‘தர்பார்’ – சினிமா விமர்சனம்

‘தர்பார்’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

‘2.0’ படத்திற்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தின் மூலமாக மீண்டும் இணைகிறது லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். ரஜினியுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. ‘கோலமாவு கோகிலா’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

மேலும் பாலிவுட் ஸ்டாரான சுனில் ஷெட்டி இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றும் யோகிபாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ், மன், பிரதிக் பாபர், ஜத்தின் சர்னா, நவாப் ஷா, தலிப் டகில் மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு அனிருத் இசையமைக்கும் ரஜினியின் படம் இது. அதேபோல் ‘கத்தி’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸூடன் இந்தப் படத்தின் மூலமாக இணைகிறார் அனிருத்.

தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘தளபதி’ படத்திற்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் மூலமாக ரஜினியுடன் இணைகிறார் சந்தோஷ் சிவன். இதேபோல் ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இரண்டு படங்களில் ஒளிப்பதிவாராக பணியாற்றியிருக்கும் சந்தோஷ் சிவன் மூன்றாவது முறையாக இந்தப் படத்திலும் ஒளிப்பதிவு பணியைச் செய்யவிருக்கிறார்.

படத் தொகுப்பு – ஏ.கர் பிரசாத், கலை இயக்கம் – டி.சந்தானம், சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின், ராம் லஷ்மண் செல்லா, பாடல்கள் – விவேக், இணை தயாரிப்பாளர் – சுந்தர்ராஜ், இசை வெளியீடு – RUBAX, இணைய கூட்டணி – கானா, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ரஜினியும், ஏ.ஆர்.முருததாஸும் இணையும் முதலாவது படம் இதுவாகும்.

ஆதித்யா அருணாச்சலம் என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெல்லியில் யாருக்கும் அடங்காத போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ரவுடியாகத் தெரிந்தாலே சுட்டுத் தள்ளுகிறார். அவரை விசாரிக்க வரும் மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரியையே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அனுப்புகிறார்.

இப்படியொரு கிரகத்துவம் பிடித்த அதிகாரிதான் இப்போதைக்கு மும்பைக்கு தேவை. அவரை மூட்டை முடிச்சைக் கட்டி அனுப்பி வையுங்கள் என்று மராட்டிய அரசு, மத்திய உள்துறையிடம் கோரிக்கை வைக்க.. மும்பைக்கு வந்து இறங்குகிறார் ரஜினி.

வந்தவுடனேயே தனது ஆட்டத்தைத் துவக்குகிறார் ரஜினி. மும்பையில் பிரதான இல்லீகல் தொழிலாக இருக்கும் போதை மருந்து கடத்தலை ஒழிக்க துப்பாக்கியைத் தூக்குகிறார். ஒரே நாள் இரவில் 2000 பெண்களை விபச்சார விடுதிகளில் இருந்து காப்பாற்றுகிறார்.

போதை மருந்து கடத்தல் மன்னனான நவாப் ஷாவை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் அவன் ஆள் மாறாட்டம் செய்து தப்பியோடுகிறான். இதையறியும் ரஜினி அவனை விரட்டிச் சென்று போட்டுத் தள்ளுகிறார்.

இப்போதுவரையிலும் வெளிநாட்டில் இருந்து அனைத்தையும் ஆபரேட் செய்து வந்த மெயின் வில்லனான சுனில் ஷெட்டி, ரஜினியின் ஆவேசங் கண்டு கோபத்துடன் மும்பைக்கு வந்து இறங்குகிறார்.

ரஜினியையும் அவரது மகள் வள்ளி என்னும் நிவேதிதா தாமஸையும் கொலை செய்ய முயல்கிறார். ரஜினி தப்பிக்க வள்ளி இறந்து போகிறாள். தன் மகள் கொலைக்கு பழி வாங்கவும், மும்பை போலீஸில் கறை படந்த ஒரு படுகொலை சம்பவத்துக்கு நியாயம் கேட்கவும் வில்லன் சுமன் ஷெட்டியைத் தேடுகிறார் ரஜினி.

இறுதியில் சுமன் ஷெட்டியை வதம் செய்தாரா ரஜினி என்பதுதான் இந்த தர்பாரின் திரைக்கதை.

சந்தேகமேயில்லாமல் இது ரஜினியின் தர்பார்தான். ஒரு ரஜினி ரசிகனால்தான் இது மாதிரி திரைப்படத்தை எடுக்க முடியும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய முந்தைய பெயரையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு முழுக்க, முழுக்க ரஜினியின் தாசனாக மாறி இந்தப் படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

என்னதான் மேக்கப் போட்டாலும் வயதானது ரஜினியின் முகத்தில் தெரிந்தாலும் அதையும் தாண்டி அவரது ரசிகர்களுக்கு அவர் தரும் உற்சாகம் அளப்பரியது.

