காமெடிப் பேய் படங்களை எடுக்கும் வகைமையை தமிழில் தொடங்கி வைத்தவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்தான்.
அந்த வகைமை திரைப்படங்கள் த்ரில்லும், காமெடியும் சேர்ந்த சரிவிகித கலைவையாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறத் துவங்கின.
இதைக் கண்டு கொண்ட சந்தானம், ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் வழியில் அப்பாதையை சிறப்பாக பின் தொடர்ந்தார்.
காமெடியும், காமெடிக்கான தெறிக்கும் ஒன்லைனர்களும் சந்தானத்திற்கு கை வந்தக் கலை என்பதால், அவரின் த்ரில் + காமெடி கலந்த பேய் படங்கள் முயற்சிக்கும் ரசிகர்கள் சிகப்பு கம்பள வரவேற்பை கொடுத்தனர் என்றால் மிகையாகாது.
மொத்தத்தில் சந்தானம் தன்னை ஒரு நாயக பிம்பமாக நிறுவிக் கொள்ள இந்த வகைமை திரைப்படம்தான் அவருக்கு கை கொடுத்தது.
இப்பொழுது சந்தானம் போன்ற நாயகனாக முயற்சித்து வரும் காமெடி நடிகர் சதீஷ், “கான்ஜுரிங் கண்ணப்பன்” திரைப்படத்தின் மூலம் காமெடி + த்ரில் கலந்த பேய்ப் படம் என்கின்ற வகைமையை கையில் எடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு கதாப்பாத்திர அறிமுகத்துடன் படம் தொடங்கியவிதமே படத்தின் மீது நல்ல அபிமானத்தையும் ஈர்ப்பையும் கொடுத்தது.
சின்ன சின்ன அறிமுக காட்சிகளைக் கொடுத்துவிட்டு உடனே மையக் கதையையும் தொடங்கி அசத்தி, நம்மை அட என சொல்ல வைத்து ஆச்சரியப்படுத்தினார்கள்.
ஆனால், போகப் போகத்தான், ‘அடப் போங்கப்பா’ என்ற லெவலுக்கு நம்மை கடுப்பேற்றிவிட்டார்கள்.
படத்தின் கதை என்ன, திரைக்கதை என்ன..? அதன் பலவீனங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நாயகன் சதீஷ் ஒரு மிகச் சிறந்த கேம் டெவலப்பராக வர வேண்டும் என்கின்ற முயற்சியில் இருப்பவர்.
அவர் தனது வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு மர்மப் பொருள் ஒன்றை கண்டெடுக்கிறார்.
அது ஒரு சபிக்கப்பட்ட “DREAM CATCHER”. அதாவது துர்கனவுகளை கொடுக்கக் கூடிய சாதனம் என்பது அவருக்குத் தெரியாது.
விளையாட்டாக அந்த சாதனத்தில் இருக்கும் றெக்கை ஒன்றை பிடுங்கி விடுகிறார்.
அன்று இரவு தூக்கத்தில் அவர் ஒரு அரண்மனைக்குள் மாட்டிக் கொள்ள, ஒரு பேய் அவரை கொலை வெறியோடு துரத்த, ரத்த காயங்களுடன் அதனிடம் இருந்து தப்பிக்கிறார்.
கண் முழித்துப் பார்த்த சதீஷுக்கு அதிர்ச்சி. கனவில் ஏற்பட்ட இரத்த காயங்கள் அச்சு அசலாக உடலிலும் இருக்கிறது.
மிரண்டு போன அவர் தன் குடும்ப டாக்டர் ரெட்டின் கிங்க்ஸ்லியிடம் போய் நடந்ததைக் கூற, அதை நம்ப மறுக்கும் டாக்டர் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆனந்தராஜ் கதாபாத்திரங்களும் விளையாட்டாக அந்த சாதனத்தின் மற்ற இறகை பிய்த்துவிட அன்று இரவு அவர்கள் அனைவருமே பேயிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.
இப்படி சதீஷின் ஒட்டு மொத்த குடும்பமும், இன்னும் சில மனிதர்களும் பேயிடம் மாட்டிக் கொண்டு கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.
