full screen background image

“வரிச் சலுகைகளை கொடுத்துவிட்டு ஊரடங்கை அமல்படுத்தலாமே..?” – தமிழக அரசுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி

“வரிச் சலுகைகளை கொடுத்துவிட்டு ஊரடங்கை அமல்படுத்தலாமே..?” – தமிழக அரசுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும்வகையில் இன்று முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் நேற்று பேசுகையில், “இந்த நேரத்தில் அரசு தியேட்டர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் இது குறித்துப் பேசுகையில், “மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை தவறு என்று சொல்லவில்லை. ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவினால் சினிமா தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும். சினிமா தியேட்டர்களில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடப்படவுள்ளன.

இதனால் தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களிலும், சினிமா தியேட்டர்களுக்கான தொழில் வரி, பொழுதுபோக்கு வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்த வரிகளை மத்திய, மாநில அரசுகள் முற்றிலுமாக நீக்க வேண்டும்.

பொது மக்களின் உயிரும் முக்கியந்தான். அதே நேரத்தில் தியேட்டர் அதிபர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு சினிமா தியேட்டர்களுக்கு வரிச் சலுகைகளை அறிவித்துவிட்டு பின்பு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம்…” என்று கூறினார்.

 
Our Score