full screen background image

சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் மோதல் – அலுவலகம் பூட்டப்பட்டது..!

சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் மோதல் – அலுவலகம் பூட்டப்பட்டது..!

விருகம்பாக்கத்தில் இருக்கும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் அலுவலகம் பலத்த சர்ச்சைகளுக்கிடையில் பரபரப்புடன் இன்று பூட்டப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தச் சங்கத்தின் தலைவரான ரவிவர்மா பல்வேறு காரணங்களுக்காக தலைவர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக அந்தச் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதையடுத்து நேற்று அந்தச் சங்க அலுவலகத்திற்கு வந்த நடிகர் ரவிவர்மா தன்னை நீக்கியது செல்லாது என்றும், தான்தான் இன்னமும் சங்கத்தின் தலைவர் என்றும் சொல்லி ரகளை செய்துள்ளார்.

இன்று காலையும் சங்கத்திற்குள் நுழைந்த ரவி வர்மா சங்கத்தைவிட்டு வெளியேற மறுத்து அங்கிருந்த மற்றைய சங்க நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

சங்க நிர்வாகிகள் விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டு புகார் செய்த பொழுது விரைந்த வந்த போலீஸார் ரவிவர்மாவின் சார்பாகவே பேசியுள்ளனர்.

“இரண்டு தரப்பினரும் சங்கத்தைவிட்டு வெளியேறி பூட்டுப் போட்டுக் கொள்ளுங்கள். பின்பு நீதிமன்றம் சென்று உரிமை உத்தரவு வாங்கி வந்து அலுவலகத்தில் உட்காருங்கள்…” என்று போலீஸ் சொன்னதால் இப்போது சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

“நிலைமை சுமூகமாகத் திரும்பும்வரையிலும் விருகம்பாக்கத்தில் இருக்கும் சின்னத்திரை கூட்டமைப்பு அலுவலகத்திலேயே சின்னத்திரை நடிகர்கள் சங்கம் செயல்படும்…” என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷியும், பொருளாளர் ஜெயந்தும் அறிவித்துள்ளனர்.

“நடிகர் ரவிவர்மா பாரம்பரியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசியல் தெரிந்தவர். இப்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். அதனால், விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆதிக்கம் செலுத்துகிறார். இதனால்தான் எங்களது பெண் உறுப்பினர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டில் எஃப்.ஐ.ஆர். போட வைத்திருக்கிறார். இதனை நாங்கள் அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் போகிறோம்…” என்று பொருமுகிறார்கள் சங்கத்தின் நிர்வாகிகள்.

இன்னொரு பக்கம்.. கடந்த காலங்களில் இந்தச் சங்கத்திற்கு தலைவராக இருந்த பெரிய நடிகர்கள் பலரும் இது பற்றி தெரிந்தும் மூச்சுகூட விடாமல் இருக்கிறார்கள். “எங்களைத் தோற்கடித்துதானே அவர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள். அவர்களே பிரச்சினையை சமாளிப்பார்கள்…” என்று சொல்லி அவர்கள் பாராமுகம் காட்டுகிறார்களாம்.

ஓட்டுப் போட மட்டுமே வரும் உறுப்பினர்கள் “அப்படியா..?” என்று மட்டும் கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். உண்மையில் சங்கத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் ‘இந்தப் பிரச்சினையை எப்படி யாருடன் கூட்டு சேர்ந்து முடிப்பது’ என்று தெரியாமல் கவலையில் உள்ளார்கள்.

இந்தக் கொரோனா காலத்தில் ஏற்கெனவே பாதி சீரியல்களின் படப்பிடிப்புகள்தான் நடந்து வருகிறது. சங்க உறுப்பினர்களில் பாதி பேர் வீட்டில் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘தங்களுக்கு சங்கம் ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சங்க அலுவலகமே இல்லை’ என்ற சூழல் அந்தச் சங்க உறுப்பினர்கள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒற்றுமை இல்லையேல் யாருக்கும் வெற்றியில்லை..!

இது பற்றி பலவித திரைக்கதைகளில், பல மாதிரியான வசனங்களைப் பேசியிருக்கும் நடிகர்களுக்கே இது தெரியவில்லையெனில் நாம் என்ன சொல்வது..?

Our Score