சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்..!

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்..!

தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெரும் பூகம்பமே வெடித்திருக்கிறது. அந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவரான நடிகர் ரவி வர்மாவை அந்தப் பதவியிலிருந்து சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அந்தச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி கலை நிகழ்ச்சி நடத்த கமிஷன் வாங்கியது.. செயற்குழு உறுப்பினர்களுக்கே தெரியாமல் சக உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கியது.. சங்கத்தின் லெட்டர்பேடுகளை மறைத்து வைத்தது.. சக நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசியது.. நடத்தியது.. செயற்குழுக் கூட்டத்தில் கலகம் விளைவித்தது. பொதுக்குழுக் கூட்டத்தில் குழப்பம் செய்தது.. கொரோனா நிவாரண உதவிகளில் ஊழல் செய்தது.. உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காமல் ஏமாற்றியது.. என்று ரவிவர்மா மீது இந்தச் சங்கத்தினர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பகீர் ரகமாக இருக்கிறது.

இது தொடர்பாக நேற்று சென்னை பத்திரிகையாளர் சங்க அரங்கத்தில் பத்திரிகையாளர்களை இந்தச் சங்கத்தினர் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் ரவிவர்மா மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் திரு A.ரவிவர்மா மீது பொதுச் செயலாளர் திரு. K.ரிஷி, துணைத் தலைவர் திரு.மனோபாலா, பொருளாளர் திரு.ஜெயந்த், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் வைக்கும் குற்றச்சாட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 28.09.2019-ல் மலேசியாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடந்த கலை நிகழ்ச்சியின்போது தலைவர் ரவிவர்மா அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த DIVINE MEDIA திரு.பாலசுப்ரமணியம் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கமிஷனாக 5 லட்சம் ரூபாயை பேசி, அதில் மூன்றே கால் லட்சம் ரூபாயை முன் பணமாகவும் பெற்றுக் கொண்டார்.

கலை நிகழ்ச்சிக்கு பின் நடந்த செயற்குழுவில் ரவிவர்மா பணம் வாங்கிய விஷயம் நிரூபிக்கப்பட்டதோடு 13.10.2019 அன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் அவர் பணம் வாங்கியதற்கான தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டு துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் கையொப்பமிட்டு திரு.ரவிவர்மா மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

அதற்கு பிறகு 09.11.2019-ல் நடந்த சிறப்பு பொதுக் குழுவில் திரு.ரவிவர்மா மீது இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தபோது, அங்கே ஒரு சில உறுப்பினர்களுடன் வந்து கத்தி கூச்சல்போட்டு கலகம் ஏற்படுத்தி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டார் ரவிவர்மா.

அதன் பின்பு அலுவலகத்தில் அப்போதைய செயலாளர் திரு.ஆடுகளம் நரேன் மற்றும் சிலருடன் சண்டை போட்டு “சிறப்பு பொதுக் குழுவின் இந்த தீர்மானம் செல்லாது… நான்தான் தலைவராக இருப்பேன்” என்று செயற்குழு உறுப்பினர்களின் கட்டுப்பாட்டையும் மீறி தலைவர் பதவியில் வந்து அமர்ந்து கொண்டார்.

திரு.ரவிவர்மா மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பின்பும் அவர் எப்படி தலைவராக தொடரலாம் என்று விளக்கம் கேட்டு செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு சங்க உறுப்பினரான திரு.பிரேம் நான்கு கடிதங்கள் அனுப்பினார்.

அந்த நான்கு கடிதங்களையும் சங்கத்தின் மேலாளர் திரு.சண்முகம் மூலம் திரு.ரவிவர்மா மறைத்துவிட்டு செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலேயே இருந்துவிட்டார். இதனால் திரு.பிரேம் இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலின் ஊரடங்கு சமயத்தில் நடிகர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் ரூ.1 லட்சம் ரூபாயை சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நிவாரண நிதியாக வழங்கினார். அதை வங்கியில் டெபாசிட் செய்யாமல் தானே தனிப்பட்ட முறையில் வாங்கிக் கொண்டு செயற்குழுவின் ஒப்புதல் எதையும் பெறாமல், அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியபடுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொடுக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கே கொடுத்துவிட்டார் ரவிவர்மா.

தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக சங்க உறுப்பினர்களான திரு.பிரேம் அவர்களையும் திருமதி.கற்பகவல்லி அவர்களையும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமல் சங்கத்தின் லெட்டர் பேடில் கடிதம் அனுப்பி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதாக அறிவித்ததோடு அல்லாமல், அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்கு சேர வேண்டிய ஊரடங்கு கால நிவாரண உதவிகளையும் தடுத்துவி்ட்டார்.

