சூர்யா குடும்பத்தினரின் படங்களுக்கு தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் ‘தடா’ உத்தரவு

சூர்யா குடும்பத்தினரின் படங்களுக்கு தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் ‘தடா’ உத்தரவு

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, ஜோதிகா மற்றும் இவர்களது சொந்தத் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் படங்களை தியேட்டர்களில் திரையிடக் கூடாது  என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த அவசர முடிவுக்கு வரக் காரணம் நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம்தான்.

கொரோனா பீதியில் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திரையரங்குகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது யாருக்குமே தெரியாத நிலையில் திரையுலகம் தவித்துக் கொண்டிருக்கிறது.

நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நடிகை ஜோதிகாவை முதன்மை பாத்திரத்தில் நடிக்க வைத்து ‘பொன்மகள் வந்தாள்’ என்றொரு படத்தைத் தயாரித்துள்ளது.

pon magal vanthaal-movie-poster-3

இத்திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், நடிகர் தியாகராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராம்ஜி, இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – அமரன், பாடல்கள் – விவேக், உமாதேவி, கார்த்திக் நேத்தா, வசனம் – லட்சுமி சரவணக்குமார், ஜே.ஜே.பேட்ரிக், கூடுதல் வசனம் – முருகேசன், பொன்.பார்த்திபன், ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, நடன இயக்கம் – பிருந்தா, சண்டை இயக்கம் – ராக் பிரபு, ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமா, இறுதி ஒலிக் கலவை – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், தயாரிப்பு மேலாண்மை – பி.செந்தில்குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ், நிழற்படம் – சரவணன், விளம்பர வடிவமைப்பு – அமல் ஜோஸ், இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பு – சூர்யா, எழுத்து, இயக்கம் – ஜே.ஜே.பேட்ரிக்.

இத்திரைப்படம் முழுவதும் தயாராகிவிட்டது. தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி கடந்த மார்ச் 26-ம் தேதி திரைக்கு வரத் தயாராக இருந்தது.

pon magal vanthaal-movie-poster-4

இடையில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமலாக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டதினால் இத்திரைப்படமும் முடங்கியுள்ளது.

ஆனாலும் இத்திரைப்படத்தை OTT எனப்படும் இணையத்தள திரைப்பட தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படத்தின் தயாரிப்பாளரான சூர்யா முடிவெடுத்திருக்கிறாராம்.

இதன்படி அமேசான் பிரைம் எனப்படும் OTT தளத்திற்கு இத்திரைப்படம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நேற்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

4.50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது அமேஸான் பிரைம் நிறுவனத்திற்கு 8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரு மடங்கான தொகையாகும். இதன் மூலமாக தயாரிப்பாளருக்கு 4 கோடி ரூபாய் அளவுக்கு இப்போதே லாபம் கிடைத்துள்ளது.

இத்தகவல் கிடைத்தவுடன் தமிழ்த் திரையுலகம் பரபரப்பானது.. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உடனடியாக செல்போன் செயலியின் மூலமாக தங்களுக்குள் இது பற்றி கலந்துரையாடினார்கள்.

pon magal vanthaal-movie-poster-5

இதன் பின்பு இந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரோகிணி பன்னீர்செல்வம் இது குறித்து அளித்த வீடியோ பேட்டியில் “பொன் மகள் வந்தாள்’ படத்தின் தயாரிப்பாளரான சூர்யா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் திரைப்படங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்…” என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து ரோகிணி பன்னீர்செல்வம் கூறுகையில், “இன்று ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platform-ல் வெளிவரப் போவதாக செய்தி வந்தது.

தற்போது மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

நாங்கள் அந்தப் படத்தின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை.

ஆதலால், இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platform-ல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது…” என்று தெரிவித்தார்.

திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு திரைப்படம் 2 மடங்கு லாபத்தைக் கொடுக்கிறது என்றால் நாளைக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் இதையே பின்பற்றினால் தியேட்டர்களின் கதி என்னாவது என்று தியேட்டர் அதிபர்கள் பயப்படுகிறார்கள்.

கொரோனா பீதியிலும் தமிழ்த் திரையுலகத்தில் இனி அடுத்தடுத்து சில சண்டை, சச்சரவுகள் இதையொட்டி நடக்கத்தான் போகிறது.

Our Score