full screen background image

சித்தப்பாவா..? அண்ணனா..? சூர்யா-கமல்ஹாசனின் ருசிகரப் பேச்சு..!

சித்தப்பாவா..? அண்ணனா..? சூர்யா-கமல்ஹாசனின் ருசிகரப் பேச்சு..!

‘குக்கூ’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் மறைந்த கேமிரா கவிஞர் பாலுமகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வெறும் தொப்பியை மட்டுமே அடையாளமாக திரையில் காண்பித்துவிட்டு… பின்னணியில் பாலுமகேந்திராவின் பேச்சை ஒளிபரப்பியது மிகச் சிறப்பானது..

படத்தின் பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட, நடிகர் சூர்யா அதை பெற்றுக்கொண்டார். டிரெயிலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட, இயக்குநர் லிங்குசாமி பெற்றுக்கொண்டார்..

விழாவில் சூர்யா பேசும்போது, ’’டிரெயிலரை பார்க்கும்போது எனக்குத் தோணுறது இதுதான்..” என்றவர் கைகளை குவித்து தரையைத் தொட்டு வணங்கினார். மேலும் தொடர்ந்து பேசுகையில், “நான் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்றால் அது, கமல் ஸார் போட்டுக் கொடுத்த பாதைதான். அவரை நான் ‘சித்தப்பா’ என்றும் அழைத்திருக்கிறேன். ‘அண்ணன்’ என்றும் அழைத்து இருக்கிறேன். ‘சித்தப்பா’ என்பதைவிட, ‘அண்ணன்’ என்றால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் கூடுவதால், ‘அண்ணன்’ என்றே எப்போதும் அழைக்கிறேன்’’ என்றார்.

அடுத்து பேசிய கமல்ஹாசன் ’’எனக்கு வழக்கமான சினிமா மூட நம்பிக்கைகள் கிடையாது. இருந்தாலும், நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள். இன்று காலை நரி முகத்தில் விழித்து இருக்கிறேன். இந்தப் படத்தை தயாரித்த ‘பாக்ஸ்’ நிறுவனத்தைத்தான் சொல்கிறேன். ஹாலிவுட்டில், பாக்ஸ் ஸ்டார் இருபதாம் நூற்றாண்டை கடந்து இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான் எப்போதும் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்பை மட்டுமே நம்புபவன்.

‘குக்கூ’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, இந்த படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் புலப்படுகிறது. சிறந்த நாவல்களை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று 35 வருடங்களாக சொல்லி வருகிற கூட்டத்தை சேர்ந்தவன் நான். வைக்கம் முகமது பஷீர், ராஜுமுருகனுக்கு மட்டுமல்ல. எனக்கும் கதாநாயகன்தான். அங்கிருந்துதான் வேர் தொடங்குகிறது. சேரன் சொன்ன பொறாமை எனக்கும் உண்டு. என் ஊரில், என் தம்பிமார்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார்கள் என்று பெருமைப்படுகிறபோது, பொறாமை காணாமல் போய்விடுகிறது. என் பொறாமை, ஆரோக்கியமான பொறாமை.

படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் ரெயிலில் பயணித்தபடி, காற்றை தொட்டு செல்வது போல் காட்சி வருகிறது. இதைத்தான் நண்பர் வைரமுத்து பார்வையற்றவர்களை பற்றி சொல்லும்போது, ’’உங்களுக்கு இரண்டு கண்கள். எங்களுக்கு இருபது கண்கள், நகக்கண்கள்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சினிமா வர்த்தகம் சார்ந்தது. அதுவே நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானவர்கள்தான் எங்களைப் போன்றவர்கள். திறமைக்கு தலைவணங்க வேண்டும். நான் சொல்லாலும், சூர்யா செயலாலும் அதை செய்து காட்டியிருக்கிறோம். எனக்கு இரட்டை வேடம் பிடிக்கும். சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான்தான். அண்ணனும் நான்தான். சிவகுமார் அருகில் இருக்கும்போது சூர்யாவுக்கு நான் சித்தப்பா. அவர் அருகில் இல்லாதபோது, அண்ணன். இப்படி சொல்வதால், ‘நீ எனக்கு மகனா?’ என்று சிவகுமார் கோபித்துக் கொள்வார். சூர்யா சொன்னது போல், அவருடைய திறமையை நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில், நான் மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, ‘இப்போதெல்லாம் தமிழில் நல்ல நல்ல படங்கள் வருகிறதாமே?’ என்று கேட்டார்கள். அதில், உங்களுக்கும் பங்கு உண்டு. தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். ஹாலிவுட்டை தொடர்ந்து தென்னகத்தின் திறமை உலகை நோக்கி பயணப்படுவதாகவே நான் நினைக்கிறேன்..’’ என்றார்.

முன்னதாக பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கேயார், “கமலுக்குக் கொடுத்த   பத்மபூஷன் விருதினால் அந்த விருதுக்குத்தான் பெருமை” என்றவர், “கமலின் மருதநாயகம் படத்தினை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்க வேண்டும்..” என்றும் கேட்டுக் கொண்டார்..!

எல்லாம் சரி.. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஏதோவொரு ஆர்வத்தில் ‘காதல் இளவரசன்’ என்று சூர்யாவை அழைத்துவிட்டார். கொடுத்த்தை வாபஸ் வாங்க முடியாது என்பதால் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக அடுத்து பேச வந்த கமல்ஹாசனை ‘காதல் ராஜா..’ என்றார்.. ம்ஹூம்.. நல்லாவா இருக்கு..? நாங்க கொடுத்த பட்டத்தை மாத்துறதுக்கு இவங்க யாரு..? எங்களுக்கு என்றைக்குமே கமல்தான் காதல் இளவரசன்..!!!

Our Score