வயதானாலும் அவரிடமிருந்து மறைந்து போகாத ஸ்டைலான நடை.. வசன உச்சரிப்பு.. பாடி லாங்குவேஜ்… சின்னச் சின்ன காமெடிகள்.. போலீஸ் மிடுக்கு.. சண்டை காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் ஆவேசம், வேகம்.. எல்லாமுமாக சேர்ந்து இந்த ஆதித்யா அருணாச்சலத்தை பழைய ரஜினியாக அவரது ரசிகர்கள் முன் காட்டியிருக்கிறது.

ரஜினியின் இதற்கு முந்தைய படங்களான ‘கபாலி’, ‘காலா’, ‘பேட்ட’ படங்களில் வயதான அதே ரஜினியே பவனி வந்தார். ஆனால் இதில் ரஜினியை முடிந்த அளவுக்கு இளமையாக்க முயன்றிருக்கிறார்கள். ரஜினியின் ரசிகர்கள் இருக்கும்வரையிலும் இதை யாரும் தவறென்று சொல்லிவிட முடியாது. ரஜினி ரசிகர்களுக்கு இது தங்களின் தலைவரின் தர்பார்தான்..!

தனது மகள் காட்டும் பாசத்தில் உருகுவதில் மட்டும் போலீஸ்கார கேரக்டரில் இருந்து வெளியில் வந்திருக்கிறார் ரஜினி. ஒட்டு மொத்தப் படத்திலேயே மிகவும் சிறப்பானது இந்தப் பகுதிதான். நிவேதிதா தாமஸ்-ரஜினி பாசக் காட்சிகள்தான் ஒட்டு மொத்தமாய் படத்திலிருந்து நம் மனதில் ஒட்டியிருப்பது.

மகளுக்காக நயன்தாராவை லுக்விட ஆரம்பித்து.. பேசத் துவங்கி.. ரெஸ்ட்டாரெண்ட்டில்  குடித்த காபிக்கு ஷேர் காசை கேட்டு அசடு வழிந்து.. இப்படியொரு ரஜினியைத்தான் ரஜினி ரசிகர்கள் இல்லாதவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இது போன்றக் காட்சிகள் இந்தப் படத்தில் குறைவு என்பதுதான் மற்றவர்கள் சொல்லும் குறை..!

மும்பைக்கு போகச் சொல்லும்போது, “நான் எடுத்த காரியத்தை முடிக்காமல் திரும்ப மாட்டேன்.. அதேபோல் தப்பு செய்யுற யாரையும் விடவும்மாட்டேன்.. அங்க வேலையை முடிக்கிறதுக்கு முன்னாடி என் தாடியையும் எடுக்கமாட்டேன்” என்று ரஜினி ஸ்டைலாக சொல்லி கண் சிமிட்டும் காட்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

சண்டை காட்சிகளில் பரமபதம் ஆடியிருக்கிறார் ரஜினி. தொழில் நுட்பம் கை கொடுத்தாலும் சண்டை இயக்குநர்களின் அசாத்தியமான ஒத்துழைப்பினால் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அத்தனை அட்டூழியத்தையும் அழகாகப் படமாக்கியிருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷன் சண்டை காட்சியில் புதுமையாக நடனமாடியபடியே உருவாக்கியிருப்பது அழகோ அழகு.. ரசிகர்களின் கை தட்டல் காதைக் கிழிக்கிறது. இப்படியே ரஜினியின் அடுத்தப் படமும் வெளிவந்தால், ரஜினி பேக் டூ தி 1985-வாக மாறிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

படத்தின் விற்பனைக்காக நயன்தாரா சேர்க்கப்பட்டிருக்கிறார் போலும். படத்தின் முற்பாதியில் 3 காட்சிகளிலும், பிற்பாதியில் சில காட்சிகளிலும் பவனி வருகிறார். ஒரு காலத்தில் குஷ்பூவின் ஜாக்கெட்டுதான் தமிழகத்து மக்கள் மத்தியில் பேமஸ். இப்போது அதற்குப் போட்டி வந்துவிட்டது. முதுகு முக்கால்வாசி தெரிய நயன்ஸ் அணிந்து வரும் ஆடைகளில் எது பெஸ்ட் என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவுக்கு கலர்புல்லாக வலம் வருகிறார். திருமணம் நடந்துவிடுமோ என்று பயத்தில் இருந்த நேரத்தில் நல்லவேளையாக ஸ்ரீமன் புண்ணியத்தில் முருகதாஸே அதை கட் செய்திருக்கிறார். நல்லது.

நிவேதிதா தாமஸ் படத்திற்கு நிச்சயமாக பலம் சேர்த்திருக்கிறார். அவருடைய அப்பா மீதான பாச நடிப்புதான் படம் பற்றிய கருத்தை வெளியில் பரவலாக சொல்ல வைத்திருக்கிறது. மயங்கிக் கிடக்கும் அப்பாவின் மேல் நிவேதா சாய்ந்திருக்கும் அந்தக் காட்சி ஒரு கவிதையாய் தெரிகிறது.. குட் செலக்ஷன்.

