தமிழ் சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத கிரவுண்ட் பண்டிங் முறையில் இரண்டு படங்களை தயாரிப்பதற்காக நிதி ஆதாரத்தை திரட்டி சாதனை படைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜெய்லானி, மற்றும் முத்துராமலிங்கன்.
‘கேள்விக்குறி’ படத்தின் இயக்குநரான ஜெய்லானியும், ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் இயக்குனர் முத்துராமலிங்கனும் சேர்ந்து ‘மூவி பண்டிங்’ என்ற நிறுவனத்தை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பித்தார்கள்.
“இது ஒரு நல்ல ரூட்டு.. எல்லா விஷயங்களிலும் வெளிப்படையா இருப்போம். கண்டிப்பா ஒர்க்-அவுட் ஆகும்…” என்று ஆணித்தரமாக நம்பினார் இயக்குனர் ஜெய்லானி. கூடவே தனது நண்பரும், இயக்குநருமான முத்துராமலிங்கனையும் இணைத்துக் கொண்டார்.
கன்னடத்தில் பல பேரிடம் பணம் வாங்கி எடுத்த படமான ‘லூசியா’வின் ஹிட்டு ரூட்டுதான் இவர்களின் ரூட்டு. இந்த நெட்வொர்க் மூலமாக ஜெய்லானி இயக்கும் ‘சவுண்ட் கேமரா ஆக்சன்’ மற்றும் முத்துராமலிங்கன் இயக்கும் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ ஆகிய இரண்டு படங்களுக்கும் கிரவுண்ட் பண்டிங் முறையில் நிதி திரட்ட ஆரம்பித்தார்கள்.
சினிமா கனவுகளுடன், திறமைகளும், கையில் பணமும் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் மூவி பண்டிங் நெட்வொர்க் நிறுவனத்தில் இணைந்து தங்களது நீண்ட நாளைய சினிமா கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
45 நாட்கள் என்று நிதி ஆதரத்துக்கான நாட்கள் முடிவு செய்யப்பட்டு வேலைகளை முடுக்கி விடப்பட்டது. ‘இரண்டு படங்களுக்கும் தேவையான பண்ட் வந்துடுச்சு.. பிப்ரவரியில ஷூட்டிங்கை ஆரம்பிக்கப் போறோம்…’ என்கிற வெற்றிச் செய்தியை நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார்கள் இரண்டு இயக்குநர்களும்.
நேற்று நடந்த இந்த மூவி பண்டிங் சக்சஸ் மீட்டில் இயக்குனர் கரு. பழனியப்பன் மற்றும் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தின் இயக்குனர் மீரா கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், “தமிழ் சினிமாவுக்கு இந்தக் க்ரவுட் பண்டிங் முறை புதுசுன்னு நெறைய பேர் நெனைக்கலாம். ஆனா எனக்குத் தெரிஞ்சு அந்தக் காலத்துல பாரதியார்தான் முதல் முதல்ல கிரவுட் பண்டிங் முறையை ஆரம்பிச்சு வெச்சார்..” என்கிற ஆச்சரிய வரிகளோடு பேச ஆரம்பித்தார்.
“கிரவுட் பண்டிங் முறையை முதன் முதல்ல ஆரம்பிச்சு வச்சவர் பாரதியார்தான். 1920-ல் அவர் தன் நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘நான் ஒரு புத்தகம் கொண்டு வரப்போறேன். அதுக்கு 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுது. என்னோட நண்பர்கள் ஆளுக்கு 100 ரூபா கொடுத்து உதவுனீங்கன்னா, அவங்களுக்கு நான் அதை வட்டியோட திருப்பி கொடுத்துருவேன்’ அப்படின்னு சொல்லிருக்கார். காலணா, அரையணா வட்டிக்கு கடன் கொடுத்துட்டு இருந்த காலத்திலேயே ‘இரண்டு பைசா வட்டி தர்றேன்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார் பாரதியார்…” என்றார்.
