‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் கன்னத்தில் அறைவதை போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தாராம் நடிகை சுஹாசினி மணிரத்னம்.
ரஜினி குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடிக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. இன்னிவரைக்கும் என்னால மறக்க முடியாதது.
ஒரு காட்சில நான் ஓவியம் வரைஞ்சுக்கிட்டிருப்பேன். அந்த நேரத்துல ரஜினி அந்த ஓவியத்துக்குப் பின்னாடி இருந்து வருவார். நான் கோப்பட்டு அவரை கன்னத்துல அறையணும். இதுதான் காட்சி.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஸார் இந்தக் காட்சியை சொன்னதும் எனக்குப் பயம் வந்திருச்சு. நான் ‘முடியாது’ன்னுட்டேன். அவர் எவ்ளோ பெரிய நடிகர். ‘நான் அடிச்சிட்டேன்னா அவ்ளோதான்.. வெளில என்னை எல்லாரும் திட்டுவாங்க. வெளில தலைகாட்ட முடியாது. வேணாம் ஸாரு’ன்னு சொன்னேன். எஸ்.பி.எம். ‘அதெல்லாம் முடியாது. நீ அடிச்சுத்தான் ஆகணும்’ன்னாரு. ‘வேண்ணா தள்ளி விடுறேன்’ என்றேன். ‘ம்ஹூம்.. முடியாது. நான் சொன்னதைச் செய்யு’ன்னாரு எஸ்.பி.எம். ஸார்.
அந்தச் சமயம் ரஜினி ஸார் பக்கத்துல ‘வந்து என்ன.. என்ன நடக்குது இங்க..?’ என்றார். அப்போ, அவர்கிட்ட எஸ்.பி.எம். விஷயத்தைச் சொல்லிட்டாரு.. உடனே ரஜினி என்கிட்ட.. “எப்படி.. எப்படி என்னை அடிக்க மாட்டியா.. ‘தாய் வீடு’ படத்துல மட்டும் என்னைத் திட்டுத் திட்டுன்னு திட்டிட்டு த்தூன்னு என்னைப் பார்த்து துப்பின..?” என்றார்.
“அப்போ நான் பீல்டுக்கு புதுசு.. உங்களைப் பத்தி அதிகம் எனக்குத் தெரியாது. இப்போ நீங்க எவ்ளோ பெரிய ஸ்டார்.. உங்களைப் போய் நான் அடிக்க முடியுமா..? எனக்குப் பயமா இருக்கு..’ என்றேன். ‘ம்.. அதெல்லாம் முடியாது. நீ அடிக்கிற.. டைரக்டர் சொல்றதை செய்யி’ என்று என்னைச் சமாதானப்படுத்தி அந்தக் காட்சியை எடுத்தாங்க…” என்றார் சுஹாசினி மணிரத்னம்.