புதிய, பெரிய பட்ஜெட் படங்கள் வரும் வாரங்களிலும், அடுத்த ஜனவரி வரையிலும் ரிலீஸாக இருப்பதால் திருட்டு விசிடி மீதான பயம் திரையுலகத்திற்குள் அதிமாகிவிட்டது.
இன்று பல திரையுலகப் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து, திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டுமென்று தமிழக காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையிடம் புதிய கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் விஜயகுமார், மேனேஜர் நடேசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், பெப்சி அமைப்பைச் சேர்ந்த கிரிசன், சுந்தர், இயக்குநர்கள் சண்முகசுந்தரம், ரமேஷ்கண்ணா, ரவிமரியா, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் நளினி ஆகியோர் குற்றப் புலனாய்வுத் துறையின் திருட்டு வீடியோ ஒழிப்பு பிரிவின் தலைமை அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி. அஸ்டோஷ் சுக்லாவை நேரில் சந்தித்து திருட்டு விசிடி விற்பனையை தடுத்து நிறுத்தும்படி இந்தக் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அப்போது திரைத்துறை பிரமுகர்களுடன் காவல் துறை உயரதிகாரிகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் துறையின் தரப்பில் இதுவரையில் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது பற்றி கூடுதல் டி.ஜி.பி. அஸ்டோஷ் சுக்லா விளக்கி கூறினார்.
அக்கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசும்போது, “மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த குண்டர் சட்டத்தை பயன்படுத்தி திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..” என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
மேலும், “தமிழ் திரையுலக அமைப்புகளின் நிர்வாகிகளும், காவல்துறை அதிகாரிகளும், மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை திருட்டு வி.சி.டி. சம்பந்தமாக நடைபெற்ற குற்றங்களையும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றியும் கலந்து ஆலோசிக்கும் வகையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்..” என்று ஒரு முக்கியமான கோரிக்கையை அஸ்டோஷ் சுக்லா மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி அவர்களிடமும் முன் வைத்துள்ளார் சரத்குமார்.
வாங்குறதை வாங்கிக்கிட்டு ச்சும்மா கணக்குக்காக கைதுகளையும் காட்டும் காவல்துறையை வெளிப்படையாக கண்டிக்க முடியாமல் இன்னும் எத்தனை தடவைதான் அவர்களது அலுவலகத்திற்கு காவடி எடுப்பார்கள்..?












