சித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்

சித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்

Dreambridge Proudctions Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்  L.V.Srikanth Lakshman இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், ‘பிளேடு’ சங்கர், வெற்றி, ‘ஆடுகளம்’ நரேன், பஞ்சு சுப்பு, அழகம் பெருமாள், ‘வாய்ஸ் ஓவர்’ ராமநாதன், ஐஸக், செவ்வாழை, ராதிகா ஆப்தே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – எல்.வி. ஸ்ரீகாந்த் லட்சுமண், எஸ்.என்.எழிலன், யுகேஸ்ராம், எழுத்து, இயக்கம் – ராஜன் மாதவ், ஒளிப்பதிவு – பத்மேஷ், படத் தொகுப்பு – கே.ஜே.வெங்கட்ராமன், இசை – சாஜன் மாதவ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த அவரது முதல் படைப்பான ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

அந்த முதல் பாகத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார்கள் என்பதுதான் இதற்கும், அதற்கும் இருக்கும் ஒரேயொரு ஒற்றுமை.

ஆறாண்டுகளுக்கு முன்பாக ‘உலா’ என்கிற பெயரில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளிவராமல் முடங்கிக் கிடந்தது. இப்போதுதான் விடிவு காலம் பிறந்தது. ஆனாலும் ஒரு பரபரப்புக்கும், வியாபாரத்திற்கும் உதவுமே என்றெண்ணிதான் ‘சித்திரம் பேசுதடி-2’ என்று பெயர் வைத்து படத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்.

5 பேரின் வாழ்க்கைக் கதையில் ஒருவருக்கொருவர் எப்படி சம்பந்தப்படுகிறார்கள் என்பதை ரத்தம் சிந்தி சொல்ல வைத்திருக்கிறது இத்திரைப்படம்.

“நல்லவர்கள் வாழ்வார்கள்.. கெட்டவர்கள் வாழ்வது போல தெரிந்தாலும் கடைசியில் வீழ்வார்கள்.” இதுதான் இப்படம் சொல்ல வரும் நீதி.

ஊரில் கந்து வட்டிக்குப் பலருக்கும் கடன் கொடுத்து கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று சொல்லி அவர்களின் சொத்துக்களை பிடுங்கி, பெரும் செல்வந்தனாக இருக்கும் ஷம்மி திலகனை ஒரு இரவில் ரவுடியான விதார்த்தும், அசோக்கும் சேர்ந்து ‘சம்பவம்’ செய்கிறார்கள். ஆனால் இந்தச் சம்பவத்தில் உயிர் போகாமல் பிழைத்துக் கொள்கிறார் ஷம்மி திலகன்.

இந்தக் கொலை முயற்சியை நேரில் பார்த்துவிடுகிறார் நந்தன். தனது காதலியான காயத்ரியுடன் ஊரைவிட்டு ஓடிப் போகும் திட்டத்துடன் வந்தவர், நடுவழியில் நடந்த இந்தக் கொடூரத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக ஷம்மி திலகனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்.

இதே நேரம் அவருக்காக நடுரோட்டில் தன்னந்தனியே காத்திருந்த காயத்ரியிடம் கொண்டித்தோப்பைச் சேர்ந்த ரவுடிகளான நிவாஸ் ஆதித்தனும், பிளேடு சங்கரும் ரகளை செய்து அவருடைய பையை பறித்துக் கொண்டு ஓடுகின்றனர். அந்தப் பையில் தன்னுடைய அம்மாவின் விலையுயர்ந்த நெக்லெஸ் இருப்பதால் காயத்ரி படு அப்செட்டாகிறார்.

தனது கணவர் வெட்டுப்பட்டார் என்ற செய்தி கேட்டு ஓடோடி வருகிறார் மனைவி ராதிகா ஆப்தே. ஆனால் வந்தவருக்கு கணவர் மீது எந்தப் பாசமும் இல்லை. “அந்தாள் சாகலையா..?” என்றுதான் கேட்கிறார்.

தனது காதலி தனக்காகக் காத்திருப்பாள் என்று சொல்லி போலீஸாரிடம் மன்றாடி விடுபட்டு  அந்த இடத்துக்கு ஓடி வருகிறார் நந்தன். ஆனால் அங்கே அவர் இல்லை.

