full screen background image

“நெருங்கிய நண்பனே ராயல்டியை தரவில்லை..” – இசைஞானி இளையராஜாவின் வருத்தம்..!

“நெருங்கிய நண்பனே ராயல்டியை தரவில்லை..” – இசைஞானி இளையராஜாவின் வருத்தம்..!

தன்னுடைய நெருங்கிய நண்பனும், பள்ளித் தோழனுமான சுப்ரமணியன் எக்கோ கம்பெனியை நிர்வகித்து வந்தபோதும் தனக்கு ராயல்டியைத் தரவில்லை என்று இசைஞானி இளையராஜா மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

illayaraja-press-meet-stills-014

இசைஞானி தொடர்ந்து பேசும்போது, “1977-ல் ‘அன்னக்கிளி’ படம் செய்து முடித்த பின்பு எனது பாடல்களை வெளியிடுவதற்கே முதலில் வழியில்லாமல் இருந்தது. பின்புதான் கொலம்பியா கம்பெனியின் மூலமாக படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.

அப்போது கொலம்பியா கம்பெனியில் இருந்து பார்த்தசாரதி என்ற நபர் நான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்தின் பூஜைக்கும் வந்து தயாரிப்பாளரிடம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு இசை உரிமத்தை வாங்கிச் செல்வார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து வாங்கிச் செல்வதால் ஒரு படத்தின் பூஜையின்போது கொடுப்பதையே ‘அடுத்தப் படத்திற்கும் அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்..’ என்பார்.

இப்படியே தொடர்ந்ததால் ஒரு முறை நான் சந்தேகப்பட்டு அனைத்து தயாரிப்பாளர்களிடத்திலும், ‘ராயல்டி ஏதாவது வருகிறதா..? கொடுக்கிறார்களா..?’ என்று கேட்டேன். அனைவருமே ‘சல்லிக்காசுகூட வரவில்லை’ என்றார்கள். நானும் கேட்டுப் பார்த்தேன். ‘கொண்டு வந்து தருகிறோம்’ என்றார்கள். ஆனால் கடைசிவரையிலும் வரவில்லை.

இதனையடுத்துதான் நானே எனது பள்ளித் தோழன் சுப்ரமணியனை முன்னால் நிறுத்தி அவனும், நானும் பார்ட்னர்களாக சேர்ந்து ‘எக்கோ’ ஆடியோ நிறுவனத்தைத் துவக்கினேன். எனக்கு இருந்த ஒரேயொரு பிரெண்டும் அவன்தான்.

இந்த ‘எக்கோ’ என்ற பெயரைச் சூட்டியதே பாலுமகேந்திராதான். அவரிடம்தான் ‘ஆடியோ கம்பெனி துவக்கப் போறேன். ஏதாவது பெயர் சொல்லு’ என்றேன். அவர்தான் ‘எக்கோ’ என்ற பெயரை சொன்னார். இந்த ‘மூன்றாம் பிறை’ படத்திலிருந்து ‘எக்கோ’ நிறுவனத்தின் மூலம்தான் எனது இசையில் உருவான பாடல்களை வெளியிட்டு வந்தேன்.

சில காலத்திற்கு பின்பு சுப்ரமணியனும் ராயல்டி தராமல் என்னை ஏமாற்றவேதான் நான் இன்னும் சில ஆடியோ நிறுவனங்களுக்கு ஆதரவளித்து அதில் எனது இசையை வெளியிட்டேன்.

இப்படியே போய் கடைசியாக யார், யாரோ எனது இசையை பங்கிட்டு சம்பாதித்துக் கொண்டிருக்க உண்மையான உழைப்பாளியான எனக்கு எதுவும் கிடைக்கவில்லை.

கடைசியாக அகி மியூஸிக் உரிமையாளர் ‘எனது மனைவி என்னை டைவர்ஸ் செய்துவிட்டாள். வியாபாரம் நொடிந்துவிட்டது. கஷ்டத்தின் எல்லையில் இருக்கிறேன்’ என்றெல்லாம் என்னிடம் வந்து புலம்பியதால்தான் ராயல்டி உரிமையைக் கொடுத்தேன். அதுவும் சரி வரவில்லை. அதனால்தான் நீதிமன்றம் சென்றேன்.

இப்போது நீதிமன்றம் எனக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. இப்போது என்னுடைய இசையில் வெளியான அனைத்து பாடல்களின் உரிமைகளையும் நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அளிக்கப் போகிறேன்.

இனிமேல் என்னுடைய பாடல்களை எந்த விதத்தில் பயன்படுத்த வேண்டுமானாலும் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று பயன்படுத்தலாம். இதன் மூலமாகக் கிடைக்கின்ற ராயல்டி தொகையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரும், நானும் சரி சமமாக பங்கிட்டுக் கொள்வோம்..” என்றார்.

Our Score