இதேபோல் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த், சன் டிவி, உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மற்றும் பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள், பணம் போன்றவற்றை அடிப்படை தர்மங்களைகூட பின்பற்றாமல் ரவிவர்மா தனக்கு வேண்டியவர்களுக்கே தொடர்ந்து வழங்கி வந்ததால் இறுதியில் 850 கிலோ அரிசி கணக்கிலேயே வரவில்லை.

தன்னிச்சையாக அவர் எடுத்த இந்த முடிவினால் சங்க உறுப்பினர்களில் பல பேருக்கு நிவாரணப் பொருட்களே போய் சேரவில்லை.

திரு.ரவிவர்மா அவர்களின் இந்த செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால் பொதுச் செயலாளர் திரு.ஆடுகளம் நரேன் அவர்கள் தனது பொறுப்பை ராஜினாமா செய்து நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகி கொண்டார்.

திருஆடுகளம் நரேன் அவர்களின் ராஜினாமாவிற்கு பிறகு நடந்த சிறப்பு செயற்குழுவில் புதிதாக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.  திரு.ரவிவர்மா அவர்கள் செயற்குழு உறுப்பினர்களிலிருந்து ஒருவரையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்து தன் இஷ்டப்படி முடிவெடுத்து திரு.ரவிசங்கர் அவர்கள் செயலாளராக இருப்பார் என்று அறிவித்தார்.

அவரது இந்தச் செயலுக்கு செயற்குழுவில் ஒப்புதல் கிடைக்காததால் செயற்குழு உறுப்பினர்கள் ஓட்டின் அடிப்படையில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தனர். இதற்கு ஒரு மனதாக ரவிவர்மா சம்மதம் தெரிவித்தார். அதன்படி திரு.ரிஷி அவர்கள் அதிக வாக்குகள் பெற்று பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜுன் 14 அன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் திரு.ரவிவர்மா அவர்களால் நீக்கப்பட்ட திரு.பிரேம், திருமதி.கற்பகவல்லி போன்ற சங்கத்து உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள செயற்குழு தீர்மானம்நிறைவேற்றியது.

ஆகஸ்ட் 9-ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் திருமதி சங்கீதா பாலன் மற்றும் திருமதி. சுபா கணேஷ் அவர்கள் ரவிவர்மாவின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் இது பற்றி ரவிவர்மாவிடம் கேட்க, அதற்கு அவர் “ஆகஸ்ட் 15 அன்று அவர்கள் காலை 10 மணிக்கு சங்கத்திற்கு வரும்போது விளக்கம் தருகிறேன்…” என்று சம்மதம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15 அன்று நடந்த சிறப்பு விசாரணை கூட்டத்தில் உறுப்பினர்கள் சங்கீதா பாலன், சுபா கணேஷ் இருவரும் அவர் கூறிய நேரத்திற்கு சங்கத்திற்கு வந்தபோது ரவிவர்மா திடீரென்று வெளியே கிளம்பி போனார். செயலாளர் திரு.ரிஷி அவரிடம் “நீங்களும் இந்த விசாரணைக் கூட்டத்தில் இருக்க வேண்டும்” என்று சொன்னபோது,  அவர் “எனது வழக்கறிஞர் நான் இந்த மீட்டிங்கில் இருக்க வேண்டியதில்லை என்று கூறிவிட்டார். அதனால் நான் கிளம்புகிறேன்…” என்று சொல்லி வெளியேறிவிட்டார் ரவிவர்மா.

செயற்குழுவின் மற்ற உறுப்பினர்கள் சங்கீதா பாலன், சுபா கணேஷ் இருவரிடமும் சமாதானம் பேசிவிட்டு வெளியே வந்தபோது ரவிவர்மா அவர்களின் தூண்டுதலின்பேரில் அங்கு வந்திருந்த சங்கத்து உறுப்பினர்கள் 30 பேர் திடீரென தகராறு செய்ய ஆரம்பித்தனர்.

அவர்களிடம் ”உங்களை யாரு இங்க வரச் சொன்னது..? என்று கேட்டதற்கு, உப தலைவர் மனோபாலா அவர்கள் தலைவர் ரவிவர்மாவின் நடவடிக்கைகளை எதிர்த்து இங்கு உண்ணாவிரதம் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளத்தான் தாங்கள் வந்திருப்பதாகவும் கூறி பொய் பிரச்சாரம் செய்தனர்.