இன்னொரு பக்கம் பெரும் தொழிலதிபரான பஞ்சு சுப்பு தனது நண்பரான ஷம்மி திலகனை பார்க்க மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அங்கே ராதிகா ஆப்தேவுக்கும் அவருக்கும் பயங்கர வாக்குவாதம் நடக்கிறது. தனது கணவர் செத்தாலும் தனக்குக் கவலையில்லை என்கிறார் ராதிகா ஆப்தே.

ஷம்மி திலகனை வெட்டும்போது நேரில் பார்த்த ஒரு சாட்சி இருக்கிறான் என்று போலீஸ் மூலம் பஞ்சுவிற்குத் தெரிய வருகிறது. பஞ்சு இதை அசோக்கிடம் சொல்லி விதார்த்தை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கும்படி சொல்கிறார்.

காயத்ரிக்கு மறுநாள் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணச் செலவுக்காக பண உதவி கேட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேனிடம் வருகிறார் காயத்ரியின் தந்தை. நரேனோ “ஒரு இடத்தில் பணம் நிறைய இருக்கிறது. திட்டம் போட்டால் நாமே அதைத் தட்டிவிடலாம்” என்று ஐடியா கொடுக்கிறார். இந்தத் திட்டத்தில் தற்போது சஸ்பெண்ட்டில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரையும் சேர்த்துக் கொள்கிறார். அந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை. அந்த சிறுமியும் ஷம்மி திலகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனையில்தான் இருக்கிறார்.

பஞ்சு சுப்பு நந்தனையும், விதார்த்தையும் கொலை செய்துவிடும்படியான அசைண்மெண்ட்டை அசோக்கிடம் ஒப்படைக்கிறார். மருத்துவமனைக்கு வரும் அசோக்கிடம் நந்தனை போலீஸ் கான்ஸ்டபிளான செவ்வாழை அடையாளம் காட்டுகிறார்.

விதார்த்தை பாலியல் தொழிலாளியான நிவேதிதா விரும்புகிறார். ஆனால் விதார்த் அவளை விரும்பாமல் ஒதுக்குகிறார். இதே நேரம் ரவுடி நிவாஸ் ஆதித்தனும் நிவேதிதாவை மிகவும் விரும்புகிறார். இந்த முக்கோணக் காதல் இப்படியே இருக்கிறது.

நந்தனை பாலோ செய்கிறார் அசோக். காயத்ரியைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் நந்தன். சொன்ன நேரத்திற்கு வராததால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாகிறது. கடைசியில் தங்களது காதலை பிரேக்அப் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் அதற்கு முன்பாக தனது பையை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி காயத்ரி கேட்டுக் கொள்ள இருவரும் திருடர்களான நிவாஸூம், பிளேடு சங்கரும் இருக்கும் கொண்டித்தோப்பு பகுதிக்கு கிளம்புகிறார்கள்.

கால் டாக்சியில் செல்லும்போது வழியில் டிரைவருடன் காயத்ரி தகராறு செய்ய.. அவன் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு ஓடுகிறான். பின்னாலேயே தன் ஆட்டோவை ஓட்டி வரும் அசோக், நந்தன்-காயத்ரியிடம் நைச்சியமாக பேசி பழகி, தான் அவர்களை கொண்டித்தோப்பு பகுதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி அங்கே அழைத்துச் செல்கிறார்.

அங்கே திருடர்களைப் பார்த்து கடுமையாக சண்டையிடுகிறார்கள் அசோக்கும், நந்தனும். ஆனால் திருடர்கள் இருவரும் தப்பித்துவிடுகிறார்கள். திருடர்களை தேடி நந்தன் ஓடிக் கொண்டிருக்க.. அந்த இடைவெளியில் அசோக் காயத்ரி மீது ஆசைப்பட்டு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தன் இடத்துக்குத் தூக்கிச் செல்கிறார்.

