பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன், இந்த ‘க்ளாப்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆதி நாயகனாகவும், அகன்ஷா சிங் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், கிருஷ்ணா குரூப், நாசர், பிரகாஷ் ராஜ், முனீஸ்காந்த், ‘மைம்’ கோபி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இசையில், பிரவீன் குமாரின் ஒளிப்பதிவில், ராகுலின் படத் தொகுப்பில், வைர பாலனின் கலை இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநரான பிருத்வி ஆதித்யா இயக்குகிறார்.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த ‘க்ளாப்’ திரைப்படம் தயாராகி வருகிறது.
தற்போது ‘கிளாப்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான I.B.கார்த்திகேயன் பேசும்போது, “இளமை துள்ளல் மிகுந்த, திறன்மிக்க இளம் கலைஞர்களுடன் பணிபுரிந்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் ஆதியுடன் இணைந்து வேலை செய்தது, மிகச் சிறந்த அனுபவத்தை தந்தது.
கொரோனாவினால் ஏற்பட்ட பொது முடக்கக் காலம் முடிந்த நிலையில், படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தபோது, முதல் ஆளாக படப்பிடிப்பை துவக்க, ஆதிதான் பெரும் ஆர்வம் காட்டினார். தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக இருப்பதையும் தாண்டி, இந்தப் படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் மிக வலுவான கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். இயக்குநர் பிரித்வி ஆதித்யா அசாத்திய திறமை கொண்ட இயக்குநர். மிகவும் பிரபலமான நடிகர்கள் குழுவையும், மிகப் பெரும் எண்ணிக்கையிலான குழுவையும் ஒருங்கே கையாள்வதென்பது எளிய பணியல்ல. ஆனால், இயக்குநர் பிரித்வி ஆதித்யா அனுபவமிக்க இயக்குநரைபோல் மிகத் திறமையாக படப்பிடிப்பை கையாண்டார்.
இசைஞானி இளையராஜா இசையை உங்களுக்கு வழங்க, படக் குழுவினரான நாங்களும் பெரும் ஆவலுடன் உள்ளோம். தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது…” என்றார்.