கேரளாவில் கொரோனா இரண்டாம் அலையினால் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாளை முதல் சில தளர்வுகளுடன் மேலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனாலும் இந்தத் தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இது குறித்து ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களின் இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், “சினிமா படப்பிடிப்புகளுக்கு ஏன் அனுமதியில்லை..? பால் விற்பனையாளர்களும், உணவு விற்பனையாளர்களும் வேலை செய்யும்போது ஏன் திரைப்படத் தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடாது..? பின்பு நாங்கள் எப்படி சாப்பிடுவது..? நாங்கள் எப்படி பால் வாங்குவது..? நாங்கள் எப்படி எங்களது குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது..? நாங்கள் எப்படி எங்களது குழந்தைகளுக்கு பென்சில் வாங்கித் தருவது..? நாங்கள் எப்படி பணம் சம்பாதிப்பது..?
சினிணா படப்பிடிப்புகள் என்பது சினிமா தியேட்டர்கள் இயங்குவது போல அல்ல. நாங்கள் குளோஸப் ஷாட்டோ அல்லது வைட் ஷாட்டோ வைப்பதாக இருந்தால்கூட ஒருவருக்கொருவர் 2 மீட்டர் தள்ளிதான் இருக்க வேண்டி வரும். இதில் வைரஸ் பரவும் என்பதற்கு என்ன லாஜிக் இருக்கிறது..? ஒரு முறை யோசனை செய்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்..” என்று சொல்லியிருக்கிறார்.