்கு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்போதுவரையிலும் அவருடன்கூட இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்றார்.

நடிகர் விமல் பேசும்போது, “தேசிங்கு ராஜா படத்தை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் எழில் சாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்த படத்தில் ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர்.

சின்ன கதாபாத்திரம், பெரிய கதாபாத்திரம் என யாரையும் வேஸ்ட் பண்ண நினைக்க மாட்டார். அனைவருக்குமே டயலாக் கிடைக்க வேண்டும் என நினைப்பார். அவருடன் எத்தனை படம் செய்தாலும் போரடிக்காது. எப்படி சிலரை இயக்குனர்களின் நடிகர் என சொல்வார்களோ அதேபோல எழில் நடிகர்களின் இயக்குனர், தயாரிப்பாளர்களின் இயக்குநர். அவர் ஐம்பதாவது வருடம் பொன்விழா காண வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

படத்தின் இரண்டாவது கதாநாயகனான ஜனா பேசும்போது, “இவ்வளவு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறோம் என முதல் நாளே எனக்கு பதட்டமாக இருந்தது. ஆனால் எழில் சார் பெயருக்கு ஏற்றபடி எளிதாகவே இருப்பார். அதனால் அவருடன் பணியாற்றியது ஜாலியாகவே இருந்தது” என்றார்.

நடிகர் சிங்கம்புலி பேசும்போது, “துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு நண்பர் கிருஷ்ணமூர்த்தி மூலமாக எழிலின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து கொள்கிறாயா என கேட்டு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.. ஆனால் ஒரு முறை மட்டுமே சந்தித்து இருந்ததால் எழிலின் முகமும் அவரது பெயரும் மறந்து விட்டது. படத்தின் பூஜையின்போது அவரிடமே சென்று வேறு ஒரு பெயரை கூறி விசாரித்தேன். அதன் பிறகு நாலு நாட்கள் கழித்த பிறகே அவர்தான் இயக்குநர் எழில் என எனக்கு தெரிய வந்தது. அப்படி அந்த படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனது” என்றார்.

அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் எழில் பேசும்போது, “துள்ளாத மனமும் துள்ளும்’ படத்திற்கு இப்படி ஒரு பங்க்ஷன் தேவையா என நான் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அந்தப் படத்தை போலவே இந்த படத்திலும் நீங்கள் பணியாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாக வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.

எனக்கு சினிமாவை தவிர வேறு வேலை தெரியாது. அதனால் கொடுத்த வேலைக்கு கடுமையாக உழைப்பேன். என்னுடைய முதல் படத்தில் முதல் இயக்குநர் போல வேலை செய்து கொண்டிருந்தேன். இப்போது இந்த படத்திலும் ஒரு உதவி இயக்குநர் போல வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

‘தேசிங்குராஜா’ படத்தின் முதல் பாகம் அதுவாகவே ஒரு இயல்பான கதையாக அமைந்தது. இரண்டாம் பாகம் என்று வரும்போது முதல் பாகம் போல அட்டகாசமாக இது வருமா என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். அதில் விமல் ஜாலியாக பண்ணியிருப்பாரே தவிர இந்த அளவிற்கு பக்குவப்பட்டவராக எல்லாம் பண்ணி இருக்க மாட்டார். இதில் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். கூடவே ஜனாவும் மிக அற்புதமாக பண்ணிக் கொண்டிருக்கிறார். படத்தில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்களும் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விமல் ஏற்கனவே கதாநாயகனாக உருவாகிவிட்டார். ஒரு நல்ல படத்தில் நடித்தால் ஜனாவும் திறமையான ஒரு பெரிய ஹீரோவாக வருவார் என வாழ்த்துகிறேன். விமல் இந்த படத்திற்குப் பிறகு வேறு ஒரு உச்சம் தொடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் செல்வாதான் இந்தப் படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார். அதேபோல ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்கு பிறகு வித்யாசாகர் என்னுடைய இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் மகன் ஜனாதான் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். ஆனால், எந்த இடத்திலும் அவரை ஒரு தயாரிப்பாளர் மகன் என நினைக்க வேண்டாம் என என்னிடம் முதலிலேயே சொல்லிவிட்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அமளி துமளியாக போய்க் கொண்டிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லோரும் இது என்ன மீன் மார்க்கெட்டா, இவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதற்கு முன் என்னுடைய எந்த படத்திலும் இந்த அளவு கூட்டத்தை வைத்து படம் இயக்கியது இல்லை. ஆனாலும் அவர்களை வைத்து எடுத்த காட்சிகளை போட்டு பார்த்தபோது அற்புதமாக வந்திருக்கிறது.

இந்த படத்திற்காக ஒர்க்ஷாப் வைத்திருந்தேன். அதில் பங்கேற்றவர்கள் எல்லோரும் என்னை அழ வைத்து விட்டார்கள். அப்படி வாய்ப்பு தேடி வருபவர்களை விட்டு விடக்கூடாது என நினைப்பவன் நான். அதனாலேயே என்னுடைய உதவி இயக்குநர்களிடம் அவர்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள். ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுங்கள் என கூறியுள்ளேன்.

இப்போது தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப சுலபம். நிறைய தயாரிப்பாளர்கள் வருகின்றனர். ஆனால் அந்த சமயத்தில் ஒரு ஐந்து, ஆறு பெரிய தயாரிப்பாளர்கள்தான் இருந்தனர். புதிய இயக்குநர்கள் சொல்லும் கதை பிடித்திருந்தால்கூட அவர்களை நம்பி படம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் கதை நன்றாக இருந்தால் சவுத்ரி சார் படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தார்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் இப்போது ஒளிபரப்பானாலும் நிறைய பேர் பார்க்கிறார்கள். ஒரு படம் தலைமுறையை தாண்டியும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அந்த வகையில் என்னுடைய காமெடி படங்களும் அடுத்தடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்கின்றன.

