full screen background image

‘சிந்துபைரவில’ எனக்கு பெயர் கிடைத்தது இளையராஜாவாலதான்..! – டெல்லி கணேஷ் பேச்சு..!

‘சிந்துபைரவில’ எனக்கு பெயர் கிடைத்தது இளையராஜாவாலதான்..! – டெல்லி கணேஷ் பேச்சு..!

சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர் டெல்லி கணேஷ் பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“என்னை முதன்முதலில் சினிமாவில் அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான். ‘பட்டிணப் பிரவேசம்’ படம்தான் என் முதல் படம். எல்லாரும் நினைக்கிற மாதிரி ‘டெல்லி கணேஷ்’ என்னோட நிஜப் பெயர் இல்லை. அது புனைப் பெயர். என்னுடைய நிஜமான பெயர் எம்.கணேசன். என்னோட பெயர் ‘டெல்லி கணேஷ்’ என்று மாறினதுக்கு பின்னாடி ஒரு கதையிருக்கு.

ஷூட்டிங்குக்கு போனப்போ, ‘உனக்கு என்ன பேர் வைக்கலாம்? என்று கே.பி. சார் கேட்டார். ‘என் பேரு அப்படியே இருக்கட்டும்ய்யா?’ என்றதும் ‘ஏய்.. இது நல்லாயில்ல… சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மாதிரி கொஞ்சம் நல்லாயிருக்கணும்..’ என்று சொன்னார். ‘என்னோட சொந்த ஊர் வல்லநாடு.. அதனால வல்லை கணேசன்னு வச்சிரலாம்..’ என்றேன்.. அதுக்கு அவரு, ‘நடிக்க ஆரம்பிச்சிட்டா பேமண்ட் வல்லை, செக் வல்லைன்னு சொல்லப் போறே… எதுக்கு பேரோட வல்லைன்னு சேக்குறே..?’ என்று சொல்லியவர், நிறைய அலசலுக்குப் பின் ‘நீ பொறந்தது இங்கேன்னாலும், டில்லியில்தானே முதல் நாடகம் போட்டே..? அதனால டில்லி கணேஷ்ன்னு வச்சா என்ன..?’ என்றவர் அப்படி வைத்ததுதான் இந்தப் பெயர். 

இதே கே.பி. சார் அடுத்த எட்டு வருசத்து என்னை நடிக்கக் கூப்பிடவேயில்லை. அதுக்கு அப்புறம்தான் கூப்பிட்டார். ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்துல ராஜேஷூக்கு அப்பாவா ஒரு கறுப்பான ஆளைத் தேர்வு செய்திருந்தார். ராஜேஷோட நிறத்துக்கு ஒத்துப் போனதால அப்பாவா செலக்ட் செய்தார் போல.. ஆனால் அவருக்கு நடிக்க வரலை… ‘இவன் சரிவர மாட்டான்.. வேண்டாம்’ன்னு சொல்லிட்டார். அப்புறம் யாரைப் போடலாம்ன்னு தன் சகாக்களோட ஆலோசனை பண்ணியபோது என்னைச் சொல்லியிருக்காங்க… ‘அவனா.. அவன் அப்பா கதாபாத்திரத்துக்கா… சரியா வருமா?’ன்னு கேட்டிருக்கார். அதுக்கு ‘அவரு சிவாஜிக்கே அப்பாவா நடிக்கிறாரு’ என்றதும்… ‘அப்படியா சரி கூப்பிடு’ என்று சொல்லியிருக்கார். 

நான் அங்கு போனதும் ‘தாயில்லாமல் தந்தை வளர்த்த பிள்ளையான ராஜேஷ்கிட்ட காய்கறி நறுக்கிக்கிட்டே வசனம் பேசணும்’ என்றார். அந்த சீன்ல நான் பேசின ஒவ்வொரு வசனத்துக்கும் இடை, இடைல வெட்டிய காயைகளை என் வாய்க்குள்ள போட்டு வசனம் பேசி நடிச்சேன். அதை ரசித்த கே.பி. ‘பாருங்க எப்படிப் பண்ணுறான்னு..?’ என்று தன் அசிஸ்டெண்ட்களிடம் கண் ஜாடையிலேயே காட்டினார்.

இந்தக் காட்சி முடிந்ததும் ‘நல்லா நடிச்சேடா’ என்றவரிடம் ‘என்னை எட்டு வருசமா கூப்பிடலையில்ல… உங்க மேல எனக்குக் கோபம்?’ என்று சொல்லி அழுதேன். உடனே கே.பி.யும் கண் கலங்கி தன்னோட அழுகையை அடக்க, இவரோட முதுகில் அடித்து ‘அதான் இப்போ கூப்பிட்டுட்டேன்ல. விடு..’ என்றார். அதன் பின் அவருடைய எல்லா படத்திலும் என்னை நடிக்க வைத்தார். 

