full screen background image

“நீ முந்தினா நான். நான் முந்தினா நீ..” – கே.பி.யும் பாரதிராஜாவும் செய்திருந்த ஒப்பந்தம்..!

“நீ முந்தினா நான். நான் முந்தினா நீ..” – கே.பி.யும் பாரதிராஜாவும் செய்திருந்த ஒப்பந்தம்..!

சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதில் இருந்து சில பகுதிகள் :

abudhabi-stage

பா’ வரிசையில ரெண்டு பேரை இழந்துட்டோம்… கே.பி.யோட மறைவுக்குப் பின்னால எனக்கு படுத்தா தூக்கம் வரலைங்க… அவரோட நினைவுகள் போட்டு வாட்டுது. அதுக்கான காரணத்தையெல்லாம் வெளிய சொல்ல முடியாது. அந்த வலி எனக்குத்தான் தெரியும். 

இங்கே மோகன் பேசியது அவன் மனசில இருந்து வந்தது. ‘இனிமேல் ஐயா என் கைப்பிடித்து எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்’ என்றான். உண்மை… அது உண்மையான பாசம்.. கண்டிப்பாக உணருவான். ‘இவனை மாதிரி ஒரு உதவியாளன் எனக்கு இல்லையே?’ன்னு நான் வருந்தியிருக்கேன். இவனை ‘கே.பி.யின் நிழல்’ன்னு சொல்றாங்க… இவன் நிழல் இல்லை., நிஜம்.

‘எதிர் நீச்சல்’ படத்தை சைக்கிள்ல போயி பாத்துட்டு வந்து அதோட பாதிப்புல கொஞ்ச நாள் தூங்கவே இல்லை. என்ன ஒரு படம்..? காமெடியனா இருந்த நாகேஷ்கிட்ட இருந்த குணச்சித்திர நடிப்பை அழகா வெளியில கொண்டாந்திருப்பார்.

பாத்த வேலையை விட்டுட்டு நான் சென்னைக்கு கிளம்பினேன். ‘இதெல்லாம் வேண்டாத வேலை’யின்னு எல்லோரும் சொல்ல, எங்கம்மா மட்டுந்தான் எனக்கு 200 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி வச்சாங்க.. லாரில ஏறி சென்னை வந்தேன். என்னோட குறிக்கோளெல்லாம் பாலசந்தர் சாரைப் பார்க்கணும்… சிவாஜியைப் பார்த்து அவரு மாதிரி நடிகராகணுங்கிறதுதான்.. அதுக்காகத்தான் சென்னை வந்தேன்…

ஒரு கதை எழுதிக்கிட்டு பாலசந்தர் சாரைப் பாக்கப் போனேன். அவரு இங்கிலீஸ்லதான் பேசுவாருன்னு நினைச்சேன். எனக்கு அப்ப இங்கிலீஸ் தெரியாது. அதனால ஹிந்துல வேலை பார்த்த நண்பரை துணைக்கு அழைத்துக் கொண்டு போய் பார்த்தேன். கதையைச் சொன்னதும் கை விரல்களை இப்படிச் செய்தபடி கேட்டவர் எழுந்து வெளியில் நடக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் நான் உதவி இயக்குநராய் பலரிடம் பணி புரிந்தேன். பாலசந்தரிடம் பணி புரியவில்லை.

நான் இயக்குநராகி ‘16 வயதினிலே’ படத்தை எடுத்து முடிச்சேன். முக்கியமானவங்களுக்கு படத்தை போட்டுக் காட்டும்போது கமல் ‘கேபியை கூப்பிடுகிறேன்’ என்றான். எனக்குப் பயம்… அந்தாளு வருவாரா… வந்து ‘என்னய்யா படம்’ன்னு சொல்லிட்டா என்று யோசித்து ‘அவரு வருவாரா..?’ என்றேன். கமல் கூட்டிட்டு வந்தான். வந்து படம் பார்த்தார். நான் அவர் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். இடைவேளையில் ஒன்றும் பேசாமல் வெளியே போய் வந்தார். படம் முடிந்ததும் என்னை அழைத்து ‘நல்லா பண்ணியிருக்கே… நல்லா வருவே…’ என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். யார் படம் என்றாலும் நன்றாக இருந்தால் வாழ்த்துவதுடன் அடுத்த நாளே கடிதம் எழுதுவார். அதுபோல் எனக்கும் கடிதம் எழுதினார்.