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ படங்கள் பண்ணிய சமயத்தில் விஜய், அஜித் இருவரும் வளர்ந்து வந்த நடிகர்கள்.. ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனிடம் இரண்டு வீடுகள் வேண்டுமென கேட்டேன். புதிதாகவே கட்டிக் கொள் என்றார். ஆனால் செட் போட்டுதான் படம் ஆக்கினேன். இந்தப் படத்தில் அஜித் சார், ஜோதிகா ஜோடி அழகாக இருந்தது என இப்போதுகூட சொல்கிறார்கள். அந்தப் படத்தில் சிவகுமாருக்கு மருமகளாகவே அவர் நடித்திருந்தார்,

இந்த விழா தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்டபோது உடனடியாக என்னை வரச் சொன்னார். அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக எனது பகிர்ந்து கொண்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்.
 
‘மனம் கொத்தி பறவை’ படம் பண்ணும்போது சிவகார்த்திகேயனுக்கு அது கிட்டத்தட்ட முதல் படம். எனக்கு அது ஒரு ரீ என்ட்ரி. அந்தப் படத்தின் பட்ஜெட்டும் என்னிடம் பெரிய அளவில் இல்லை. என்னுடைய கிராமத்திலேயே வைத்து அந்த படத்தை எடுத்தேன். இரவு நேர படப்பிடிப்பின் போதெல்லாம் அங்குள்ள திண்ணையில்தான் படுத்து தூங்குவார் சிவகார்த்திகேயன். அந்த அளவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகர். அப்போதே அது அவரிடம் தெரிந்தது. அதனால்தான் இன்று அவர் இந்த உச்சத்தை பெற்றுள்ளார்.

என்னுடைய அம்மாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால் இயல்பாகவே எனக்கும் அது இருக்கிறது. விக்ரம் பிரபு ரொம்பவே அமைதியானவர். பிரபு சார் என்னை தனியாக அழைத்து, “நம்ம ஊர் நேட்டிவிட்டி எல்லாம் தெரியாது.. நீ வச்சு வாங்கிக்க..” என்று சொன்னார். அதேபோல விக்ரம் பிரபுவும் நான் எது சொன்னாலும் அதை சிறப்பாக செய்வார்.

விஷ்ணு விஷால் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு முன்பாக சில கலைப் படங்களில் நடித்திருந்தார். அதனால் என் படத்தில் நடிக்கும்போது முதலில் இரண்டு, மூன்று நாட்களுக்கு எனக்கும் அவருக்கும் செட்டாகவில்லை. இயக்குநர் செல்லாவிடம் சென்று “என்ன ஓவரா பந்தா பண்ண சொல்லி சொல்கிறாரே, கொஞ்சம் மடக்கி வாசித்தால் வேண்டாம் வேண்டாம் என்கிறாரே..?” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்பு எடிட்டிங்கில் படத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு, நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்ய ஆரம்பித்து விட்டார். படப்பிடிப்பின் கடைசி நாள் அன்று என்னிடம் வந்து முதல் நாள் எடுத்த காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த அளவிற்கு நடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்.

என் முதல் படத்திலேயே எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைப்பாளராக எனக்கு கிடைத்தது அற்புதமான விஷயம். ராஜ்குமார் நல்ல கவிஞர், கதாசிரியர். அவர் எழுதிய சில வரிகளை பார்த்து அதிர்ச்சியான வைரமுத்து அதை பீட் பண்ண வேண்டும் என எழுதியதுதான் ‘இன்னிசை பாடி வரும்’ என்கிற பாட்டு. ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படப்பிடிப்பின் முதல் நாளன்றே எனக்கு விஜய் போன்ற பெரிய நடிகர்கள் இருந்ததால் படபடப்பு இருந்தது அதனால் முதல் தான் முதல் நாளே ‘துட்டு’ பாடலை படமாக்கினேன்” என்றார். 

விழாவில், எழில்-25 ஆக எழில் சினிமா வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது.

அப்போது, எழிலின் முதல் பட இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் அவருக்கு நினைவு கேட்யம் ஒன்றை வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் நன்னிலம் ஊரிலிருந்து வந்த ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் ஊரிலிருந்து சினிமாவுக்கு பெருமை சேர்த்த டைரக்டர் எழிலின் வீடியோ தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. முடிவில் எழில் தாயார் மேடையில் கண் கலங்கி நின்றது அனைவரயும் கண் கலங்க செய்தது.

அந்த நேரம் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையில் ஏறி எழில் தாயாருக்கு சால்வே அணிவித்து மரியாதை செய்து வாழ்த்தி பேசினார். எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையில் ஏறி மரியாதை செய்ததும், வருகை தந்திருந்த டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஆ.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சரண், உதயகுமார், சுசீந்திரன், நாஞ்சில் அன்பழகன், கதா.க.திருமா, ரங்கனாதன், ரவிமரியா, சிங்கம்புலி, சந்தோஷ் மற்றும் பல டைரக்டர்கள் மேடையில் மரியாதை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இவர்கள் உட்பட, ஜெயம் ரவி, ராதாரவி, கே.பாக்யராஜ், எழிலின் குரு ஆர்.பார்த்திபன், சந்தாணபாரதி, விக்ரமன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், டி.சிவா, தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், ரமேஷ் பிள்ளை, நடிகர் சிங்கமுத்து, மதன் பாப், ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் இசை அமைப்பாளர் வித்யாசாகர், டான்ஸ் மாஸ்டர் தினேஷ், போன்றோரும் விழாவில் பங்கேற்றார்கள்.

Our Score