ஒரு படத்தில் காதில் கடுக்கண், நெற்றியில் விபூதி பட்டையெல்லாம் அடித்து ரெடியாகி வந்தேன். கே.பி. ஸ்கிரிப்டில் நான் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டு வருவது போல் சீன் எழுதியிருந்தார். ‘டேய், நீ குளிச்சிட்டு வர்ற மாதிரி சீன்.. அதுக்கு ரெடியாகு என்றார். ‘என்ன சீன் சார்?’ என்றேன். ‘எல்லாப் படத்துலயும் அப்பா கேரக்டர் பேப்பர் படிக்கிற மாதிரித்தான் வரும்… அதனால இதுல குளிச்சிட்டு தலையைத் துவட்டிக்கிட்டு வர்றே… அப்போ காலிங்க் பெல் அடிக்குது… இதோ வாறேன்னு சொல்லி கதவைத் திறக்கிறே…’ என்றார். ‘குளிச்சிட்டு வந்தாத்தானா…? பூஜை பண்ணிக்கிட்டு இருக்கும் போது காலிங்பெல் அடிக்கிற மாதிரி வச்சா..?’ என்றேன்.. ‘எங்கே பண்ணு பார்ப்போம்’ என்றார் கே.பி. நான் அப்படியே விநாயகர் துதி பாடிக்கிட்டே, காலிங்பெல் அடிக்கவும் ‘இதோ வாறேன்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலைப் பாடியபடி கதவைத் திறப்பது போல் நடித்துக் காண்பித்தேன். உடனே கே.பி. ‘இது நல்லாயிருக்குடா இதுவே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டார்.

‘சிந்து பைரவி’யில் நான் குடித்துவிட்டு வந்தேன் என்பதற்காக மிருதங்கம் வாசிக்கவிடாமல் என்னை வெளியில் போகச் சொல்லுவார் சிவக்குமார், ஒரு கலைஞனை மேடையில் இருந்து இறக்கிவிட்டால் எவ்வளவு கேவலம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும். அதன் பிறகு நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக குடித்துவிட்டு அவர் வீட்டில் போய் மிருதங்கம் வாசித்துக் கொண்டே பேச வேண்டிய சீன்.

அதற்கு முதலில் டி.வி.கோபாலகிருஷ்ணன் என்ற மிருதங்கக் கலைஞரை பிக்ஸ் செய்திருந்தார் கே.பி. அவர் வந்து சீனைக் கேட்டவர், ‘வெள்ளம் அடிச்சது போல்(மது அருந்தியதுபோல்) நடிக்கணுமா… இது சரியல்ல… எனக்கு ஆத்துல பிரச்சினை உண்டாகும்’ன்னு சொல்லிட்டுப் பொயிட்டார். இவரோட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குமான்னு ஏங்குற காலத்துல அவர் கெடைச்சதை விட்டுட்டு ஓடிட்டார்.

அதன் பிறகுதான் என்னைக் கூப்பிட்டார்… ‘இதுதான்டா கதை.. நீ மிருதங்கம் வாசிக்கணும்… உனக்குத் தெரியுமா..?’ என்றார். ‘தெரியாது’ என்றேன்… ‘கண்டிப்பா தெரியணுமே… தெரியலைன்னா எப்படி..?’ என்றவர், டி.வி.கோபாலகிருஷ்ணனின் டிரைவர் அப்போதுதான் ஒரு வாரமாக மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்டு. ‘டேய் இவனுக்கு மிருதங்கம் கத்துக் கொடுடா’ என்றார். அவன் ‘ஒன்.. டூ.. திரி… போர்..’ அப்படின்னு மட்டும் சொல்லிக் கொடுக்க, இவனுக்கிட்ட எப்ப கத்துக்கிறதுன்னு நானே வாங்கி வாசிக்க ஆரம்பிச்சேன். அதைக் கேட்ட கே.பி., ‘இப்ப யாருடா வாசிச்சது..?’ என்று கேட்டார். ‘நான்தான்..’ என்றதும் ‘நீ நல்லாத்தானேடா வாசிக்கிறே..? இது போதும் மத்ததை இளையராஜா பாத்துப்பான்’ என்று சொல்லிவிட்டார். எனக்கு அந்தப் படத்தில் பேர் வந்ததுக்கு காரணமே.. நான் தட்டுனது போக, இளையராஜாவும் கூடுதலா  தட்டுனனாலதான்.