காயத்ரி தேடும் அதே திருடர்களை நரேன் சந்தித்து தனது திருட்டுச் சம்பவத்துக்கு ஒரு கார் வேண்டும் என்பதால் அதனைத் திருடித் தரும்படி கேட்கிறார். திருடர்களும் இதற்காக காருக்கு அலைகிறார்கள்.

மிகப் பெரிய பணக்காரனாக இருந்தாலும் மிகப் பெரிய தொகைக்கு கடன்காரனாகவும் இருக்கிறார் அஜ்மல். இவரது மொத்தக் கடனும் ஷம்மி திலகனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதுதான். கடனை அடைப்பது சாமான்யமான வேலையில்லை என்பதை உணர்ந்து வருத்தத்தில் இருக்கும் அஜ்மலிடம் அவரது குடும்ப நண்பரான மோகன்ராம் வந்து ஒரு பென் டிரைவை கொடுக்கிறார்.

“இந்த பென் டிரைவில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இதனைப் பணயமாக வைத்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எப்படியாவது புத்திசாலித்தனமாக செய்து பிழைத்துக் கொள்…” என்று சொல்லிவிட்டுப் போகிறார் மோகன்ராம்.

அஜ்மலின் காதலியான பிரியா பானர்ஜி அவரைத் தேடி பல முறை போன் செய்ய அவர் போனை தொடாமலேயே இருக்கிறார். இவருடைய கடன் தொல்லைக்கு பிரியாவின் அண்ணனும் ஒருவகையில் காரணமாக இருக்கிறார் என்பதால் அவர் மீதே கோபத்தில் இருக்கிறார் அஜ்மல்.

ஆனாலும் காதலி பிரியா நேரில் வந்து அவரைச் சந்தித்து சமாதானப்படுத்த.. இப்போது அந்த பென் டிரைவ் மேட்டரை பிரியாவிடம் சொல்கிறார் அஜ்மல். இருவரும் அதனைச் செயல்படுத்த நினைக்கிறார்கள்.

அந்த பென் டிரைவில் அரசியல்வாதியான அழகம் பெருமாள் ஒரு சிறுமியிடன் கட்டாய உறவில் ஈடுபடும் காட்சி பதிவாகியிருக்கிறது. அழகம் பெருமாளுக்கே போன் செய்து பென் டிரைவ் பற்றிய தகவலைச் சொல்லி பணம் கேட்கிறார் அஜ்மல். அழகம் பெருமாளும் பணத்தைத் தருவதாகச் சொல்லி இரவில் ஒரு இடத்துக்கு வரச் சொல்கிறார்.

இந்த இரவில் அஜ்மல் அந்த இடம் நோக்கிச் செல்லும்போது காரை நிறுத்திவிட்டு ஒரு கடையில் காபி குடிக்கும் தருணத்தில், அந்தக் காரை திருடர்கள் நிவாஸூம், பிளேடு சங்கரும் கடத்திச் செல்கிறார்கள். அஜ்மலால் காரை மீட்க முடியவில்லை. விட்டுவிடுகிறார்.

கார் நரேன் கைக்கு போகிறது. இதே நேரம் காயத்ரி காணாமல் போய்விட்டதாக நரேனிடம் புகார் செய்கிறார் காயத்ரியின் அப்பா. நரேன் நந்தனை அழைத்து விசாரிக்க.. அவன் தனக்கு எதுவும் தெரியாது என்கிறான்.

கொள்ளையடிக்க கிளம்பும் நிவாஸ் ஆதித்தன், பிளேட் ஷங்கர், காயத்ரியின் அப்பா, நரேன் என நால்வரையும் ஒன்றாகப் பார்க்கும் நந்தன், அவர்களை ஃபாலோ செய்யத் தொடங்குகிறான்.

நரேன், காயத்ரியின் அப்பா, அந்த சப்-இன்ஸ்பெக்டர் மூவரும் பஞ்சு சுப்புவின் வீட்டுக்குள் நுழைந்து வருமான வரித்துறை என்று சொல்லி தேடுதல் வேட்டையைத் துவக்குகிறார்கள்.

பணத்தை எடுக்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்டானவன்.. மருத்துவமனையில் தான் பார்த்தவன் என்பது பஞ்சு சுப்புவுக்குத் தெரிய அவர் துப்பாக்கியை வைத்து காயத்ரியின் அப்பாவை மிரட்டுகிறான்.

