full screen background image

நடிகர் துல்கர் சல்மானுக்கு ஒரு கண்டனக் கடிதம்..!

நடிகர் துல்கர் சல்மானுக்கு ஒரு கண்டனக் கடிதம்..!

மிஸ்டர் துல்கர் சல்மான்,

நடிகர் சுரேஷ் கோபி, நடிகை ஷோபனா, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நீங்கள் நடித்து அனூப் சத்யன் இயக்கிய ‘வரனே ஆவஷ்யமுண்ட்’ படத்தை இன்றைக்கு இணையத்தில் பார்த்தேன்.

குடும்பக் கதை. தமிழ்நாட்டில்.. சென்னையிலேயே படமாக்கியிருக்கிறார்கள். பாதி வசனங்கள் தமிழில் இருந்தன. எளிமையான கதை. சிறப்பான இயக்கம். பிடித்திருந்தது ஒன்றே ஒன்றைத் தவிர…!

எப்போதுமே மலையாளப் படங்களில் மலையாள நடிகர்களிடம் அடிபடுவது போலவும், அவர்களுடைய ஆக்ரோஷ மேதமையைக் காட்டுவதற்கும் தமிழ் மொழியையும், தமிழர்களையும் பயன்படுத்திக் கொள்வதுண்டு.

இதுவரையிலான மலையாள திரைப்பட வரலாற்றில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தியும், கிண்டல் செய்தும் பல காட்சிகளை மலையாள இயக்குநர்கள் வைத்திருக்கிறார்கள். மலையாள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதில் உங்களது தந்தையான ‘மம்மூக்கா’ என்னும் மம்மூட்டியும் விதிவிலக்கல்ல.

நிற்க. இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி ஒரு ராணுவ மேஜர். நல்ல கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். ஆனால் அவர் வளர்க்கும் நாயின் பெயர் ‘பிரபாகரன்’. இந்த ‘பிரபாகரன்’ என்ற பெயரை அந்த நாய்க்கு நீங்கள் ஏன் வைத்தீர்கள் என்பதை இன்றைக்கு நீங்கள் பேஸ்புக்கில் போட்ட செய்தியே எங்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.

உலகத்திலேயே முதன்முறையாக தமிழர்களுக்காக ஒரு தனி ராணுவத்தை ஏற்படுத்தி தமிழர்களின் தனித் தாயகத்தை தனித்தே உருவாக்கிட தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து போராடிய போராளியான எங்களது தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு இதனை செய்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இந்திய அமைதிப்படை ஈழத்திற்குச் சென்று தளபதி பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படையிடம் மரண அடி வாங்கி திரும்பியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனை மனதில் கொண்டு ஒரு இந்திய ராணுவ மேஜர் வளர்த்தெடுக்கும் நாய்க்கு ‘பிரபாகரன்’ என்று பெயர் வைத்திருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

இந்த இடத்தில் அந்த நாய்க்கு ஒரு ‘மாதவன் நாயர்’ என்றோ ‘ராமச்சந்திர மேனன்’ என்றோ.. ‘பிஜூ வர்கீஸ்’ என்றோ.. ‘பீஜூ மேனன்’ என்றோ.. ‘ஜூனியர் சல்மான்’ என்றோ உங்களுக்கு வைக்கத் தோன்றவில்லையே.. ஏனுங்கோ தம்பி..?

உங்களது மலையாளப் படத்தில் நாய்க்கு பெயர் வைக்க தமிழ்ப் பெயர்தான் கிடைத்ததா..? இத்தனைக்கும் ‘பிரபாகரன்’ என்ற பெயரை கேரளாவில் இருக்கும் தமிழர்களே அதிகம் பேர் தங்களது குழந்தைகளுக்கு வைத்திருக்கவே மாட்டார்கள். உங்களுக்கு இதைவிட்டால் வேறு எந்த வகையிலும் இந்தப் பெயர் பரிச்சயமே ஆகியிருக்காது…!

உங்களது கேரளத்திற்கு விடியலே தமிழகத்தினால்தான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா தம்பி..? குமுளி வழியாக உங்களது கேரளத்திற்குள் சென்று வரும் காய்கறி லாரிகளை ஒரு நாள் நிறுத்தினாலே உங்களது இடுக்கி மாவட்டம் தெருவுக்கு வந்துவிடும் தம்பி.. 2 நாட்கள் நிறுத்தினால் எர்ணாகுளமும், கொச்சியும் சிக்கலாகிவிடும்.. இந்தப் பக்கம் திருவனந்தபுரம் செல்லும் அனைத்து சரக்கு லாரிகளையும் நிறுத்தினால் உங்களுடைய ஆட்சியாளர்களே தெருவுக்கு வந்துவிடுவார்கள் தம்பீ…. அந்த அளவுக்கு உங்களுக்கு உண்ண உணவு கொடுத்து தமிழர்களாகிய நாங்கள்தான் காப்பாற்றி வருகிறோம். இதைப் பற்றி உங்களது தந்தையே ஒரு முறை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதாவது உங்களுக்குத் தெரியுமா தம்பி..?

‘எத்தனை அடித்தாலும் தாங்கிக் கொள்வார்கள்’ என்கிற அலட்சியத்தில் திரும்பத் திரும்ப உங்களுடைய திரைப்படங்களில் எங்களுடயை தமிழையும், தமிழர்களையும் கேவலப்படுத்திக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆனாலும் தமிழ்ப் படங்களில் நடிக்கவும் செய்கிறீர்கள்.

ஏன்… நீங்கள் பிறந்து, படித்து வளர்ந்ததே இதே சிங்காரச் சென்னையில்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்..!

இந்த சென்னைதான் உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் உணவளித்து, உறைவிடம் கொடுத்து, வளர்த்தெடுத்து இன்றைக்கு கேரளாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் ஒன்றாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

நீங்கள் பெயர் வைத்தீர்களே ‘பிரபாகரன்’ என்று… அந்த நாயிடம் இருக்கும் மிகப் பெரிய நல்ல குணமே ‘நன்றி’ என்னும் உணர்வுதான் தம்பி.. ஆனால் அந்த வாயில்லா ஜீவனிடம் இருக்கும் அந்த ‘நன்றியுணர்வு’கூட இல்லாமல் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள் என்பதுதான் கொடுமையான விஷயம்..!

அந்த ‘பிரபாகரனை’ பார்த்தாவது ‘நன்றி’ என்பதைக் கற்றுக் கொண்டு இனிமேலாவது சோறிட்டவர்களுக்கு நன்றியோடு இருக்கப் பழகுங்கள்..!

Our Score