தமிழ்த் திரையுலகில் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81.
கடந்த சில நாட்களாகவே டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார்.
தமிழ்த் திரையுலகத்தின் மூத்த குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் 400-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். கடைசியாக ‘இந்தியன்-2’ படத்திலும் அவர் நடித்திருந்தார். டெல்லி கணேஷின் இழப்பு தமிழ்த் திரையுலகிற்குப் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
டெல்லி கணேஷ் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியன்று பிறந்தவர். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் 1964-ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் வேலைக்கு சேர்ந்தார் டெல்லி கணேஷ். அப்போதே டெல்லியில் இருந்த தமிழ் அமைப்புகள் நடத்தும் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார் டெல்லி கணேஷ். டெல்லியில் உள்ள ‘தக்ஷிண பாரத நாடக சபா(DBNS)’ எனப்படும் தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து நடித்து வந்தார்.
1974-ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் தனது பணிக் காலத்தை முடித்துக் கொண்டு சென்னையில் வந்து செட்டிலானார் டெல்லி கணேஷ். சென்னையில் இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றினார்.
இந்த நேரத்தில் அப்போது சென்னையில் கோலோச்சிக் கொண்டிருந்த அமெச்சூர் நாடகக் குழுக்களின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. கிடைத்த நாடகங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார் டெல்லி கணேஷ். இந்த நேரத்தில்தான் டெல்லி கணேஷூக்கு நாடகவுலகின் பிரமுகர்களான மேஜர் சுந்தர்ராஜன், விசு, சோ ராமசாமி மற்றும் நாகேஷ் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்தது.
தொடர்ந்து காத்தாடி ராமமூர்த்தியுடன் நட்பு ஏற்பட, அவருடைய நாடகக் குழுவில் இணைந்தார் டெல்லி கணேஷ். விசு எழுதிய ‘டெளரி கல்யாணம் வைபோகமே’ நாடகத்தில் மாம்பலம் குசேலராக நடித்தார் டெல்லி. இந்த நாடகத்துக்குப் பிறகு டெல்லி நடித்த நாடகம் ‘பட்டினப்பிரவேசம்.’ இந்த நாடகத்தை தொடர்ந்து பல நாட்கள் பார்த்து வந்த ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் அதைத் திரைப்படமாக உருவாக்கினார்.
இந்தப் படத்தில்தான் டெல்லி கணேஷ் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த நேரத்தில்தான் அவரது பெயர் ‘கணேசனில்’ இருந்து ‘டெல்லி கணேசனாகி’, பின்பு ‘கணேசன்’ ‘கணேஷாக’ சுருக்கப்பட்டது.
சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் நடிப்பதை டெல்லி கணேஷ் நிறுத்தவில்லை. அவரே சொந்தமாக ‘ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கி, ‘மீண்டும் சுப்ரபாதம்’ ‘மாலை சூடவா’ ‘மாங்கல்யம் மனசு போல’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார். சுமார் 15 வருடங்கள் நாடகங்களில் நடித்தார்.
‘பட்டினப் பிரவேசம்’ படத்திற்குப் பிறகு டெல்லி கணேஷூக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. துரை இயக்கத்தில் உருவான ‘ஒரு வீடு ஒரு உலகம்’, ‘பசி’ என்ற இந்த இரண்டு படங்களும், டெல்லி கணேஷை வித்தியாசமான நாயகனாக அடையாளம் காட்டின.
டெல்லி கணேஷ் 2 படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். 1981-ம் ஆண்டில் வெளிவந்த ‘எங்கம்மா மகாராணி’ என்ற படத்தில் டெல்லி கணேஷ்தான் ஹீரோ. நாயகிகளாக சுமித்ராவும், ஒய்.விஜயா நடித்திருந்தனர். எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
1982-ம் ஆண்டில் ‘தணியாத தாகம்’ படத்திலும் நாயகனாக நடித்திருந்தார் டெல்லி கணேஷ். ஒரு தலை ராகம் படத்தை இயக்கிய இ.எம். இப்ராஹிமின் இயக்கிய இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் நாயகி சுஜாதா விஜயகுமாருடன் “பூவே, நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்” என்று டூயட் பாடியிருந்தார் டெல்லி. இந்த ஒரு சுவையான, இனிமையான பாடலுக்காகவே இந்தப் படம் இப்போதும் பேசப்படுகிறது.
டெல்லி கணேஷ் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியிருக்கிறார்.