யோகிபாபு ஆச்சரியமாக கொஞ்சம் இளைத்திருந்தாலும் பேசும் வசனங்களில் இளைக்கவில்லை. அதிலும் ஆச்சரியமாக ரஜினியையே கலாய்த்துத் தள்ளியிருக்கிறார். இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்த ரஜினிக்கும் நமது பாராட்டுக்கள்.

வில்லன்களில் சுனில் ஷெட்டியின் நடிப்பு எடுபடவில்லை. நவாப் ஷாவை கொஞ்சம் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்பது ஊருக்கே தெரியும் என்றாலும், இன்னும் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கலாம்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ரஜினியின் இளமைத் தோற்றம் அழகாகப் பதிவாகியிருக்கிறது. போலீஸ் டிரெஸ்ஸில் எதிரிகளை பந்தாடுவதாகச் சொல்லி சண்டை இயக்குநரின் இயக்கத்தில் ரஜினி காட்டும் ஸ்டைலையும், வேகத்தையும் அத்தனை அழகாகவும் படம் பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் அனிருத்.. படம் மொத்தத்தையும் கிழி, கிழியென்று கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார். காது கிழிந்துவிட்டது. ஒரு பாடலைத் தவிர மற்றவைகளை யோசித்து, யோசித்துதான் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. பின்னணி இசையை இத்தனை கர்ண கொடூரமாக்கியிருக்க வேண்டாம்.

சண்டை இயக்குநர்களான ராம் லஷ்மண் மற்றும் அன்பறிவ் சகோதரர்களுக்கு பெருத்த நன்றி.. அற்புதமான சண்டை காட்சிகள்.. ஒலி வடிவமைப்பாளர் பின்னணி ஒலியை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொடுத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

படத்தின் தொகுப்பாளர் ரஜினி படம் என்பதையும் தாண்டி 20 நிமிடங்கள் கத்திரி போட்டிருக்கலாம். கல்யாண வீட்டில் நடக்கும் பாடல் தேவையில்லாதது.. படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

படம் மும்பையில் நடப்பதால் படம் முழுக்கவே இந்திவாலாக்களின் ராஜ்ஜியம்தான். ஒரே அந்நிய முகமாகவும், அந்நிய பாஷையாகவும் இருக்க.. ஒண்ணு ரஜினியைக் காட்டுங்க.. இல்லாட்டி பாட்டு போடுங்க.. இல்ல.. சண்டைய போடுங்கப்பா என்று ரஜினி ரசிகர்களையே சொல்ல வைத்துவிட்டார் முருகதாஸ்.

ரஜினி படம் என்பதால் லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது என்று முருகதாஸ் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்றாலும் இந்தளவுக்கா என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

மனித உரிமை ஆணைய பெண் அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டி கையெழுத்து வாங்குவதையெல்லாம் ஒரு சாதாரண குடிமகன்கூட ஏற்க நம்ப மாட்டான்.

மனித உரிமை ஆணையம் என்று அந்த அதிகாரி வந்த வண்டியில் இருக்கிறது. ஆனால் மனித உரிமை கழகம் என்று அவரே வசனம் பேசுகிறார்.. துணை இயக்குநர்களின் மிஸ்டேக்கோ..?!

சிட்டி போலீஸ் கமிஷனராகவே இருக்கட்டும். மாநிலத்தின் சுகாதாரத் துறையின் செயலாளரை தன் அலுவலகத்திற்கு வரவழைக்க முடியுமா..? எல்லா மாநிலங்களிலும் ஐ.ஏ.எஸ்.களின் கீழ்தான் ஐ.பி.எஸ்.கள் வேலை பார்க்கிறார்கள்.

இதேபோல் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சாகக் கிடக்கும் ஒரு பெண்ணிடம் எந்த மருத்துவராவது “நீ இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப் போற”ன்னு சொல்லுவாங்களா..?

மனித உரிமை கமிஷன் ரஜினியை மெண்ட்டலி அன் பிட் என்று சொன்னதற்காக சம்பந்தமேயில்லாமல் அவரை தண்டால், பஸ்கியெல்லாம் எடுக்க வைப்பது எதற்காக என்பதை முருகதாஸ்தான் சொல்ல வேண்டும்..!

எது எப்படியிருந்தாலும்.. மிகப் பெரிய தயாரிப்பாளர் தயாரிக்கிறார். படத்தில் ரஜினி இருக்கிறார். அவரை தரிசிக்க கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடைய மேஜிக் இயக்குதல் திறமை இருக்கிறது.. இது போதும் என்று முடிவெடுத்திருக்கிறார் முருகதாஸ். அவருடைய நினைப்பு முற்றிலும் பலித்திருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றி ரஜினியை மீண்டும் பழைய ரஜினியாகவே உருவாக்கப் போகிறது..!

Our Score