full screen background image

“சினிமா நடிகர்களுக்கு சேவை வரி விலக்கு அளிக்க முடியாது..” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

“சினிமா நடிகர்களுக்கு சேவை வரி விலக்கு அளிக்க முடியாது..” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

கிராமிய கலைஞர்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிப்பதுபோல, திரைப்பட நடிகர்களுக்கும் வரி விலக்கு சலுகை வழங்கவேண்டும் என்று நடிகர் சித்தார்த் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பாய்ஸ், ஜிகர்தண்டா, காவியத்தலைவன் உட்பட பல திரைப்படங்களில் நடித்து இருப்பவர் சித்தார்த் என்ற சித்தார்த் சூரியநாராயணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், “மத்திய நிதிச் சட்டம் 1994–ன் படி கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் மாதம் 20–ந் தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், கிராமிய கலைஞர்கள், நாடக நடிகர்கள், இசை கலைஞர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு சேவை வரி விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இது போன்ற சலுகை திரைப்பட நடிகர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது.

மேலும் சினிமா நடிகர்களாகி நாங்கள், பல்வேறு முகபாவனைகளையும், வசனங்களையும் இயக்குநர் சொல்லிக் கொடுப்பதன் அடிப்படையில் செய்கிறோம். நடிப்பு தொழில் என்பது கிராமிய கலைஞர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் ஒரே விதமாகத்தான் உள்ளது. இதில் பெரும் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டு பேரின் தொழிலிலும் ஒன்றுதான்.

அப்படி இருக்கும்போது, கிராமிய கலைஞர்களுக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிப்பது நியாயமற்றது. இந்த சலுகைகளை திரைப்பட நடிகர்களுக்கும் வழங்க வேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து வந்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.  கிராமிய கலைஞர்களையும், திரைப்பட கலைஞர்களையும் ஒன்றாக பாவிக்க முடியாது. திரைப்பட நடிகர்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “யாருக்கு வரி விதிக்க வேண்டும், யாருக்கு வரி விலக்கு வழங்க வேண்டும் என்ற முடிவுகள் எடுப்பது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. கிராமிய கலைஞர்கள் லாப நோக்கம் இல்லாத சேவைகளை செய்து வருகின்றனர். அதனால், அந்த பாரம்பரிய கலையையும், கலைஞர்களையும் பாதுகாக்க மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

ஆனால், கிராமிய கலைஞர்களும், திரைப்பட கலைஞர்களையும் ஒரேவிதமாக கருத முடியாது.  திரைப்படம் என்பது பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகிறது. நடிகர்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்குகின்றனர். எனவே, கிராமிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரி சலுகைகளை திரைப்பட நடிகர்கள் கேட்க முடியாது. இந்த சலுகை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதும் கிடையாது.

பாரம்பரிய கலை, கலாசாரம், கல்வி ஆகியவற்றை பாதுகாக்க குறிப்பிட்ட மக்களுக்கு சலுகை வழங்கலாம் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. எனவே, இந்த சேவை வரிச் சலுகை கிராமிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதில் பாகுபாடு எதுவும் இல்லை.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘கிராமிய கலைஞர்கள் வாங்கும் அதே சம்பளத்தை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னணி திரைப்பட நடிகர்கள் வாங்குவார்களா?’ என்று மனுதாரர் சித்தார்த் சூரிய நாராயணனின் வக்கீலிடம் கேள்வி எழுப்பினோம். எனவே, இந்த வழக்கு வரிச் சலுகையை தவறாக புரிந்து கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்…” என்று கூறியுள்ளனர்.

நியாயமான தீர்ப்பு..!

Our Score