அவர்கள் தப்பினார்களா..? இல்லையா…? தப்பினார்கள் என்றால், எப்படி தப்பினார்கள் என்பதை விவரிக்கிறது இதன் திரைக்கதை.
கதையாகப் பார்க்கும்போது மிக சுவாரஸ்யமான ஒன் லைன்தான். ஆனால், அதை கதையாகவும் காட்சியாகவும் காமெ,டியாகவும் மாற்றிய விதத்தில்தான் படக் குழுவினர் தோல்வியைத் தழுவி இருக்கின்றனர்.
பேய்ப் படங்களுக்கு ப்ளஸ் பாய்ண்டே, எப்பொழுது பேய் வரும் என்று தெரியாத திகிலும், அது வந்த பிறகு அதனிடமிருந்து தப்ப கதாபாத்திரங்கள் என்ன செய்வார்கள் என்கின்ற சுவாரஸ்யமும்தான்.
ஆனால், இப்படத்தில் பேய் எப்பொழுது வரும் என்பதை, இந்தக் காட்சியில் பேயிடம் இருந்து தப்பிக்க அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் வெகு எளிதாக பார்வையாளர்களால் யூகிக்க முடிகிறது. அதுவே படத்திற்கு பெரிய மைனஸ்.
சரி… காமெடியாவது திரைப்படத்தை காப்பாற்றுகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பல இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை.
கொஞ்சமேனும் காமெடியில் நமக்கு ஆறுதல் அளிப்பவர்கள் என்றால் அது ரெடின் கிங்க்ஸ்லி, ஆனந்தராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இவர்கள் மட்டும்தான்.
நாயகன் சதீஷ் அடிக்கும் காமெடிகள் எல்லாம் பழைய ரகம். சிரிப்பே வருவதில்லை. ஆனாலும்கூட கடுப்பேத்தாத காமெடிகள் ஆங்காங்கே நிறைந்திருப்பது ஒரு சின்ன ஆறுதல்.
ஆனந்தராஜ் மற்றும் ரெடின் கிங்க்லி இருவரும் பேய் வீட்டிற்குள் வரும் முறை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
ஒட்டு மொத்த கதாபாத்திரங்களும் பேய்களிடம் இருந்து தப்பிக்க பயன்படுத்தும் யுத்திகளில் புதுமையோ, புத்துசாலித்தனமோ, சுவாரஸ்யமோ அல்லது முட்டாள்தனமோ எதுவுமே இல்லாமல் சராசரி காட்சிகளாக இருப்பதால், ஒரு கட்டத்தில் நமக்கு இது காமெடிப் படமா..? இல்லை சீரியஸ் பேய்ப் படமா..? என்கின்ற குழப்பமே வந்துவிடுகிறது.
நாயகன் சதிஷ் காமெடிக் காட்சிகளைவிட சீரியஸ் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
கதையோடும், கதையின் காட்சிகளோடும் காமெடி செய்யாமல் இன்னும் வசன காமெடிகளிலேயே சவாரி செய்ய நினைப்பது கை கொடுக்கவில்லை.
சரண்யா பொன்வண்ணன் வழக்கமான அம்மாவாக வந்தாலும், அவரின் இயல்பான நடிப்பு காமெடிக்கும் ஆங்காங்கே கை கொடுக்கிறது.
மருத்துவராக வரும் ரெடின் கிங்க்ஸ்லி ஒட்டு மொத்தப் படத்தின் ஒற்றை ஆறுதல். கட்டப் பஞ்சாயத்து செய்யும் கதாபாத்திரத்தில் வரும் ஆனந்த்ராஜ் ஆங்காங்கே அவரின் பிரத்யேகமான நடிப்பால் நம்மை கலகலப்பாக்குகிறார்.
விடிவி கணேஷ், நமோ நாராயணன் இவர்களின் காமெடிகள் எடுபடவில்லை.