எங்களுக்குள் நட்பு இறுக்கமானது. ஒரு முறை இரவு நேரத்தில் அவருடன் நானும், நாகேஷூம் பேசிக் கொண்டிருந்தோம். ‘வெளியில ஒரு ரவுண்ட் பொயிட்டு வரலாம்’ன்னு சொன்னப்போ ‘நீங்க போங்க… நான் வரலை’ என்று சொல்லிவிட்டார். நானும் நாகேஷூம் அப்படியே நடந்து போய் நிறைய விஷயங்கள் பேசி அரட்டை அடித்துத் திரும்பினோம். நான் ரொம்ப கரடு முரடானவன்… காடு மாதிரி.. ஒழுங்கில்லாதாவன்… ஆனா அவரு பூந்தோட்டம் மாதிரி.. அழகாச் செதுக்கி செதுக்கி வாழ்ந்தவர். இதை பல முறை அவரிடம் சொல்லியிருக்கேன்… பெரும்பாலும் இது போன்ற அரட்டைகளைத் தவிர்த்து விடுவார்.

அவரோட ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் வெளியானதும் பார்த்துட்டு ஒவ்வொரு சீன் குறித்தும் விரிவாக கடிதம் எழுதினேன்… சில வருடங்களுக்கு முன் அவர் வீட்டுக்குப் போனபோது ‘உங்களுக்கு நான் எழுதிய கடிதம் ஞாபகம் இருக்கா… இன்னும் இருக்கிறதா?’ என்றேன். ‘இருக்கு.. காட்டவா..?’ என்றார். அதுதான் கேபி. பத்திரமாக வைத்திருப்பார். எனக்கு அவர் எழுதிய கடிதமும் என்கிட்ட பத்திரமாக இருக்கு.

சபையில் சொல்லக் கூடாதுதான் இருந்தும் சொல்றேன்… என்னை அவர் எப்போதும் ‘தேவரே’ என்றுதான் அழைப்பார். நான் அவரை ‘ஐயரே’ என்றுதான் சொல்லுவேன்.

பதினைந்து வருசத்துக்கு முன்னர் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது ‘நான் முன்னாலயின்னா நீதான் தேவரே என்னைத் தூக்கணும்; அதே மாதிரி நீ முன்னாலயின்னா நான் வந்து தூக்குவேன்..’ என்றார். நான் உடனே ‘ஐயரே, நான் முன்னாலயின்னா, நீங்க வந்தா எங்க பயலுக கரடு முரடானவனுங்க ஏதாச்சும் சொல்லுவானுங்க.. ஆனா உங்க ஆளுங்க ரொம்ப நல்லவங்க என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க’ன்னு சொல்லிச் சிரித்தேன்.

அவரின் ‘குசேலன்’ பட விழா…எல்லோரையும் மேடைக்கு அழைத்தார்கள்… நான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். ‘எனக்கு ஒரே நண்பன் பாரதி.. பாரதி நீ மேடைக்கு வா’ என்று என்னை மேடையேற்றிய பெருந்தன்மைக்காரன் அவர். சக கலைஞரை மதிக்கத் தெரிந்தவர்…. இன்று ‘அவனா.. எப்போ ஒழிவான்..?’ என்றுதான் காத்திருக்கிறார்கள். ஆனால் என்னை தன்னோட நண்பன் என்று சொல்லி மேடையேற்றியவர் அவர்.

‘மனோகரா’, ‘சின்னப்பா’ன்னு எத்தனையோ நாடக் குழு அப்போ நாடகம் போடுறதுல பிரபலமா இருந்தாங்க.. ‘மனோகரா’வெல்லாம் சீன் செட்டிங்குன்னு பிரமாண்டமாக இருக்கும். எம்.ஆர்.ராதா ஒரு ஸ்கிரீனைக் கட்டிட்டு நாடகம் போட்டுருவாரு…. அந்தக் காலத்துல நாடகத்துக்கு ஹவுஸ்புல் போர்டு போட்டு நடத்துன ஒரே ஆள் பாலசந்தர்தான்..

ராஜா அண்ணாமலை மன்றத்துல ‘நீர்க்குமிழி’ நாடகம், ஹவுஸ்புல்.. டிக்கெட் வாங்கிட்டும் ரொம்ப பேர் இடமில்லாம நின்னுக்கிட்டு பாத்தாங்க. அப்ப பிளாக் டிக்கெட் இருந்தாகூட வாங்கியிருப்பேன். ஹவுஸ்புல்லுன்னாலும் எனக்கு அங்கு வேலை பார்க்கும் ஒருத்தனை தெரியும் என்பதால் அவனிடம் கேட்டு நானும் கடைசிவரையிலும் நின்றபடியே அந்த நாடகத்தை பார்த்துவிட்டு திரும்பினேன். என்ன ஒரு நாடகம்..? எல்லாருடைய நாடகத்துக்கும் கூட்டம் வரும் என்றாலும் ஹவுஸ்புல் போட்டு நாடகம் நடத்திய ஒரே ஆள் கே.பி.தான்…

