full screen background image

பூக்கி – சினிமா விமர்சனம்

பூக்கி – சினிமா விமர்சனம்

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக இந்த பூக்கிஎன்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்ற அஜய் திஷன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், Bigg Boss சத்யா, MJ ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

நாயகனாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் விஜய் ஆண்டனி, தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கும்விதமாக, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தயாரிப்பு: Vijay Antony Film Corporation, தயாரிப்பாளர்: ஃபாத்திமா விஜய் ஆண்டனிஇயக்கம், ஒளிப்பதிவு: கணேஷ் சந்திராஎழுத்து: புதிய பரிதிஇசை: விஜய் ஆண்டனிஎடிட்டர்: கண்ணன் பாலுகலை இயக்கம்: பிரகதீஸ்வரன் பன்னீர் செல்வம்ஸ்டண்ட் இயக்கம்: பிரபு ஜாக்கிஆடை வடிவமைப்பாளர்: மாளவிகா செல்வம்பாடலாசிரியர்: லாவர்தன்நடனம்: ஹரிகிரண், பத்திரிக்கை தொடர்பு: சதீஷ் (AIM).

இன்றைய தலைமுறையினர் தங்களுக்குள் செல்லமாக, ஒருவருக்கொருவர் கொஞ்சி அழைக்கும் வார்த்தையே பூக்கி”. அது இந்தப் படத்தின் கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையாக இருக்குகிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்போதைய இளைய சமூகம் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த, தன்னிடம் அன்பு காட்டும் நெருங்கிய நண்பன் அல்லது நண்பிகளை பூக்கி என்று அழைப்பது சகஜமாகி கொண்டிருக்கிறது.

அப்படி பூக்கியாக இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் காதலர்களாகி கடைசியாக திருமணமும் செய்து கொள்கிறார்கள். அது மாதிரியான ஒரு கதையைத்தான் இந்தப் படத்தில் எழுதியிருப்பதால் படத்தின் பெயரை பூக்கி என்று வைத்து விட்டார்கள்.

ஹீரோ அஜய் தர்ஷூம், ஹீரோயின் தனுஷாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்து அவர்களுக்குள்ளேயே காதலை வளர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரு சின்ன மோதலில் அவர்கள் இருவருக்கும் ஈகோயிசத்தை தூண்டிவிட ஒருவர் ஒருவர் கத்திக் கொள்கிறார்கள். சண்டையிட்டு கொள்கிறார்கள். அந்த சண்டை கடைசியாக பிரேக்கப்பில் போய் முடிகிறது.

இவ்வளவு தூரம், இத்தனை வருடங்களாக காதலித்து அதற்கு பிறகு ஒரே ஒரு வார்த்தையில் பிரேக்கப் என்று சொல்லிவிட்டு போனால் எப்படி என்று அஜய் தர்ஷன் கேட்க அவ்வளவுதான் என்று சொல்லி காதலுக்கு குட் பை சொல்லிவிட்டு போகிறார் ஹீரோயின்.

அதன் பின்பு நாயகி தன்னுடைய கவனத்தை ஆன்மீகம் பக்கம் திருப்புகிறார். நாயகனோ சிக்ஸ் பேக் வைக்கலாம் என்று எண்ணத்தில் ஜிம்முக்கு எல்லாம் போயி தன்னுடைய உடலை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அடுத்து இருவருக்குமே வேறு ஒருவர் உடன் காதலும் ஏற்படுகிறது. அந்தக் காதலையும் வளர்க்க பார்க்கிறார்கள். ஆனால் இருவருக்குள்ளும் பழைய காதல் எட்டி, எட்டி பார்த்துக் கொண்டிருப்பதால் இருவராலும் ஒரு வேலையையும் உருப்படியாக செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மனக் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இதன் பின்பு என்ன நடந்தது..? இருவரும் காதலை புதுப்பித்துக் கொண்டார்களா?.. திருமணம் செய்து கொண்டார்களா?.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தின் ஹீரோவான அஜய் தீஷன், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் சொந்த அக்கா மகன். தன்னுடைய மருமகனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காகவே இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