எக்ஸார்ஸிஸ்ட் ஏழுமலையாக வரும் நாசர், ப்ளாக் என்ற கதாபாத்திரத்தில் பேயோட்டும், சூன்யங்களை அகற்றும் பெண்ணாக வரும் ரெஜினா கசாண்ட்ரா இருவரும் சற்று திகிலூட்ட பயன்பட்டு இருக்கிறார்கள்.
நடிப்பாக பார்த்தோமானால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சூன்யம் தொடர்பான காட்சிகளும், அதன் பின்னணியும், அதன் விதிமுறைகளும் தெளிவாக பார்வையாளர்களுக்கு விளக்கப்படவில்லை.
அதற்கு இயக்குநர் முயன்றது போலக்கூடத் தெரியவில்லை.
அது போல கனவுலகின் விளையாட்டு தொடர்பான சந்தேகங்களும், பார்வையாளர்களுக்கு தீரும்படி விளக்கவுரை காட்சிகளும் இல்லாமல் இருப்பதும் ஒரு குறை.
அந்த ப்ளாஷ்பேக் காட்சியை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அது திகிலூட்டவோ, கலகலப்பூட்டவோ எதற்கும் பயன்படாமல் மையக் கதையோடு எந்த பிணைப்பும் இல்லாமல் துண்டாக நிற்பது போன்ற உணர்வையே கொடுக்கிறது.
மாய உலகம், பேண்டஸி என்கின்ற ஜானரில் கதையை கொண்டு செல்ல முயன்றாலும்கூட, ரெஜினாவைக் கொண்டு ‘அந்தக் குழந்தையே நீங்கதான் சார்’ என்று சொல்வதெல்லாம் சிரிப்பைவிட எரிச்சலையே அதிகப்படுத்துகின்றது.
ராபர்ட் ஆவி யார் உடம்பில் இருக்கிறது என்கின்ற குழப்பம், தூங்காமல் இருக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் தள்ளப்படுவது போன்ற சுவாரஸ்யமான ஐடியாக்கள், எக்ஸிகியூஷனில் அந்த சுவாரஸ்யத்தை இழந்து தள்ளாடுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
அது போல் கதையை நகர்த்தாத காட்சிகள், குறிப்பாக மந்திரவாதிகளிடம் யோசனை கேட்பது போன்ற காட்சிகளும், தேவையில்லாத கதாபாத்திரங்களும் வந்து கொண்டே இருப்பது போன்ற பிரமை தோன்றுகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்குப் பெரிய அளவில் உதவி இருக்கிறது. பாடல்கள் நன்றாக இருந்தாலும் நினைவில் நிற்பது போல் இல்லை.
எஸ்.யுவாவின் ஒளிப்பதிவில் ஒளியும், இருளும் சேர்ந்து மாய உலகத்தை அற்புதமாக புனைந்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
பிரதீப் இ.ராகவ்வின் கத்தரி இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக பல இடங்களை கத்தரித்திருக்கலாம்.
கலை இயக்குநரின் கலைநயம் செட்டுகளிலும் அரண்மனையிலும் அற்புதமாக தெரிகிறது. மோகன மந்திரனின் உழைப்புக்கு ஒரு பூங்கொத்து. கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும்கூட கெஞ்சம் மேம்பட்டதாக இருந்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் அட்டகாசமான ஒரு ஒன் லைனைப் பிடித்து இருக்கிறார். ஆனால் அதை திகிலூட்டக் கூடிய அல்லது கலகலப்பூட்டக் கூடிய ஒரு திரைக்கதையாக மாற்றுவதில் சற்று சறுக்கி இருக்கிறார்.
அது போல் பல இடங்களில் திரைக்கதை யூகிக்கக் கூடிய பலவீனத்தில் இருப்பதும் பெரும் குறை.
தொய்வான திரைக்கதை, தேவைப்படாத கதாபாத்திரங்கள் இவைகளும் இது போன்ற பேய்க் கதைகளுக்கு மைனஸ்.
மொத்தத்தில் இந்த “கான்ஜூரிங் கண்ணப்பன்” எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றி இருக்கிறது.
கான்ஜூரிங் கண்ணப்பன் – திகிலூட்டவும் இல்லை; கலகலப்பூட்டவும் இல்லை.
RATING : 3 / 5