இந்தக் குழப்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க.. பஞ்சு சுப்பு கொல்லப்படுகிறார். இதையடுத்து ஓடி வரும் இன்ஸ்பெக்டர் நரேன் தனது துப்பாக்கியில் சைலன்ஸரை பொருத்தி வீட்டில் உள்ள அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமே காயம்படுகிறார்.

வீட்டை விட்டு வெளியில் ஓடி வரும் காயத்ரியின் அப்பாவை, வீட்டுக்கு வெளியில் மறைந்திருந்த நந்தன் இழுத்துக் கொண்டு ஓடுகிறான். சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனையில் கொண்டு வந்து தள்ளிவிட்டு நரேன் எஸ்கேப்பாகுகிறார். காயத்ரியை தனது அறையில் கட்டிப் போட்டுவிட்டு காவலுக்கு விதார்த்தையும் வைத்துவிட்டு வெளியில் வருகிறார் அசோக்.

காயத்ரியை தேடி அவளது தந்தை நந்தனையும் அழைத்துக் கொண்டு அலைகிறார். அப்போது காயத்ரி கடைசியாக போன் பேசியது நந்தனின் போனில் இருந்துதான் என்பதை தெரிந்து கொள்ள.. வேறுவழியில்லாமல் நந்தன் நடந்தவைகளை அப்படியே சொல்லிவிடுகிறார். நந்தன்-காயத்ரி காதலைப் புரிந்து கொள்கிறார் காயத்ரியின் தந்தை.

விதார்த்தை கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் அசோக், ஷம்மி திலகன் இருக்கும் மருத்துவமனைக்கு வருகிறார். ராதிகா ஆப்தேவை முதன்முதலாக மருத்துவமனையில் பார்த்தவுடனேயே அசோக் அவர் மீது மையல் கொண்டிருக்கிறார்.

விதார்த் தன் அறையில் கட்டிப் போட்டிருந்த காயத்ரியை விடுவித்து வீட்டுக்குப் போகும்படி சொல்கிறார். ஆனால் காயத்ரி போகும்போது அதே பில்டிங்கில் வேறொரு இடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு இளம் சிறுமியையும் மீட்டுக் கொடுக்கும்படி விதார்த்திடம் கேட்க.. விதார்த் முதலில் அதற்கு மறுக்கிறார்.

மருத்துவமனையில் ஷம்மி திலகனை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி ராதிகாவை தனது ஆசைக்கு இணங்கும்படி கேட்கிறார். இந்தக் குழப்பத்தில் நந்தன் அங்கே சரியான நேரத்திற்கு வர ஏற்படும் சண்டையில் அசோக்கை கத்தியால் குத்துகிறார். கத்திக் குத்துப்பட்ட அசோக் மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்து சாலையில் வாகனத்தில் மோதி இறந்து போகிறார்.

காயத்ரி அந்தச் சிறுமியை மீட்க தானே முயற்சி செய்து கடைசியாக அந்தக் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். ஆனாலும் விதார்த் இடையில் மனம் மாறி காயத்ரியைக் காப்பாற்ற அவர்களுடன் சண்டையிட்டு கத்திக் குத்துக்களை தாங்கிக் கொண்டு காயத்ரி, அந்தச் சிறுமியுடன் தப்பிக்கிறார்.

நிவேதிதா தன்னை விரும்பாத விதார்த்தை மறந்துவிட்டு தன்னை விரும்பிய திருடன் நிவாஸூடன் விரும்பிச் சென்று திருமணம் செய்து கொள்ள நினைத்துச் செல்கிறார்.

மருத்துவமனையில் இருக்கும் ஷம்மி திலகன் தான் மனம் திருந்தி வாழ்வதாக மனைவியிடம் வாக்களித்து சொன்னதுபோலவே தான் ஏமாற்றி பிடுங்கிய சொத்துக்களைத் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்கிறார்.