அவர் உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்காருன்னு மோகன் போன் பண்ணியதும் அங்கே போனேன். புஷ்பா.. ‘பாரதி வந்திருக்கார்’ன்னு சொல்லுச்சு… கண்ணே திறக்கலை… ‘பாரதி வந்திருக்கேன்’னு சொன்னேன்… ரொம்ப நேரம் கழிச்சி மெதுவாக கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து ‘பாபாபா…ர…..தி….ரா…ஜா’ என்றார். தண்ணி கேட்டாரு.. உடனே புஷ்பா தண்ணியை எடுத்து எங்கையில கொடுக்க நான் அவருக்கு கொடுத்தேன்… குடிச்சாருய்யா… அதுதான் அவரா குடிச்ச கடைசித் தண்ணீர்… அதுக்கப்புறம் அவரு தண்ணியே குடிக்கலையாம்… ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றினார்களாம்.. மோகன் சொன்னான். அந்த மனுசனுக்கு நான்தான் கடைசித் தண்ணீர் கொடுத்தேன்யா…

அவர் இறந்துட்டாருன்னு செய்தி வந்தபோது நான் இலங்கையில் இருந்தேன். ஜப்னாவில் இருக்கும்போதுதான் மோகன் போன் பண்ணினான். அப்போ அங்கே சரியான மழை… வெள்ளக்காடா இருந்துச்சு… ‘இந்த மழையில போகவே முடியாது’ன்னு சொன்னாங்க… ‘எப்படியாச்சும் நான் உடனே போயாகணும்’ என்று சொல்லிவிட்டேன். பிறகு ஏற்பாடு பண்ணி கிட்டத்தட்ட மூண்றரை கிலோமீட்டர் தண்ணிக்குள்ளயே காரை படகு மாதிரி ஓட்டிக் கொண்டு வந்து என்னை ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

நீ செத்தா நான் தூக்குவேன்யான்னு அவரிடம் சொன்னதை நான் நிறைவேற்ற வேண்டும் என தவித்தேன்… அவரிடம் சொன்னது போல் அவரை நான் என் தோளில் தூக்கினேன்….

என்னையைப் பொறுத்தவரை மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி சொல்லிவிடுவேன். அதுவே பல நேரம் பிரச்சினை ஆகிவிடுகிறது. அதற்காக வருத்தப்படுவதில்லை….

புகழ் ஒரு போதை… அதை தலைக்கு ஏற்றாதீர்கள். மனதில் உள்ளதைப் பேசுங்கள்… இந்த வாழ்க்கையை இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக எதையாவது அழுத்தமாகப் பதிந்து செல்லுங்கள். இப்படித்தான் ஒருத்தன்கிட்ட ‘புகழைத் தூக்கி தலையில வச்சிக்காதே… கக்கத்துல வச்சிக்க’ன்னு சொன்னேன்… மேடையிலிருந்து இறங்கிப் போயிட்டான்ய்யா.. 

இந்த வாழ்க்கையில் எல்லாம் சேர்த்தாச்சு… இந்த வீடு, கார் எதுவுமே நம்மது இல்லை… எல்லாத்தையும் சேர்த்துட்டு எதையும் எடுத்துக்கிட்டுப் போகப் போவதில்லை. நாம இங்க வாழ்ந்ததுக்கு அடையாளமாக நம்முடைய படைப்பை மட்டுமே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். ஒரு விதையை விதைத்துவிட்டுச் செல்ல வேண்டும். நாம் மறைந்தாலும் அது பேசிக் கொண்டிருக்கும்.

ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டு பிடித்து அந்தப் படைப்பை நாம் வாழ்ந்த உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும். எங்க வீட்ல ஆறு பேர்ல எல்லாருக்கும் இறைவன் வாய்ப்புக் கொடுத்தானா என்றால் இல்லையே… எனக்கு அந்த வாய்ப்பை கடவுள் கொடுத்தான்.

வாழும்வரை அடுத்தவனை எப்படிக் கெடுக்கலாம்… அவன் எப்படி நல்லாயிருக்கலாம் என்று நினைக்காமல் நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதாவது படைப்பை விட்டுச் செல்ல வேண்டும். கே.பி. விட்டுச் சென்றிருக்கிறார். அவர் மறைந்ததாக நான் நினைக்கவேயில்லை..” என்றார் உருக்கமாக..!

செய்திகளுக்கு நன்றி : http://vayalaan.blogspot.com/2015/02/3.html

Our Score