குக்கூ – அசத்திய டிரெயிலர்..!

குக்கூ – அசத்திய டிரெயிலர்..!

மிகச் சிறப்பான ஒரு எதிர்பார்ப்பை உண்டு செய்திருக்கிறது எழுத்தாளர் ராஜூமுருகனின் குக்கூ படத்தின் டிரெயிலரும், பாடல் காட்சிகளும்..

ஆனந்தவிகடனில் தான் எழுதி வந்த ‘வட்டியும் முதலும்’ தொடரின் மூலமாக அனைத்துவகை மக்களின் ஆதரவையும் பெற்றவர் ராஜூ முருகன். இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் இவருடைய ‘வட்டியும் முதலும்’ புத்தகம்தான் விகடன் பிரசுரத்தில் அதிகமாக விற்பனையான புத்தகம்..! இவருடைய எழுத்தாற்றல் பலரையும் கவரவே, கோடம்பாக்கமும் அவரை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டது.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘குக்கூ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ராஜூமுருகன். இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மாளவிகா நடித்துள்ளனர். கண் பார்வையற்ற இருவரின் காதலையும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையையும் ஒரு சேரச் சொல்கிறது இப்படம்.. வசனங்களும், காட்சியமைப்புகளும், ஒளிப்பதிவும் அற்புதம் என்று சொல்ல வைக்கிறது..!

“கண்ணு இருக்குற ஆம்பளை எங்க வேண்ணாலும் இருக்குறான். ஆனா மனசு இருக்குற ஆம்பளை எல்லா இடத்துலயுமா இருக்கான்..?”  என்று மனசைத் தொடும் வசனங்கள் பட்டென்று நம்மை கிறங்கடிக்கிறது..! சந்தோஷ் நாராயணனின் இசையில் ஒலித்த பாடல்களும் காதுகளை இனிமையாக்கின..

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தருமென்று கங்கணம் கட்டிச் சொல்ல வைக்கிறது இப்படத்தின் டிரெயிலர்.

பெஸ்ட் ஆஃப் லக் ராஜூ முருகன்..!

Our Score