செல்போனை மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்கள் . ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் வந்தாச்சு. ஆனாலும் திரும்பத் திரும்ப செல்போன் பல திரைப்படங்களின் கதையின் முடிச்சாகவே இருக்கிறது. தவிர்க்க முடியாத திரைக்கதை முடிச்சு எது என்றால் அது செல்போன் என்னும் கைப்பேசிதான்.
இ்பபோது ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்கிற வித்தியாசமான தலைப்போடு வரவிருக்கும் படம்கூட செல்போனை மையமாகக் கொண்டதுதான்..! இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, சதீஷ், ஊர்வசி, மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக இப்படக் குழு பிரசாத் கலர் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. திரையிடப்பட்ட டிரெயிலரில் நகுல் ஒரு எலக்ட்ரிக்கல் என்ஜீனியரை போல வித்தியாசமாக எதையாவது கழட்டியும், மாட்டிக் கொண்டுமாக இருந்தார்.. வீடியோ கேமிராவை பொருத்தி ஹீரோயினை வேவு பார்க்கும் அளவுக்கு ‘நல்ல’ குணமுடையவராகவும் இருந்தார்.
மேடைப் பேச்சின்போது வழக்கம்போல அனைவருமே “இதுவொரு வித்தியாசமான படம்.. நீங்கள் எதிர்பார்க்காத காட்சிகள்.. விஷயங்கள் இதில் இருக்கின்றன..” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
நடிகர் சதீஷ் பேசும்போது “இந்தப் படத்தின் கதையை ‘எதிர்நீச்சல்’ படம் செய்யும்போதே இயக்குநர் வந்து என்கிட்ட சொன்னார். இந்தக் கேரக்டர்ல நான்தான் நடிப்பேன்னு அன்னிக்கே இயக்குநர்கிட்ட சொல்லி துண்டு போட்டு வைச்சிட்டேன்..” என்றவர் இயக்குநருக்கு போட்டியாக படக் குழுவினர் அனைவரையும் பாராட்டி தள்ளினார். பிந்து மாதவியை பற்றிச் சொல்லும்போது, “அவங்களை எல்லாரும் சிலுக்கு மாதிரியே இருக்காங்கன்னு சொல்வாங்க. அது உண்மைதான்.. அவங்க கண்ணை பார்க்கும்போது அப்படித்தான் தெரியுது..” என்றார். பிந்து மாதவி சிரிப்போடு இந்த பாராட்டை ஏற்றுக் கொண்டார்.
பிந்து மாதவி தான் பேசும்போது இந்தப் படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் தனக்கு மிகவும் உதவி செய்ததாகக் கூறி அனைவரின் பெயரையும் மனப்படமாக சொல்லி அவர்களை மேடையில் ஏற்றி நிற்க வைத்தது பாராட்டுக்குரியது..
படத்தின் இயக்குநரான ராம்பிரகாஷ் தன் பேச்சில் இதனைக் குறிப்பிட்டு, “உண்மையா நான்தான் இவங்களை மேடையேற்றியிருக்கணும். பிந்து மாதவி முந்திக்கிட்டார். இப்பத்தான் தெரியுது. என் உதவி இயக்குநர்களெல்லாம் எந்த டிபார்ட்மெண்ட்ல நல்லா வேலை செஞ்சிருக்காருங்கன்னு..?” என்று மறைமுகமாக வாரியும்விட்டார்..
படத்தின் கதையோ ஏதோ ஒரு நாளில் செல்போன்கள் அனைத்தும் செயல் இழந்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதுதானாம்..!
இப்படியொண்ணு நாட்டுல நடந்தா எல்லாருக்கும் சந்தோஷம்தான்..!