இதேபோல் சம்பாதித்த பணத்தை நிறைய நல்ல காரியங்களுக்குக் கொடுப்பதாகச் சொல்ல.. அதில் முதல் விஷயமாக சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கான ஆபரேஷன் செலவுக்கான தொகையைக் கட்டுகிறார் ராதிகா ஆப்தே.

அடுத்த இரண்டாவதாக அஜமலின் சொத்துப் பத்திரம் திரும்பவும் அவர் கைக்கே கிடைக்கிறது. அங்கேயும் ஒரு சுபம்.

இப்படி 5 சம்பவங்களின் துவக்கமும் இறுதியில் சுபமாக முடிகிறது. சத்தியமாக ஒரு முறை படம் பார்ப்பவர்களால்கூட படத்தின் கதையை ஞாபகம் வைத்திருக்கவே முடியாது என்பதால் படம் பார்த்துவிட்டு வந்தும் கதையை இங்கே படித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே முழுமையாக எழுதப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் கதை கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைமையில் ஒரு நிமிடம் செல்போனை நோண்ட கண்களைத் தாழ்த்தினால் அவ்வளவுதான்.. கதை சத்தியமாக புரியாது என்று எச்சரிக்கைவிடுக்கும் அளவுக்கு திறமையான அறிவினால் எழுதப்பட்ட திரைக்கதையில் உருவாகியிருக்கிறது.

திரைக்கதையில் ஒரு சிறிய லாஜிக் மிஸ்டேக்கூட இருக்கக் கூடாது என்பதை கவனித்து, கவனித்து எழுதியிருக்கிறார் ராஜன் மாதவ். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

காட்சிக்குக் காட்சி புதிய, புதிய டிவிஸ்ட்டுகளை கொண்டு வருவதால் முடிவை அறிந்து கொள்வதில் கடைசிவரையிலும் ஒரு பேராசை இருந்து கொண்டேயிருக்கிறது.

சிறப்பான இயக்கத்தையும் செய்திருக்கிறார் இயக்குநர் ராஜன் மாதவ். ஏற்கெனவே சேரன், பிரசன்னாவை வைத்து ‘முரண்’ என்கிற வித்தியாசமான படத்தைக் கொடுத்தவரும் இவரேதான்.

படத்தில் நடித்திருக்கும் அனைத்து கேரக்டர்களுக்கும் சம அளவில் நடிப்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தனை நடிகர், நடிகைகளும் சோடை போகவில்லை. அழகாக நடித்திருக்கிறார்கள். படம் துவங்கிய சில நிமிடத்திலேயே அனைத்து கேரக்டர்களும் அந்தக் கேரக்டர்களாகவே மாறிவிட்டது போன்ற உணர்வுதான் நமக்குத் தோன்றுகிறது.

விதார்த் இறுக்கமான முகத்துடன், ரவுடிக்கான பக்கா கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் நடித்திருக்கிறார். இவருக்கு நேரேதிரான குணத்துடன் அசோக்.. பெண் விரும்பியாக நடித்திருக்கிறார். காயத்ரி ஒரு காதலியாகவும், அந்த சிறுமியைக் காப்பாற்ற நினைக்கும்போது பெருமையான பெண்ணாகவும் தோற்றமளிக்கிறார்.

ராதிகா ஆப்தேவின் சீற்றமான நடிப்பு அற்புதம். நிறைய குளோஸப் காட்சிகளை அவருக்காக வைத்து ஷாட்டுகளை அழகாக்கியிருக்கிறார் இயக்குநர்.

அஜ்மல் பெரிய இடத்துப் பிள்ளை கேரக்டரில் பணத்தினால் ஏற்பட்ட அசகவுர்யத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் அல்லாடும் கேரக்டரில் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். காரும் போய், காதலியின் நண்பியின் காரில் ஏமாற்றமாய் வரும் அந்த ஒரு காட்சியின்போது ஐயோ பாவம் என்றே ரசிகர்களை நினைக்க வைக்கிறார்.

பஞ்சு சுப்பு, நரேன், சப்-இன்ஸ்பெக்டராக நடித்தவர், காயத்ரியின் அப்பாவாக நடித்தவர் என்று படத்தின் மற்ற கேரக்டர்களும் சோடை போகவில்லை.