கே.பாலச்சந்தர் படங்களின் துவக்கத்தில் டெல்லி கணேஷ் தொடர்ந்து நடித்து வந்தவர் இடையில் சில படங்களில் நடிக்காமல் இருந்து மீண்டும் நடிக்கத் துவங்கினார். கே.பி.யின் படங்களான ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘சிந்து பைரவி’, ‘கல்யாண அகதிகள்’, ‘புன்னகை மன்னன்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘ஜாதிமல்லி’ என்று கே.பி.யின் படங்களில் டெல்லி கணேஷ் தனி முத்திரை பதித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசனுடன் ‘ராஜபார்வை’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘புன்னகை மன்னன்’, ‘நாயகன்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலா காதலா’, ‘ஹேராம்’, ‘தெனாலி’, ‘இந்தியன்-2’ என புகழ் பெற்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் ‘பொல்லாதவன்’, ‘மூன்று முகம்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘புதுக்கவிதை’, ‘சிவப்பு சூரியன்’, ‘ஸ்ரீராகவேந்திரா’, ‘மிஸ்டர் பாரத்’, ‘நான் அடிமை இல்லை’, ‘மனிதன்’, ‘வேலைக்காரன்’, ‘சிவா’, ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, ‘பாபா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர்கள் இல்லாது கே.எஸ்.சேதுமாதவனின் ‘நிஜங்கள்’, ஆர்.சி.சக்தியின் ‘உண்மைகள்’, கோமல் சுவாமிநாதனின் ‘அனல் காற்று’, டிவி சந்திரனின் ‘ஹேமாவின் காதலர்கள்’, ஜெயபாரதியின் ‘உச்சி வெயில்’, ஐ.வி.சசியின் ‘கோலங்கள்’, நாசரின் ‘அவதாரம்’ ஆகிய படங்களில் டில்லி கணேஷ் நடித்து முத்திரை பதித்தார்.
இயக்குநர் விசுவின் முதல் படத்திலிருந்து கடைசி படம்வரையிலும் ஏதோவொரு கதாப்பாத்திரம் டெல்லி கணேஷூக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு விசுவுக்கு நெருக்கமான நண்பனாகவும், பிடித்தமான நடிகராகவும் இருந்திருக்கிறார் டெல்லி கணேஷ்.
பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன் என்று 1980-களின் ஹீரோக்களுடனும், அதற்கடுத்த தலைமுறையான விஜய், அஜித், பிரசாந்த், சூர்யாவையும் தாண்டி இப்போதைய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிவரைக்கும் அனைத்து இளம் நடிகர்களுடனும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ்.
‘ஆஹா’, ‘அரசு’, ‘லண்டன்’, ‘எதிரி’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘தலைநகரம்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இன்னும் எண்ணற்ற படங்களில் டெல்லி கணேஷின் வேடங்கள் இன்றைக்கும் பேசப்படுகிறது. கடைசியாக ‘இந்தியன்-2’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சஞ்சய் தத்தின் “தஸ்” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார் டெல்லி கணேஷ்.
திரைப்படம் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்கள், வெப் சீரிஸ், விளம்பரங்கள் அனைத்து வகையான பொழுது போக்கு திரைகளையும் ஆக்கிரமித்தவர் டெல்லி கணேஷ்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சின்னத்திரையில் இயக்கிய ‘சஹானா’ நெடுந்தொடரில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘சின்னத்திரை சிவாஜி’. அதிலிருந்து இவர் ‘சின்னத்திரை சிவாஜி’ என்று அழைக்கப்பட்டார்.
‘மர்ம தேசம்’, ‘கஸ்தூரி’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘பல்லாங்குழி’, ‘வசந்தம்’, ‘மனைவி’, ‘எங்கே பிராமணன்’, ‘செல்லமே’, ‘இப்படிக்குத் தென்றல்’, ‘திருப்பாவை’, ‘மனிதர்கள்’, ‘தினேஷ் கணேஷ்’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’, ‘ஆஹா’ என்று ஏகப்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருக்கிறார்.
இப்படி எண்ணற்ற வகையில் வெள்ளித்திரை, சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்த பெரியவர் டெல்லி கணேஷ் சிறந்த குணச்சித்திர நடிகருக்கு மாநில அரசின் விருதையும், கவுரவமிக்க ‘கலைமாமணி’ விருதையும் பெற்றிருக்கிறார்.
அவருடைய இந்த திடீர் மரணம் தமிழ்த் திரையுலகத்தினரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.