கடந்த 2 நாட்களாக தமிழ்த் திரையுலகத்தில் புயல் அடித்தாற்போல ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது. அதுதான் நடிகர் சூர்யா, தனது சொந்தப் படமான ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படத்தை… தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பாகவே OTT தளமான அமேஸான் பிரைம் தளத்தில் வெளியிட அனுமதித்திருப்பதுதான்.
இதையறிந்து கோபமடைந்த தியேட்டர் அதிபர்கள் சங்கம் “சூர்யா தன் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் மற்றும் அவரைச் சார்ந்தோர் வெளியிடும் படங்களை இனிமேல் நாங்கள் வெளியிட மாட்டோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்கள்.
அதோடு, “இனிமேல் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகு OTT தளத்தில் வெளியாகும் திரைப்படங்களை மட்டுமே நாங்கள் எங்களது திரையரங்குகளில் திரையிடுவோம் என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள்…” தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்.
இந்த நேரத்தில் இது தொடர்பாக நேற்றும், இன்றும் அவசரமாக வீடியோ கால் மூலமாக பல தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் கலந்துரையாடியிருக்கிறார்கள்.
இந்தக் கருத்துப் பரிமாற்றத்தின் முடிவில் தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்றைக்கு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கை இங்கே :
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை
அனைவருக்கும் வணக்கம்..!
திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.
அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும், அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை.
அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.
இன்றைய சூழ்நிலையில் தற்போது இணையத் தொழில் நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக இணையம் மூலமாக வெளியாகும் முறை உலகெங்கும் உள்ளது.
இந்த முறையில், பிரபல OTT நிறுவனங்கள் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.
ஹிந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட இந்த OTT நிறுவனங்கள் மூலமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
இவ்வாறு படங்களை OTT வாயிலாக நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும்.
இவ்வாறு பல நன்மைகள் விளையக் கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். மேலும், தற்போதைய சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை இந்த OTT நிறுவனங்கள் வாங்க வைக்கவும் வேண்டும்.
மேலும் ஒரு திரைப்படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்த் திரைப்பட துறை வளமாக இயங்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும்.
தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் வகையிலான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கூடி.. கலந்தாலோசித்து, விவாதித்து, OTT-யில் திரைப்படங்களை விற்பனை செய்வதற்கான வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.
இவண்,
ஒற்றுமையை எதிர்நோக்கி,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
இயக்குநர் பாரதிராஜா, K.முரளிதரன், T.சிவா, K.S.ஸ்ரீனிவாசன், K.ராஜன், K.E.ஞானவேல் ராஜா, H.முரளி, K.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், S.S.துரைராஜ், FEFSI சிவா, YNOT S.சஷிகாந்த், G. தனஞ்செயன், S.R.பிரபு, ராஜசேகர் பாண்டியன், J.S.K.சதீஷ்குமார், C.V.குமார், சுதன் சுந்தரம் (PASSION STUDIOS), சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா, S. நந்தகோபால், Auraa Cinemaas மகேஷ், R.K.சுரேஷ், வினோத் குமார், P.S. ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், P.ரங்கநாதன், M.S.முருகராஜ், Dr.பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் மேலும் பல தயாரிப்பாளர்கள்.