நிவாஸ் ஆதித்தன், பிளேடு சங்கரின் முட்டாள்தனமான சின்னப்பிள்ளைத்தனமான வசனங்களும், நடிப்பும் ஏக பொருத்தம். லேசாக புன்னகைக்கவும் செய்கின்றன. இதேபோல் நிவேதிதாவின் பாலியல் தொழிலாளியின் நடிப்பும் இன்னொரு பக்கம் கவர்கிறது.

விதார்த் தன்னை பாலியல் தொழிலாளி என்று கேவலப்படுத்தி பேசுவதைக் கேட்டுவிட்டு, “மத்தவங்களை கஷ்டப்படுத்திச் சம்பாதிக்கிறவன் நீ.. மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திச் சம்பாதிக்கிறவ நான். எப்படிப் பார்த்தாலும் உன்னைவிட நான்தான் ஒசத்தி…” என்ற நிவேதிதாவின் பதிலடிக்கு ஒரு சபாஷ் போடலாம்.. 

“இவ்ளோ நாள் காசு கொடுத்தால் வர்றவதானேன்னு நினைச்சுக்கிட்டிருந்த.. இப்போ அவனைக் கல்யாணம் பண்ணப் போறேன்னு தெரிஞ்சவுடனே ‘சிஸ்டர்’ன்னு கூப்பிடுற.. கரெக்ட்டுதானே..?” என்று பிளேடு சங்கரிடம் நிவேதிதா கேட்கும் கூர்மையான கேள்விக்கு ‘பிளேடு’ சங்கர் தடுமாறுவது சாட்சாத் பொருத்தமான நடிப்பு.

காட்சிகளின் பிணைப்பும், பொருத்தமான வசனங்களும், அருமையான இயக்கமும் சேர்ந்து கொள்ள.. எதிலும் குற்றம் சொல்ல வாய்ப்பு தராமல் இருக்கிறார் இயக்குநர்.

வித்தியாசமான லொகேஷன்கள்.. கால நேரங்கள், பகல், இரவுக் காட்சிகள் என்று தொடர்ந்து மாறிக் கொண்டேவரும் திரைக்கதைக்கேற்பவும் அத்திரைக்கதையின் மூடுக்கேற்பவும் ஒளியை பகிர்ந்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பத்மேஷ்.

சண்டை காட்சிகளை வித்தியாசமாக மிக நெருக்கமான சந்துக்களிலும், தெருக்களிலும் அமைத்திருக்கும் சண்டை இயக்குநரும் பாராட்டுக்குரியவர். அந்தக் காட்சிகளை கஷ்டப்பட்டு படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு இதற்காகவே இன்னொரு பாராட்டு.

அதேபோல் இசையமைப்பாளரின் சாஜன் மாதவ்வின் பின்னணி இசை பாராட்டுக்குரியது. எந்த இடையூறும் இல்லாமல் கதையோட்டத்தில் கூடவே இருப்பதுபோல இருக்கிறது இசை. மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் டான் பிராவோ ஆடும் ‘டல்மேனி’ பாடல் காட்சி ஓஹோதான். இதேபோல் நிவேதிதா ஆடும் அந்தக் கவர்ச்சியாட்டமும் இமைப் பொழுதும் ஸ்கிரீனைவிட்டு எடுக்க முடியாமல் களைத்துப் போயிருக்கும் கண்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்திருக்கிறது.

இத்தனை கேரக்டர்கள்.. இத்தனை நெளிவு, சுழிவான திரைக்கதையையும் கொஞ்சமும் குழப்பமில்லாமல் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் வெங்கட்ராமன்.  சண்டை காட்சிகளில் இவருடைய பங்களிப்பும் மிக அதிகம்.

மிகச் சிறப்பான கதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்திற்கும் முழுப் பொறுப்பாகி மிகப் பெரிய பூங்கொத்தை பரிசாகப் பெறுகிறார் இயக்குநர் ராஜன் மாதவ்.

இந்தாண்டின் அவசியம் பார்த்தே தீர வேண்டிய படங்களின் பட்டியலில் இத்திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது..!

மிஸ் பண்ணாமல் பாருங்கள் மக்களே..!

Our Score