அதே படத்துல ஒரு சீன். ‘நீங்க சிவக்குமார் வீட்டுக்கு தண்ணி அடிச்சிட்டு போயி மிருதங்கம் வாசிச்சிக்கிட்டே வசனம் பேசணும்..’ என அவரின் அசிஸ்டெண்ட்ஸ் வசந்த், பாலகுமாரன் சொன்னாங்க. ‘வாசிச்சிக்கிட்டே வசனம் பேசினால் சரியா வருமா..? மொதல்ல மிருதங்கம்.. அப்புறம் வசனம்… அப்புறம் மிருதங்கம்.. திரும்பவும் வசனம்.. இப்படி பேசினால் நல்லாயிருக்குமே?’ என்றதும் ‘இதை நீங்க அவர்கிட்டயே பேசிக்குங்க..’ என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்கள்.

நானும் ‘சரி.. கே.பி.கிட்டயே பேசிக்கிறேன்’னு சொல்லிட்டு சீன் ஆரம்பிக்கும்போது மிருதங்கம் வாசித்து, பின் நிறுத்தி வசனம் பேசி.. பின் மிருதங்கம் வாசித்து… வசனம் பேசி… காட்டினேன். ‘ரொம்ப நல்லா இருக்கேடா… இப்படியே இருக்கட்டும்’ என்றார் கே.பி. நான் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களை பார்க்க, அவர்கள் ஒன்றும் சொல்லாமல் ‘ஓகே’ என்று தலையாட்டினார்கள். 

கே.பி. சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்தவர். அப்போது மிகப் பிரபலமான இயக்குநர் ஒருவர்  ஒரு நாளாவது நான் பாலசந்தரின் அசிஸ்டெண்டாக இருக்க வேண்டும் என்று சொல்லி, ஒரு முறை அவருக்கு போன் பண்ணி ‘எங்கே சூட்டிங்… நான் வர்றேன்..’ என்று சொல்ல… ‘ஐயோ.. நீங்கள் என் பிதாமகன்… நீங்க இங்க வந்தீங்கன்னா… என்னால டைரக்சனே செய்ய முடியாது… தயவு செய்து வர வேண்டாம்..’ என்று சொன்னவர் கே.பி.. ஒரு மேடையில் பாரதிராஜாவைப் பார்த்து, ‘உங்கிட்ட ஒரு நாள் அசிஸ்டெண்டா வேலை பார்க்கணும்..’ என்று சொன்னார்.

நான் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தபோது சிலருக்கு பத்திரிக்கை கொடுத்தேன். யாரும் வரலை… ஆனால் கே.பி. சார் வந்தார்… மோகன் போன் பண்ணி அட்ரஸ் கேட்டான். வந்தவர் ‘வீடு நல்லா கட்டியிருக்கேடா… சினிமாவுக்கு வாடகைக்கு கொடுக்கப் போறியா..? டிராலியெல்லாம் போற மாதிரி பெரிசா கட்டியிருக்கே… ஆமா பின்னால கிடக்குற இடத்தையும் வாங்கிப் போட வேண்டியதுதானே..?’ என்றார். ‘நீங்க தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தீங்கன்னா வாங்கிரலாம்’ என்றதும் சிரித்தார். 

கே.பி. கோபக்காரர்தான். ஆனா ரொம்ப பாசமானவர்.. பைபாஸ் சர்ஜரி பண்ணி மருத்துவமனையில் இருக்கேன்… எம்பொண்டாட்டிக்கிட்ட போன் பண்ணி பேசியிருக்கார். அவ ‘நீங்க வர வேண்டாம்… வந்தா அழுதுடுவாரு’ன்னு சொல்லியிருக்கா.. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குப் போன பின் மோகன் போன் பண்ணி ‘வீட்டுக்கு ஐயா வர்றாரு’ன்னு சொன்னான். ‘எதுக்கு.. நான் இப்போ நல்லாயிருக்கேன்.. வர வேண்டாம்’ என்றேன். ஆனால் வந்தார்… ‘சிகரெட் இன்னும் குடிக்கிறியா..?’ என்றார். ‘நிறுத்திட்டேன்..’ என்றேன். ‘எப்போ..?’ என்றார். ‘நேத்துல இருந்து..’ என்றேன். ‘கவலைப்படாதேடா. நீ அவ்வளவு சீக்கிரம் சாக மாட்ட. இன்னும் நிறையப் படங்கள்ல நடிச்சி எல்லோரையும் சிரிக்க வைப்பேடா..’ என தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

கே.பி. சார் மத்தவங்களை மதிக்கத் தெரிந்தவர். தன்னிடம் வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்தி அங்கு எதாவது சாப்பிட்டுத்தான் வருவார். அந்தப் பண்பாடு வேறு யாரிடமும் இல்லை. அவர் ஒண்ணும் அல்பாயிசுல போயிடலை. 84 வயசுலதான் போயிருக்கார். எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டுத்தான் போயிருக்கார். எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இவ்வளவு கூட்டம் கூடியது கேபி சாருக்குத்தான்… என்று தழுதழுத்த குரலில் பேசி முடித்தார்.

செய்திகளுக்கு நன்றி : http://vayalaan.blogspot.com/2015/02/2.html

Our Score