கிராமத்து வாழ்வியலையும், முதியவர்களையும் பற்றிப் பேச வரும் ‘சியான்கள்’ திரைப்படம்

கிராமத்து வாழ்வியலையும், முதியவர்களையும் பற்றிப் பேச வரும் ‘சியான்கள்’ திரைப்படம்

கே.எல்.புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘சியான்கள்’.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஜி.கரிகாலனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷா ஹரிதாஸ் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திரசீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை.சுந்தரம் என்று பல புதிய முதியவர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – வைகறை பாலன், இசை – முத்தமிழ், ஒளிப்பதிவு – பாபு குமார், கலை இயக்கம் – ரவீஸ், படத் தொகுப்பு – மப்பு ஜோதி பிரகாஷ், பாடல்கள் – முத்தமிழ், வைகறை பாலன், ஒலி வடிவமைப்பு – ஜி.தரணிபதி, புகைப்படங்கள் – எஸ்.பி.சுரேஷ், நடன இயக்கம் – அப்சர், சண்டை இயக்கம் – பி.சி., விளம்பர வடிவமைப்பு – சபிர், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு மேற்பார்வை – பேச்சி முத்து, இணை தயாரிப்பு – லில்லி கரிகாலன், தயாரிப்பு – ஜி.கரிகாலன்.

chiyyaangal movie stills

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இந்தச் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கரிகாலனும், அவரது மனைவியும் படத்தின் இணை தயாரிப்பாளரான லில்லி கரிகாலனும், படத்தின் இயக்குநரான வைகறை பாலனும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் வைகறை பாலன் பேசும்போது, “என்னுடைய சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் இருக்கும் பள்ளத்தூர்.

நான் சென்னை தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்தவன். சசிகுமார் ஸாரிடம் சுப்ரமணியபுரம் படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவன்.

என்னுடைய முதல் திரைப்படம் ‘கடிகார மனிதர்கள்’. அந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டுக்கள், என்னை மேலும் சிறந்த படைப்புகளைத் தரும்படி தூண்டியது.

இந்தப் படத்தின் கதை என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சில கதாபாத்திரங்களை மனதில் வைத்து எழுதப்பட்டது. என் வாழ்க்கையில் உண்மையில்  நடந்த  பல சம்பவங்களைத்  தொகுத்து அதனையும் கதையில்  சேர்த்திருக்கிறேன். 

‘சியான்கள்’ என்பது எங்கள் ஊர்ப் பக்கம் முதியவர்களை  அழைக்கும்  ஒரு  வட்டாரச்  சொல். இப்படம்  முதியவர்களின்  வாழ்க்கையை  அவர்கள்  பார்வையில்  சொல்வதால்  இந்தத் தலைப்பை  வைத்திருக்கிறோம். 

வயது முதிர்ந்த, கிராமத்து முதியவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண்ணின் மனம் மாறமல் கூறும் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.  

நம் எல்லோருக்கும் வயதான  அப்பா,  அம்மா  இருப்பார்கள். அவர்களை  நாம்  எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்  என்பதை  நம்  கிராமத்து  மண்  சார்ந்து  கூறும் படைப்பாக இந்த ‘சியான்கள்’ படம் இருக்கும்.

chiyyaangal movie stills 

இப்படம்  7 முதியவர்களின்  பார்வையில் அவர்களின் நிறைவேறாத  ஆசைகளைப் பற்றிக் கூறும்  படம்.  சுருக்கமாக சொன்னால், ‘வருத்தப்படாத  வாலிபர்  சங்க’த்தை வயதானவர்கள்  இணைந்து நடத்தினால் எப்படி  இருக்குமோ… அதுதான் இந்தப் படம். 

உறவுகளை தூர வைத்துவிட்டு இன்ஷியலை மட்டும் கூடவே  வைத்துக் கொள்கிறோம். அன்பையும்,  பாசத்தையும்  மறந்துவிட்ட  காலத்தில்  வாழ்கிறோம். முதியவர்களின் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். இச்சைகள் இருக்கும்.  அவற்றை எப்படி அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறோம்.

கூடவே, இப்போதைய இளைய சமுதாயத்தினரை பிரதிபலிப்பதைப் போல ஒரு காதல் கதையும் படத்தில் இருக்கிறது.  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் நாயகன், நடமாடும் மருத்துவராக கிராமங்களுக்கு வந்து மாத்திரை, மருந்துகளைக் கொடுத்து வருகிறார். இவருக்கும் அந்த ஊர்ப் பெண்ணுக்குமாய் ஒரு காதல் உருவாகிறது. இது எப்படி ஜெயிக்கிறது என்பதும் இன்னொரு இணையான கதையாய் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த டாக்டர் கேரக்டரில்தான் தயாரிப்பாளர் கரிகாலன் நடித்திருக்கிறார்.

இப்படம் தற்போதைய இளைஞர்களுக்கு நிச்சயமாகப்  பிடிக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன். அவர்களுக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா. இப்படம் இடுப்புக்கு கீழ் உள்ளவர்களுக்கான படம் இல்லை. இடுப்புக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்பதை  பகிரங்கமாகமாகவே சொல்கிறேன்.

மண்  சார்ந்த  கதைகள்  அருகி  வரும்  இந்தக் காலத்தில்  இப்படம்  நம்  கிராமத்து அழகியலை  மீட்டெடுத்து,  நம்  மீது  மண்  வாசத்தை, அன்பை  தெளிக்கும் படைப்பாக இருக்கும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தேனி மாவட்டத்தில் மேகமலையின் அடிவாரத்தில் இருக்கும் கிராமங்களில் நடைபெற்றது…” என்றார். 

chiyyaangal movie stills

தயாரிப்பாளரும், நாயகனுமான கரிகாலன் பேசும்போது, “இந்தப் படத்தில்  நான்  நாயகன் இல்லை.  ஒரு  கதாப்பாத்திரமாகத்தான்  நடித்திருக்கிறேன்.  என்  மனைவியின் உந்துததால்தான் இப்படத்தின் தயாரிப்பு நடந்தேறியுள்ளது.  

எல்லோரும் வாழ்க்கையில் நல்லதொரு நிலையை  அடைந்த  பிறகுதான்  அவர்களது  தீராத ஆசைகளை  நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால், என்  மனைவி இப்போதே என்  ஆசையை  நிறைவேற்றியிருக்கிறார். இப்போது முழுப் படமும் முடிவடைந்துவிட்டது. படத்தை விரைவில்  வெளியிட  இருக்கிறோம்…”  என்றார்.

Our Score