உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், எம்.பி.வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தெய்வ மச்சான்’.
இத்திரைப்படத்தில் விமல், சின்னத்திரை நடிகை நேஹா ஜா இருவரும் இணைந்து நடித்திருக்க, இவர்களுடன் பால சரவணன், வத்சன் வீரமணி, அனிதா சம்பத், பாண்டியராஜன், நரேன், தீபா ஷங்கர், கிச்சா ரவி, வேல.ராமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பல குறும்படங்களை இயக்கிய, மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.
‘தெய்வமச்சான்’ கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் நகைச்சுவை படம்.
விமலின் தந்தையாக பாண்டியராஜனும், தங்கையாக அனிதா சம்பத்தும் நடித்துள்ளனர்.
விமலின் கனவில், குதிரையின் மேல் ஏறி வரும் வேல.ராமமூர்த்தி என்ன சொல்கிறாரோ, அது அப்படியே நடந்துவிடும்.
இப்படியாக விமலின் கனவில் வரும் அவர் சிலர் இறப்பதாக கூறுகிறார். அது அப்படியே நடந்து விடுகிறது. இதனால் மிகுந்த பீதியிலிருக்கிறார் விமல்.
விமல், தன்னுடைய தங்கை அனிதா சம்பத்திற்கு மாப்பிள்ளையாக வத்சன் வீரமணியுடன் கல்யாணம் நிச்சயதார்த்தம் பேசி முடிக்கிறார்.
கல்யாண வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. வழக்கம்போல் கனவில் வரும் வேல.ராமமூர்த்தி அனிதா சம்பத்தின் கணவர் வத்சன் வீரமணி கல்யாணம் முடிந்த இரண்டு நாட்களில் இறந்து விடுவார் என்று சொல்கிறார்.
இதனால் விமல் இந்த கல்யாணத்தை தடுத்துவிட முயற்சி செய்கிறார். ஆனால் முடியவில்லை.
இதன் பிறகு நடக்கும் களேபரங்களை நகைச்சுவை கலந்த திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார், இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார்.
கிராமத்து இளைஞனாக பல படங்களில் நடித்த விமலுக்கு இந்தக் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது.
அவர் மாப்பிள்ளை வத்சன் வீரமணியை காப்பாற்றுவதாக செய்யும் செயல்கள் பாதி கடியாக இருந்தாலும், மீதி சிரிக்க வைக்கிறது.
அவருடன், பால சரவணனும் சேர்ந்து கொண்டு படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.
ஓவர் ஆக்டிங் செய்யும் தீபா ஷங்கர் இந்தப் படத்தில் பரவாயில்லை. பாண்டியராஜனை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். வத்சன் வீரமணி, அனிதா சம்பத் இருவரும் தங்களுக்கான கதாப்பாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
நேஹா ஜா, ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.
பாண்டியராஜன், நரேன், கிச்சா ரவி ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
தேவையற்ற காட்சிகளை நீக்கி படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் ஒருவிதமான சலிப்பு ஏற்படுவதை தடுத்திருக்கலாம்.
பல படங்களில் பார்த்து சலித்த காட்சிகளாக இருந்தாலும், லாஜிக்கை பற்றி கவலைப்படாதவர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி படம் பார்த்தால் ஓரளவு ரசிக்கக் கூடிய சிரிப்பு படமாக இருக்கும்.
RATING : 3 / 5









