உள்ளூர் விஷயங்கள் முதல் உலக விஷயங்கள்வரை விரல் நுனியில் வைத்திருக்கும் அறிவாளி யூகிசேது. இவரின் பேச்சு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கும். ரொம்ப நுணுக்கமாகக் கேட்டால்தான் விஷயம் புரியும். கல்லூரி புரபஸர் போல கையில் ஒரு பேக்குடன் வந்து அதிலிருந்து சில பேப்பர்களைத் தேடி எடுத்து தன் பேச்சைத் துவக்கினார். மெதுவாகப் பேசுகிறேன் என்று ஆரம்பித்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தார்.
பாலசந்தருக்கு தான் தூரத்து உறவினன் என்பதை பேச்சின் ஊடே ஓரிரு முறைகள் சொன்னார். “சினிமாவில் கேமராவைத் தூக்கிக் கொண்டு நகரத்தில் இருந்து கிராமத்துக்குப் போனவர் பாரதிராஜா, எங்களைவிட அவருக்கு கே.பி.யை பற்றி இன்னும் நெருக்கமாக தெரியும்.
100 கலைஞர்களை அறிமுகம் செய்தவர் கே.பி. அவரின் அறிமுகங்கள் எல்லாம் நூறு படங்களுக்கு மேல் நடித்து ஸ்டார் ஆனவர்கள். என்னையும் நடிக்க வைத்தவர் அவர்தான். என்னை ‘நையாண்டி தர்பார்’ பண்ணச் சொன்னவரே அவர்தான். 1981-ல் 9 படங்களை எடுத்தவர் பாலச்சந்தர்.
‘மூன்று முடிச்சு’ படத்தில் மாடியிலிருந்து இறங்கி வரும் ரஜினியை கீழிருந்து மேலே போவது போல் காட்டுவார். கமலுக்கு 35 படங்கள்… கமலைப் பட்டை தீட்டி பட்டை தீட்டி… செதுக்கியவர். ரஜினியை எம்.ஜி.ஆராகவும், கமலை சிவாஜியாகவும் மாற்றிக் காட்டுறேன் என்று சொல்லிச் செய்தவர் அவர். ஒரு படியில் முன்னுக்கு வந்தவர் ரஜினி…. படிப்படியாக முன்னுக்கு வந்தவர் கமல்.
‘பஞ்சதந்திரம்’ படத்தை கே.பி. பார்த்துவிட்டு போன் பண்ணி ‘அப்பா பேசுறேன்டா’ என்றதும் எதற்கோ திட்டத்தான் கூப்பிடுறார் என்று நான் நினைத்தேன். ஆனால், ‘நீ நல்லா நடிச்சிருக்கேடா… காலையில வீட்டுக்கு வாறேன்’ என்றார். அதேபோல் மறுநாள் காலையில் என் வீட்டுக்கு வந்து ‘வசனமெல்லாம் நல்லா பேசியிருக்கேடா’ என்று சொல்லி சந்தோஷப்பட்டார். ‘நான் எழுதுன வசனத்தை நான் நல்லா பேசமா, வேற யார் பேசுவா?’ என்றதும் என்னைக் கட்டிப் பிடித்து வாழ்த்தினார்..” என்றார் நெகிழ்ச்சியோடு..!
செய்திகளுக்கு நன்றி : http://vayalaan.blogspot.com/2015/02/1.html