தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான U.K.செந்தில்குமார். 50-க்கும் மேற்பட்ட படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வாரம் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள ‘சகலகலாவல்லவன் என்ற அப்பாடக்கர்’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சர்வதேச அரசியல் ஆய்வாளரும், இங்லாந்தின் லேபர் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான லான்ஸ் ப்ரைஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அதன் தாக்கத்தை பற்றியும் ‘தி மோடி எஃபெக்ட்’ (The Modi Effect) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
பிரதமர் மோடியின் 3-D ஹோலோக்ராபிக் தொழில் நுட்பம் மூலம் நடத்திய பிரச்சாரத்தில் பங்காற்றியதிற்காக தன் பெயரும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் ஒளிப்பதிவாளர் U.K.செந்தில் குமார்.
3-D ஹோல்க்ராஃபிக் ஒளிப்பதிவு முறையை லண்டனில் பிரத்யேகமாக பயின்ற ஒரே ஆசிய ஒளிப்பதிவாளர் U.K.செந்தில்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணியை தான் திறம்பட செய்தது பற்றி ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் விரிவாக பேசியுள்ளார்.
“இந்த தொழில் நுட்பத்தை எப்படி வெகுஜன மக்களை சென்றடைய வைப்பது என்ற குழப்பம் எனக்கு இருக்கத்தான் செய்தது.
2012 குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது இந்தப் பிரசாரத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு என் சந்தேகத்தை நீக்கி எனக்கு மேலும் உத்வேகத்தை தந்தது.
இதை தொடர்ந்து 2014 பொதுத் தேர்தலின்போது 3-D ஹோலோக்ராபிக் முறையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
எல்லா 3D ஹோலோக்ராபிக் வீடியோக்களையும் நானே ஒளிப்பதிவு செய்தேன். ஓரே சமயத்தில் வெவ்வேறு இடத்திலிருக்கும் பல்லாயிரக்கணக்காண வாக்காளர்களை ஸ்ரீமோடியின் பிரச்சாரம் சென்றடைய இத்தொழில்நுட்பம் இன்றியமையாததாய் இருந்தது.
ஒரு நாளைக்கு 5 மணி நேரங்கள் இந்த விடியோ பதிவு நடைபெறும். மோடியின் பேச்சாற்றல் அவரது பேச்சாற்றல் ஹிந்தி மொழி தெரியாத என்னையே கவரும் வகையில் இருந்தது. மிகவும் எளிமையானவர் மோடி, என் நீண்ட முடியைக் கண்டு என்னை ‘ஹிப்பி’ என்று அழைக்க ஆரம்பித்தது எனக்கு பெரிய ஆச்சரியம். அதற்கு பிறகு பலரும் என்னை அவ்வாறே அழைப்பதும் எனக்கு பெருமையே.
ஒரு மாதம் முழுதும் இப்பணி தொடர்ந்தது. மோடியிடம் கற்றுக் கொள்ளக் கிடைத்தது ஏராளம்.. குறிப்பாக நேரம் தவறாமை மற்றும் ஞாபக சக்தி. எதை செய்தாலும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்கிற நம் பிரதமர் மோடி போன்ற ஒரு உன்னதமான தலைவருடன் பணி புரிந்தது என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
மோடி அவர்களின் தேர்தல் வெற்றி, இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அதை தொடர்ந்து நடந்த மாற்றங்கள் என பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க உண்மைகளை உள்ளடக்கியுள்ளதால் ‘ தி மோடி எஃபெக்ட்’ புத்தகம் சர்வதேச அரங்கில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இத்தகைய புத்தகம் கண்டிப்பாக பிரதமர் மோடி அவர்களின் நூலகத்தில் ஒரு நீங்காத இடம் பிடிக்கும். இப்புத்தகத்தில் எனது பெயரும் இடம் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று ‘ஹிப்பி’ ஒளிப்பதிவாளர் U.K.செந்தில்குமார்.