உப தலைவர் மனோபாலா அவர்களின் நல்லெண்ண அடிப்படையில் அனுப்பிய WhatsApp குரல் பதிவை திரு ரவிவர்மா அவர்கள் பல உறுப்பினர்களுக்கு அனுப்பி அவர்களிடையே பிரச்னையை உருவாக்கி இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.

திரு.ரவிவர்மா விளக்கம் கொடுக்காததால் சங்கீதா பாலனும், சுபா கணேஷும் மீடியாக்களிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றபோது செயற்குழு உறுப்பினர்களான நாங்கள், “இது பற்றி செயற்குழுவில் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம். பத்திரிக்கைகள்வரை செல்ல வேண்டாம்…” என்று தடுத்துப் பார்த்தோம். ஆனால், அவர்கள் “எங்களது பாதுகாப்பிற்காகத்தான் ரவிவர்மா மீது புகார் கொடுக்க போகிறோம்…” என்று கூறி மீடியாக்களிடம் சென்று இது பற்றி முறையிட்டனர்.

இடையில் நாங்கள் ரவிவர்மா மீது Show Cause Notice  கொடுத்து அனைத்து புகார்களையும் எழுதி அவரிடம் 21 நாட்கள் கால அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்டோம். இந்தத் தகவலை கடிதம் மூலமாக சின்னத்திரை கூட்டமைப்புக்கும், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துக்கும்தெரியப்படுத்தினோம்.

ஆகஸ்ட் 25-ம் தேதி தலைவர் ரவிவர்மா அவர்கள் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நமது சங்கத்து உறுப்பினர்கள் திரு.பிரேம், திருமதி.கற்பகவல்லி, திருமதி.சங்கீதா பாலன், திருமதி சுபா கணேஷ் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்தார். பின்பு அவர்கள் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ரவிவர்மா கொடுத்த புகாரில் அவருடைய வீட்டு முகவரியை போடாமல் சின்னத்திரை நடிகர்கள் சங்கம் என்ற முகவரியை கொடுத்ததால் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கே இதனால் இழுக்கு ஏற்பட்டிருக்கிறது.

SHOW CAUSE NOTICE-ற்கு விளக்கம் தரும்விதமாக ரவிவர்மா அவர்கள் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் நீண்ட கடிதம் எழுதி அனுப்பினார். அதி்ல் அவர் கூறிய விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் செப்டம்பர் 13-ம் தேதியன்று நேரில் வந்து விளக்கம் கொடுக்குமாறு செயற்குழு உறுப்பினர்கள் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

செப்டம்பர் 13 அன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் அவரிடம் Show Cause Notice-ற்கு விளக்கம் கேட்டபோது “உங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. இதற்கெல்லாம் நான் பொதுக் குழுவில் பதில் சொல்லிக் கொள்கிறேன்…” என்று கூறி அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும்விதமாக பேசிவிட்டு வெளியேறிவிட்டார்.

இதேபோல் அவர் கலந்து கொண்ட கடைசி 5 செயற்குழு கூட்டங்களிலும் கலகம் ஏற்படுத்துவது, மிரட்டுவது, அடிதடிகளில் ஈடுபடுவது மற்றும் சக பெண் உறுப்பினர்களை அவமரியாதையாக பேசுவது போன்ற இழிவான செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்.

இடையில் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சங்கத்தின் லெட்டர் பேடை சங்க அலுவலக மேலாளரிடம் கொடுத்துவிட்டு “இதை என்னைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்க கூடாது…” என்று கட்டளையிட்டு சொன்னதும், அதை சங்கத்து மேலாளர் அப்படியே பின்பற்றியதும் அப்பட்டமான விதி மீறல் ஆகும்.

இவரின் தொடர் நடவடிக்கைகளினால் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் மரியாதை உறுப்பினர்களிடையே குறைய ஆரம்பித்திருக்கிறது. சின்னத்திரை நடிகர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும் மற்ற சங்கங்களுக்கு எங்களது சங்கம் முன் உதாரணமாக இருக்க வேண்டுமென்றும் நாங்கள் ஆசைப்படுகிறோம்.

இதனால் நாங்கள் திரு.ரவிவர்மாவை எங்களது சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதென முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு எடுக்கப்பட்ட இம்முடிவு சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் அனைவரின் நலனுக்காகவும் மற்றும் பாதுகாப்புக்காகவும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேலே கூறப்பட்ட அனைத்து புகார்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது.

நன்றி

இவண்

பொதுச் செயலாளர்,

பொருளாளர்,

உப தலைவர்,

அனைத்து செயற்குழு உறுப்பினர்கள்,

சின்னத்திரை நடிகர் சங்கம்.

Our Score