இப்போதைய நிலையில் ஒரு புதிய நடிகர் அறிமுகமானால் அவர் காதல் படங்களில் மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத ஒரு விதி.. அதுபோல தன்னுடைய மருமகனுக்காக இந்தக் கதையை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

படம் முழுக்க, முழுக்க ஹீரோவையே சுற்றி சுற்றி வருவதால் அவருக்குத்தான் அதிகமான காட்சிகள் இருக்கின்றன. ஹீரோயின் தனுஷாவுடன் காதல் பேச்சுக்கள், சமாளிப்புகள் இதையெல்லாம் கரெக்டாக செய்தவர் அவருடைய முன் கோபத்தையும் தெளிவாக காட்டி இருக்கிறார்.

இருவரும் நடுரோட்டில் சண்டையிட்டு ஒருவர் மாற்றி ஒருவர் அறைந்து கொண்டு அது வீடியோ எடுக்கப்பட்டு அந்த வீடியோ அகில உலகமெங்கும் வைரலாகிவிட, போகின்ற இடங்களில் எல்லாம் இவர்களை பார்த்து பார்த்து மக்கள் சிரிக்க இந்தக் காட்சிகளையெல்லாம் ரசனையாக படமாக்கியிருக்கிறார்கள்.

இந்த சிச்சுவேஷன் கதைகளை பாடல் கட்சியின் மாண்டேஜ் சாட்சிகளாகவும், அவர்களின் ஈகோத்தனத்தை அதிகப்படுத்தும்விதமாகவும் மிக அழகாக இந்த போர்ஷனை மட்டும் எழுதி இருக்கிறார்கள். படமாக்கியும் இருக்கிறார்கள்.

ஹீரோ அஜய்  துள்ளலான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதே ஸ்டைலில் நடனத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். சிலரை பார்க்கும்போது உடனே பிடித்துவிடாது. போகப் போகத்தான் பிடிக்கும் என்பர்களே அதுபோல இந்த அஜய்யையும் இன்னும் அடுத்தடுத்த படங்களில் ரசிகர்கள் கவனித்தில் கொள்வார்கள் என்று நினைக்கிறோம்.

இப்பொழுதே சிறப்பான நடிப்பு ட்ரையினிங்கில் வசனங்களை இயல்பாக பேசி நடித்திருக்கிறார். ஹீரோயின் உடனடியாக சண்டைகளிலும் ஜிம்முக்கு வந்து அவர் செய்கின்ற காமெடிகளும், காதலிகளுடன் ஆடுகின்ற ஆட்டமும், மேட்ரிமோனியில் பெண் பார்க்கும்போதும் நம்மை பெரிதாக ரசிக்க வைத்திருக்கிறது இவரது  நடிப்பு.

ஹீரோயினாக நடித்திருக்கும் தனுஷா உண்மையில் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறார். அவருடைய தோற்றமும், அழகான முகமும், இயல்பான நடிப்பும் நம்மைப் பெரிதும் கவர்கிறது. அதிலும் அவர் ஹீரோவுடன் சண்டையிட்டு கோபப்படுகின்ற காட்சிகளில் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

பிரேக் அப் என்று சொல்லிவிட்டு போகின்ற இடத்திலும் வீடியோவை பார்த்து மக்கள் தன்னை கேலியாக பார்க்கும்போது ஐயோ பாவம் என்று சொல்ல வைத்திருக்கிறார். கெட்ட சாமியாரான சுனிலிடம் கேள்வி எழுப்புகின்ற காட்சியிலும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

பெங்களூர் பெண்ணாக வரும் சாயாராவும் தன் அழகினாலும். நடிப்பினாலும் நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  

தன்னுடைய அப்பாவை அவமானப்படுத்தும் காட்சியில் பொங்கி தீர்க்கும் அஜயை சமாதானப்படுத்தி என்ன பிரச்சனை என்பதை பாண்டியராஜன் சொல்கின்றபொழுது பரவாயில்லையேஇவர்தான் ஒரு சிறந்த அப்பா என்று பாராட்டைப் பெறுகிறார் பாண்டியராஜன்.