மேலும், “முத்துராமலிங்கன் நான் மதுரைல படிச்ச அமெரிக்கன் காலேஜ்ல எனக்கு சீனியர். அவர் ஒரு பத்திரிகையை ஆரம்பிச்சு அதை மக்கள்கிட்ட விற்கிறதுக்கு நாலு மாட்டு வண்டியில சுத்தினார்னு கேள்விப்பட்டேன். அப்படித்தான் ஒரு வேலையின்னு இறங்கிட்டா, அதுல முழுசா நம்பிக்கையோட இறங்கிடணும். அதுக்கப்புறம் அவர் ‘நக்கீரன்’, ‘குமுதம்’, அப்புறம் சினிமாவுல புரொடக்ஷன் மேனேஜர்னு மாறி மாறி வேலை செஞ்சார்.
எனக்கு அவர்கிட்ட ரொம்பப் பிடிச்சதே அவரோட கோபம்தான். முத்துராமலிங்கன் அடிப்படையில் ரொம்ப கோபக்காரர். இந்த சமுதாயத்தில் யாரெல்லாம் ரொம்பக் கோபப்படுறாங்களோ, அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்ன்னா அப்படி கோபப்படுறவங்ககிட்டத் தான் நேர்மையும் இருக்கும்ன்னு நம்புறவன் நான்.
அதேபோல ஜெய்லானி சாரைப் பத்தி இயக்குனர் பாலாஜி சக்திவேல் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஜெய்லானியோட ‘கேள்விக்குறி’ படத்தை நீங்க கண்டிப்பா பாருங்க பழனியப்பன். ரொம்ப நல்ல படம்னு சொன்னார். அப்படிப்பட்ட திறமைசாலியான அவரும் சேர்ந்து இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கார். அதுல கண்டிப்பா ஜெயிப்பாங்கன்னு நான் நம்புறேன்.
இந்த மாதிரி ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது முதல்ல நாம அமைதியா இருந்தாலே போதும். அது நல்லபடியா நடக்கும். அதுக்கு பாரதியாரே ‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர். அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்’னு சொல்லிருக்கார். அதையேதான் நானும் இங்க எல்லாருக்கும் சொல்றேன். ஒரு நல்ல முயற்சிக்கு பண உதவி செய்யாவிட்டாலும் அமைதியா இருந்தாலே போதும். அந்த வகையில நாம கண்டிப்பா இந்த முயற்சிக்கு சப்போர்ட் பண்ணனும்…” என்றார் முத்தாய்ப்பாக.
இயக்குனர் மீரா கதிரவன் பேசும்போது, “நான் ஒரு குறும்படம் எடுக்கும்போது க்ரவுட் பண்டிங் முறையிலதான் எடுத்தேன். என்னோட நண்பர்கள் கொஞ்சம், கொஞ்சம் காசு கொடுத்து அந்தப் பணத்துலதான் என்னோட முதல் குறும்படம் தயாரானது. இப்போ தமிழ் சினிமாவுல க்ரவுட் பண்டிங் முறையிலதான் பெரும்பாலான படங்கள் ரிலீசாகுது.
ஜெய்லானி, முத்துராமலிங்கன் இவங்க முயற்சியை ஆரம்பத்துல இருந்தே நான் பார்த்துக்கிட்டு வர்றேன். ரொம்ப வெளிப்படையா இதைச் செய்றாங்க. அதுக்கு ஏத்த மாதிரியே இன்னைக்கு படம் பண்றதுக்கு பண்ட் ரெடின்னு இந்த மேடையில சந்தோஷமா அறிவிச்சிருக்காங்க. கண்டிப்பாக கன்னட ‘லூசியா’ மாதிரி தமிழ்லேயும் நெறைய ‘லூசியா’க்கள் வரும்னு நம்புறேன். இந்த முயற்சிக்கு என்னோட சப்போர்ட் எப்போதுமே இருக்கும்…” என்றார்.
விழாவில் தமிழன் டிவி மற்றும் தமிழன் கலைக்கூடம் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளருமான கலைக்கோட்டுதயம், மூவி பண்டிங் முதலீட்டாளர்கள் சிங்கப்பூர் சையது இப்ராகிம், சுதர்சன லிங்கம், பொற்கோ, சூர்ய வடிவேல், மோகன்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.