அதேபோல் ஹீரோயினின் அப்பா அம்மாவாக வரும் ஸ்ரீராமும், ராதாவும் மகளை விட்டுக் கொடுக்காமல் அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து மகளின் பிரச்சினையை தீர்க்க அவர்களும் சேர்ந்து போராடுவதும் காட்சியிலும் நடிப்பும் இயக்கமும் சிறப்புதான்.

கடைசியாக அங்க சுத்தி இங்க சுத்தி என்று இவர்களின் காதலுக்கு தடை போடுவது ஜாதி என்பதாக கொண்டு வந்து நிறுத்துவதுதான் நமக்கு அளித்த பெரும் ஏமாற்றம்.

இந்தப் படத்தில் முதலில் இருந்து கடைசிவரையில் அவப்பொழுது நடிகர் சிம்பு நடித்த பல திரைப்படங்களின் காட்சிகளை இடையிடையே காட்டுவது எதற்கு என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை காதல் தோல்வியாளர்களுக்கு எல்லாம் சிம்புதான் முன்னுதாரணம் என்று இயக்குநர் நினைத்து விட்டார்கள்போலும்!

படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் புதிய பரிதி, இந்தக் காதல் பிரிவதற்கு காரணமாக பெண்ணியம், பெண் சுதந்திரம், பெண்ணுரிமை என்று அத்தனை இஸங்களையும் சேர்த்துவிட்டு ஹீரோ ஹீரோயின் சண்டையையும் வளர்த்துக் கொண்டே போகபடத்தை எப்பயா முடிப்பீங்க என்று நம்மை கேட்க வைத்திருக்கிறார்.

பொதுவாக காதலர்களுக்கு இடையிலான பிரச்சனையில் இருவருமே தனியே அமர்ந்து மனம் விட்டு பேசினாலே அந்தப் பிரச்சனை முடிந்து விடும். ஆனால், இரண்டரை மணி நேர திரைப்படத்தில் இரண்டு மணி பத்தாவது நிமிடத்தில்தான் அந்த பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருப்பதால் கதாசிரியர் படத்தை கடைசிவரையும் இழுத்துக் கொண்டே போயிருக்கிறார். ஆனால் நமக்குப் போக போக அது போரடிக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று அனைத்துமே சிறப்புதான். மிக எளிய தமிழ் வார்த்தைகளில் காதுகளில் உடனடியாக நுழைவதைபோல பாடல்களை எழுதி இருக்கிறார்கள். ஆனால், அதை ஒருமுறை மட்டுமே கேட்க தோன்றியது.

எல்லாம் முடிந்த பின்பு கடைசியாக ஸ்கிரீனில் அசத்தலான பாடல் ஒன்று வருகிறது.  இப்படித்தான் நிறைய இயக்குநர்கள் கடைசி நேரத்தில் நல்ல பாடலை கொடுத்து அவர்களும் ஏமாந்து போவார்கள். நம்மையும் ஏமாற்றுவார்கள். அப்படித்தான் இந்தப் பாடலும் அமைந்திருக்கிறது.

படத் தொகுப்பில் விஜய் ஆண்டனி, தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பினை செய்திருக்கிறார். ஆனாலும் பத்து நிமிடத்தில் முடிய வேண்டிய ஒரு திரைக்கதையை இரண்டு மணி நேரம் இழுத்து விட்டதால்பாவம் எடிட்டர்அவர் என்ன செய்வார்? விட்டு விடுவோம்.

காதலர் தினத்தை முன்னிட்டு இன்றுதான் அந்தப் படம் வெளியாக வேண்டும் என்ற ஒரு வேண்டுதலோடு இந்தப் படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

நிச்சயமாக காதலர்களாக இருப்பவர்கள் இந்தப் படத்தை பார்த்தால், அவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில் வரும் சறுக்கல் நீங்கிவிடும். ஆனால் அவர்கள் வந்து பார்க்க வேண்டுமே என்பதுதான் நம்முடைய பேராசை. நிச்சயமாக இந்தப் படத்தை காதலர்கள் பெரிதும் ரசிக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

RATING : 3 / 5

Our Score